நடைபெற்று முடிந்த 10ஆம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) அரசுப் பொதுத்தேர்வில், காயல்பட்டினம் அரசு மகளிர் மேனிலைப்பள்ளியின் மாணவி பெ.இசக்கியம்மாள், 500க்கு 490 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவர், காயல்பட்டினம் ஓடக்கரையைச் சேர்ந்த பெரியசாமி - பேச்சியம்மாள் தம்பதியின் மகளாவார்.
மாணவியின் இச்சாதனையை முன்னிட்டு, அவர் துவக்கக் கல்வி பயின்ற - ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சார்பில், பள்ளி வளாகத்தில் இன்று (ஜூன் 12) 16.00 மணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி மாணவர்களின் இறைவணக்கப் பாடலுடன் விழா துவங்கியது.
பள்ளி தலைமையாசிரியை ப.சிலுவை மேரி திரேஸா விழா அறிமுகவுரையாற்றினார். காயல்பட்டினம் சமூக ஆர்வலர்களான ஜெ.ஏ.லரீஃப், எஸ்.கே.ஸாலிஹ் ஆகியோர் சாதனை மாணவியை வாழ்த்திப் பேசியதுடன், அரசுப் பள்ளியில் கல்வி பயில வேண்டியதன் அவசியம் - மகத்துவம் குறித்து பள்ளியின் நடப்பு மாணவ-மாணவியருக்கும், பெற்றோருக்கும் அறிவுரை வழங்கினர்.
ஓடக்கரையைச் சேர்ந்த தொழிலதிபர் என்.சீதாபதியின் அனுசரணையில், அவரது தாயார் என்.அருணாச்சலக்கனி அம்மாள் – பள்ளியின் 03 முதல் 05ஆம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவியருக்கு ஆங்கில சிற்றகராதி நூலைப் பரிசாக வழங்கியதோடு, சாதனை மாணவி பெ.இசக்கியம்மாளுக்கு ரூபாய் 3 ஆயிரம் பணப்பரிசும் வழங்கினார்.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் வாழ்த்துரை வழங்கியதுடன், சாதனை மாணவிக்கு, “சாதிக்க ஆசைப்படு” எனும் தலைப்பிலான நூலைப் பரிசாக வழங்கினார்.
இவ்விழாவில், ஓடக்கரை பகுதி பிரமுகர்களான ஏ.பண்டாரம், கே.அன்புராஜ், இ.ஞானராஜ், டி.செல்வராஜ், கே.காளிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ-மாணவியர், அவர்கள்தம் பெற்றோர் பார்வையாளர்களாகக் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை, பள்ளியின் ஆசிரியையரான சு.ப.ஏஞ்சல் ரூபி, சகாய ரோஸ்லின் திவ்யா உள்ளிட்டோரடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
ஓடக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் சுற்றுச்சுவர் - நிதி பற்றாக்குறை காரணமாக அரைகுறையாக நிறுத்தப்பட்டு, பாதுகாப்பின்றி இருந்ததும், தொழிலதிபர் என்.சீதாபதி தன் சொந்தச் செலவில் வழங்கிய சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயைக் கொண்டு நிலுவைப்பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. |