நாட்டின் பல பகுதிகளில் வசிக்கும் சிறுபான்மையினர் மனங்களில் அச்சம் உருவாகியிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு அந்த அச்சத்தை போக்கி பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை பா.ஜ.க. அரசுக்கு உண்டு என்று பேசிய இ.அஹ்மத், பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைந்து வருவதையும் சுட்டிக் காட்டினார்.
நாடாளுமன்ற மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதத்தில் உரையாற்றிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹ்மத் பேசியதாவது:-
மேதகு குடியரசுத் தலைவரின் உரை குறித்தும் அவையில் பல்வேறு தரப்பினரும் எழுப்பிய அது குறித்த பல்வேறு கருத்துக்கள் குறித்தும் நாம் இங்கு விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு குறுகிய நேரமே ஒதுக்கப்பட்டிருப்பதால் எனது உரையை சுருக்கமாக முடித்துக்கொள்ள விரும்புகிறேன். என் பேச்சில் இரண்டு மூன்று கருத்துக்களை முன் வைக்கிறேன்.
நாடாளுமன்றத்தில் இ.யூ. முஸ்லிம் லீக்:
1952இலிருந்து நான் சார்ந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இந்த அவையில் இடம் பெற்றுள்ளது. 1952இலிருந்து 2004 வரையில் எதிர்க்கட்சியாக நாங்கள் பணியாற்றி வந்திருக்கிறோம். அதன் பிறகு 10 ஆண்டுகள் ஆளும் கட்சியில் இடம் பெற்றிருந்தோம். ஆனால், எதிர்க்கட்சியாகவே செயல்பட்டிருக்கிறோம். அரசை ஆதரிக்க நேரும்போது ஆதரிக்கிறோம். அரசு எங்கள் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும்போது அதனை எதிர்த்து வந்துள்ளோம்.
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயியின் காலத்தில் தேசிய பாதுகாப்பு, அயல் நாட்டு கொள்கை ஆகியவற்றில் உறுதியான எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு ஆதரித்துள்ளோம். ஆனால், எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்த்து வந்தோம். அதைத் தொடர்ந்து 2004 முதல் 10 ஆண்டுகளுக்கு ஆளும் கூட்டணியில் இருந்து வந்துள்ளோம்.
இந்தக் காலகட்டத்தில் மக்களுக்கு மத்திய அரசு நன்மை செய்யும்போது அதை ஆதரிக்கும் கட்சியாக நாங்கள் பணியாற்றியுள்ளோம். தற்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளோம். இந்த காலகட்டத்தில் உறுதியான எதிர்க்கட்சியாக இயங்குவது எங்கள் கடமை. இந்த விஷயங்களைப் பற்றி விவாதிப்பதற்கு அதிக நேரங்களை எடுத்துக்கொள்ள நாங்கள் விரும்பவில்லை.
சிறுபான்மை சமுதாயத்தின் பிரதிநிதிகள் நாங்கள்:
இந்த நாட்டில் சிறுபான்மையினர் என கருதப்படும் சமுதாயத்தின் பிரதிநிதியாக கடமையை செய்ய வேண்டிய பொறுப்பு என்னுடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உள்ளது என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமுதாயங்களில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஆகவே, முஸ்லிம்களை நாம் தேசிய சிறுபான்மையினராக கருதுகிறோம்.
இந்த சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும். இந்த நாட்டில் அவர்களும் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்பதால் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு பாதுகாப்பு உணர்வை உருவாக்குவதற்கு போதுமான தேவையான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
சிறுபான்மையினரை உள்ளடக்கியதே வளர்ச்சி:
மேதகு குடியரசுத் தலைவர் உரையில், ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த வளர்ச்சி என்றால் சிறுபான்மையினரை உள்ளடக்கிய எல்லா தரப்பு மக்கள் வளர்ச்சியையும் குறிப்பதாகும்.
நாட்டின் பல பகுதிகளில் வசித்து வரும் சிறுபான்மையினர் மனங்களில் இன்று அச்சம் உண்டாகியிருக்கிறது என்பதை இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். பா.ஜ.க. கூட்டணி அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, அடுத்தடுத்து வகுப்புக் கலவரங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன. டெல்லியில் வடகிழக்கு பகுதியில் ஒரு மாணவன் மரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நம்முடைய மாண்புமிகு பிரதமர் பதவியேற்பதற்கு முன்பு, அதனை தேசிய அவமானம் என்று குறிப்பிட்டார். அவரது உணர்வுகளில் நாங்களும் பங்கெடுத்து கொள்கிறோம். அதே நேரத்தில் புனேயில் சில இந்துத்துவா பிரிவினரால் முஹ்ஸீன் ஷேக் என்ற அப்பாவி தொழில்நுட்ப நிபுணர் கொல்லப்பட்டார். இதுவும் நம் நாட்டின் தேசிய அவமானமாகும்.
