மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் இன்றைய போட்டியில், சென்னை சிட்டி பொலிஸ் அணி வெற்றி பெற்று காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது. இப்போட்டியில், சென்னை சிட்டி பொலிஸ் அணியும், பெங்களூரு சதர்ன் ப்ளூஸ் அணியும் மோதின.
முதல் பாதியில் ஆட்டம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. எனினும், சென்னை அணியின் கோல் கணக்கு 3ஐத் தாண்டிய பிறகு பெங்களூரு அணியின் வேகம் குறைந்தது. எனினும் ஆட்ட நேர இறுதி வரை சளைக்காமல் விளையாடினர். நிறைவில், 7-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றி பெற்று காலிறுதியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
சென்னை அணிக்காக, கவி பாரதி 3 கோல்களும், சிவா, பரத் கிங்ஸ்லி, சசி குமார், தேவராஜ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். பெங்களூரு அணிக்காக ராஜேஷ் ஒரு கோல் அடித்திருந்தார்.
இன்று வெற்றி பெற்றதன் மூலம் சென்னை அணி, நேற்று நடைபெற்ற துவக்கப் போட்டியில் வெற்றி பெற்ற திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியுடன் முதலாவது காலிறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.
இன்றைய போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ஆர்வலர்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.
இடைவேளையின்போது, அண்மையில் காலமான – ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் கால்பந்து முன்னாள் வீரர் ஜாமிஉல் அக்பர், கைப்பந்து அணி முன்னாள் தலைவர் முஹம்மத் லெப்பை ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் சில வினாடிகள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து இரண்டாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |