காயல்பட்டினம் நகராட்சியின் 17ஆவது வார்டுக்குட்பட்ட காட்டு தைக்கா தெரு தருவை பகுதியில், குடிநீர் கேட்டு இன்று காலை 07.00 மணியளவில் பொதுமக்கள் வெற்றுக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
நகராட்சியின் சார்பில் குடிநீர் வினியோகிக்கப்பட்டும், குடியிருப்போர் பலர் மின் மோட்டார்களை வைத்து குடிநீரை உறிஞ்சுவதால், மற்றவர்களுக்கு சிறிதளவு கூட தண்ணீர் கிடைப்பதில்லை என்றும், இது நீண்ட காலமாக நடந்து வருகிறது என்றும் கூறிய பொதுமக்கள், தங்கள் பகுதி சாலையில் வெற்றுக்குடங்களை வைத்து மறைத்து, நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர்மன்ற அங்கத்தினர் வந்து இப்பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் வரை, இப்பகுதி வழியே எந்த வாகனமும் செல்லக் கூடாது என்று கூறி மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் கிடைக்கப் பெற்றதும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி குடிநீர் வினியோகக் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்டோர் நிகழ்விடம் வந்தனர்.
ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் முத்து சுப்பிரமணியன், காவல்துறை அதிகாரி ரகு ஆகியோரும் நிகழ்விடம் வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர்.
மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த நகர்மன்றத் தலைவர், “நகராட்சியிலிருந்து குடிநீர் வினியோகிக்கப்பட்டும், பொதுமக்களுக்கு அது கிடைக்காதிருக்கிறது என்றால், அதைத் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை... நகராட்சி அதிகாரிகளும், அனைத்து உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பளித்தால், நகரில் மின் மோட்டார் வைத்து குடிநீரை உறிஞ்சும் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்களின் மின் மோட்டார் கருவிகளையும் பறிமுதல் செய்ய ஆவன செய்யப்படும்” என்று கூறிச் சென்றார்.
17ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஏ.ஏ.அபூபக்கர் அஜ்வாத், 16ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
களத்தொகுப்பு & படங்கள்:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல் |