சர்வதேச ஊடகங்கள் மோசமான விளம்பரத்தை செய்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் ஒடுக்கப்படவேண்டும், கட்டுப்படுத்தப்பட வேண்டும், நிறுத்தப்பட வேண்டும் என்பதை இந்த அரசுக்கு வலியுறுத்தும் வாய்ப்பாகக் கருதுகிறேன்.
அதன் பிறகுதான், எல்லா தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் நாடு இந்தியா என்ற பெருமையை நாம் பெற முடியும். அந்த தொழில்நுட்ப கலைஞர் மீது மிருகத்தனமான தாக்குதல் நடந்துள்ளது. அவர் உயிரிழந்து விட்டார். இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறக்கூடாது.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்:
குறைவாக உள்ள சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை சகித்துக்கொள்ள முடியாது என்ற உடனடி பொறுப்பு நமக்கு தேவையாக உள்ளது.
உலகில் சிறந்த ஜனநாயக நாடு என்ற பெருமை நமது நாட்டில் உள்ளது. மனித உரிமைகளை இந்நாடு மதிக்கிறது. ஐ.நா. சபையின் உறுப்பினராக நம் நாடு இடம் பெற்றுள்ளது. இவை அனைத்தும் நம் நாடு பெற்றுள்ள தகுதிகளாகும். ஆகையால், குறைவான எண்ணிக்கையுள்ள தரப்பினருக்கும், சிறுபான்மையினருக்கும் எதிரான வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்ற உடனடி பொறுப்புணர்வு நமக்கு உள்ளது.
பொதுத்துறை, தனியார் துறைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம்:
பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது என்பதை இந்த பெருமை மிகுந்த அவையின் கவனத்தில் கொண்டு வர விரும்புகிறேன்.
பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளில் மக்கள்தொகையில் 14 சதவீதமாக உள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் போதுமான அளவுக்கு இடம்பெறவில்லை.
நாமெல்லாம் பெருமைபடுகின்ற மிகப் பெரும் சிறுபான்மையினரை உள்ளடக்கிய எல்லா தரப்பு மக்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டிய கடமை ஆளும் அரசுக்கு உள்ளது.
உலகில் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்களை கொண்ட நாடு இந்தியாவாகும். இந்தப் பெருமை வேறு எந்த நாட்டிற்கும் இல்லை. இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். அதே நேரத்தில் முஸ்லிம்களுடைய சட்டரீதியான உண்மைகளும், உரிமைகளும், விருப்பங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
மேலும் ஒரு கருத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குடியரசுத் தலைவர் உரையில் பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. சர்வதேச விவகாரங்களில் பல்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் நமது உறவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வளைகுடா நாடுகளை விட்டுவிட்டது ஏன்?
ஆனால் துரதிருஷ்டவசமாக நாம் மிகவும் நெருக்கமாக உறவு கொண்டுள்ள வளைகுடா நாடுகளை பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை.
அங்கு நம் நாட்டைச் சேர்ந்த 60 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அங்கு பணிபுரிகிறார்கள். அவர்கள் நமது ரத்தமும் - சதையுமாவர். அவர்களுடைய வருமானத்தின் பெரும் பகுதி இந்தியாவுக்கு அனுப்பப்படுகிறது. அந்நிய செலாவணியில் ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கு வளைகுடா நாடுகள் உதவியாக உள்ளன. கடந்த சில தலைமுறைகளாக வளைகுடா நாடுகள் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துள்ளன என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
பொருளாதாரம், பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பல்வேறு துறைகளில் பல நாடுகளுடன் நாம் தொழில்நுட்ப ரீதியாக பங்கு பெற்று வருகிறோம். இந்த நாடுகளின் வளர்ச்சி இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அளவிற்கு இந்நாடுகளுடன் நாம் ஆழமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். உயர்மட்ட பரிமாற்றங்களில் பொருளாதார பரிமாற்றங்கள், உறுதியான பாதுகாப்பு, பேச்சுவார்த்தைகள், மக்களுக்கிடையேயான பரிமாற்றங்களின் மேம்பாடு ஆகியவற்றை இந்நாடுகளுடன் நாம் பராமரித்து வருகிறோம்.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியத்தைப் பற்றி குடியரசுத் தலைவர் உரையில் ஒரு சொல் கூட இடம் பெறவில்லை என்பதை வருத்தத்துடன் கூற விரும்புகிறேன்.
வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் ஒரு நல்ல விஷயத்தைக் குறிப்பிட்டுள்ளார் என்பதை வெளிப்படையாக எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
இந்த அரசு 8 முதல் 11 அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறோம். இதைப்பற்றிப் பேசினால் மட்டும் போதாது. குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிட்டிருந்தால் மட்டும் போதாது. இந்த முன்னுரிமைகள் அமல்படுத்தப்பட்டால் நாங்கள் முழு மகிழ்ச்சியடைவோம்.
இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ.அஹ்மத் பேசியுள்ளார். |