காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், 27 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் சார்பில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள 27 பயனாளிகளுக்கு ரூபாய் 1 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் கடந்த ஜூன் 04, 2014 புதன்கிழமையன்று வழங்கப்பட்டுள்ளது.
மாவரைக்கும் இயந்திரங்கள் (க்ரைண்டர்), தையல் இயந்திரங்கள், ஒவன், இட்லி சட்டி ஆகிய பொருட்கள் 26 நபர்களுக்கும், கணினி வாங்குவதற்கு விண்ணப்பித்திருந்த பயனாளி ஒருவருக்கு பண உதவியும் வழங்கப்பட்டுள்ளது. (அல்ஹம்து லில்லாஹ்).
உதவிகள் கோரி மன்றத்திற்கு மனு அளிக்கும் விண்ணப்பதாரர்களை விசாரணை செய்து, பரிந்துரை அறிக்கையை முறைப்படி அளித்து வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு, இஸ்லாமிய சகோதரத்துவ இணையம் (ஐ.ஐ.எம்.) ஆகிய அமைப்புகளுக்கும், மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித், காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் தலைவர் கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை, துணைத் தலைவர் இப்ராஹிம் மக்கீ உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், சமூக ஆர்வலரும் - காயல்பட்டினம் நகர்மன்றத்தின் முன்னாள் உறுப்பினருமான கிதுரு ஃபாத்திமா அவர்களுக்கும் அமைப்பின் சார்பில் உளமார நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்
இதுபோன்ற அனைத்து செயல்பாடுகளுக்கும் முதுகெலும்பாக உள்ள நிதியாதாரத்தைத் தந்துதவிக்கொண்டிருக்கும் எம் பேரவை அங்கத்தினர் அனைவருக்கும் அமைப்பின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் நமது நற்காரியங்கள் அனைத்தையும் ஏற்று, இம்மை - மறுமையில் நிறைவான நற்கூலிகளை நமக்கு வழங்கியருள்வானாக.
6ஆவது பொதுக்குழு அழைப்பு!
இறையருளால் நம் மன்றத்தின் 6ஆவது பொதுக்குழு, இன்ஷாஅல்லாஹ் இம்மாதம் 14ஆம் நாள் சனிக்கிழமை இரவு மஃரிப் தொழுகைக்குப் பின், ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில் நடைபெறவிருக்கிறது.
இக்கூட்டத்தில், நமதமைப்பின் அன்பு உறுப்பினர்கள் மற்றும் ஹாங்காங் - சீனா - மக்காவ் வாழ் காயலர்கள் தயவுகூர்ந்து உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி கலந்துகொள்ள வருமாறு அகமகிழ அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
காயல்பட்டினம் ஐக்கிய பேரவை - ஹாங்காங் சார்பாக
ஹாஃபிழ் ஏ.எல்.இர்ஷாத் அலீ
(துணைச் செயலாளர்)
காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |