இன்று வெளியான ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளின் படி, காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர் சுஹைல், வரலாறு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார். விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவைச் சேர்ந்த ஜாஃபர் ஸாதிக் - ஏ.கே.சுலைஹா தம்பதியின் மகன் ஜெ.எஸ்.முஹம்மத் சுஹைல். இவர் காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப்பள்ளியில் பயின்று, இவ்வாண்டு ப்ளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். பொருளியல், வரலாறு பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
வரலாறு பாடத்தில் இவரும், இன்னொரு மாணவியும் மட்டுமே 200 மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், இவர் பெற்ற மொத்த மதிப்பெண்கள் அதிகம் என்பதால், தர வரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
பாட வாரியாக இவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:
தமிழ் 159
ஆங்கிலம் 154
வரலாறு 200
பொருளியல் 200
வணிகவியல் 199
கணக்குப் பதிவியல் 198
மொத்த மதிப்பெண்கள் 1110.
தனது சாதனை குறித்து இம்மாணவர் தெரிவித்துள்ளதாவது:
வரலாறு பாடத்தில் இறையருளால் நான் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்திய என் வரலாற்று ஆசிரியர் ஷெரீஃப் சார், தலைமையாசிரியர் ஷாஹுல் ஹமீத் சார், பள்ளியின் கண்ணியத்திற்குரிய நிர்வாகிகள் அனைவருக்கும், வீட்டில் எனக்கு படிப்பதற்குத் தகுந்த வசதிகளைச் செய்து தந்த என் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கும், உடனிருந்து ஊக்கமளித்த பள்ளித் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்துப் பாடங்களிலும் முழு மதிப்பெண்கள் பெறுவேன் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் மொழிப் பாடங்களில் எதிர்பாராத விதமாக எனது மதிப்பெண்கள் குறைந்துவிட்டது.
நான் இளங்கலை வணிகவியல் (பி.காம்.) படித்துவிட்டு, Chartered Accountant (CA) படிக்க நாட்டம் கொண்டுள்ளேன்.
இவ்வாறு, மாணவர் ஜெ.எஸ்.முஹம்மத் சுஹைல் கூறினார்.
இம்மாணவர், தனது முதல் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ஒருபோதும் டியூஷன் சென்று படித்ததில்லை. பள்ளியில் நடத்தப்படும் பாடங்களை மட்டுமே கவனமாகக் கருத்தில் கொண்டு பயின்றுள்ளார். பள்ளியில் ஒரு வகுப்பில் கூட விடுமுறை எடுக்காமல் வருகைப் பதிவு செய்தவர் என, பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பெருமிதத்துடன் கூறினர்.
இவரது தந்தை, சென்னை சைதாப்பேட்டையிலுள்ள ஒரு பள்ளிவாசலில் (மஸ்ஜிதுல் ஹுதா) இமாமாகப் பணியாற்றி வருகிறார்.
வரலாறு பாடத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இம்மாணவரைப் பாராட்டி, பள்ளி நிர்வாகத்தின் சார்பில் - எம்.ஏ.செய்யித் முஹம்மத் அலீ பணப்பரிசு வழங்கி பாராட்டினார்.
கள உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ |