காயல்பட்டினத்தில் 90 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குப்பைகளை சுத்திகரிக்க பயோ காஸ் திட்டம் அமைக்க தமிழக
அரசு அனுமதி வழங்கியிருந்தது. மேலும் - இத்திட்டம் குறித்த அறிவிப்பு,
2013-14 நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டிலும், முதலமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டது.
துவக்கமாக 5 மெட்ரிக் டன் கொள்ளளவில் உருவாக்காப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட இத்திட்டம், நகரில்
உருவாகும் குப்பைகளின் கொள்ளளவைக் கருத்தில் கொண்டு, பின்னர் 1 அல்லது 3 மெட்ரிக் டன் கொள்ளளவில்
அமல்படுத்தப்படும் என மாற்றப்பட்டதாகத் தெரிகிறது.
இத்திட்டத்திற்குத் தேவையென கருதப்படும் சுமார் 20 சென்ட் அளவிலான நிலம் நகரில் பல இடங்களில் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. பல மாதங்களாக - பல்வேறு
காரணங்களுக்காக நிலுவையில் உள்ள இத்திட்டம் குறித்து கலந்தாலோசனை செய்ய - சனிக்கிழமை அன்று
(ஜூன் 07), திருநெல்வேலியில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குநர் அலுவலகத்தில் -
கூட்டம் நடைபெற்றது.
நகராட்சி நிர்வாகத்துறையின்
மண்டல இயக்குனர் சீனி அஜ்மல் கான், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக், நகராட்சி ஆணையர்
ம.காந்திராஜ் ஆகியோரும், (04ஆவது வார்டு உறுப்பினர் ஏ.டி.முத்து ஹாஜரா, 05ஆவது வார்டு உறுப்பினர்
எம்.ஜஹாங்கீர், 09ஆவது வார்டு உறுப்பினர் ஏ.ஹைரிய்யா, 10ஆவது வார்டு உறுப்பினர் எஸ்.எம்.பி.பத்ருல் ஹக்
ஆகியோரைத் தவிர்த்து) 13 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட, காயல்பட்டினம் தென்பாக கிராமம் சர்வே எண்
392/5 இடத்தில இத்திட்டம் கொண்டு வர, பெருவாரியான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகத் தெரிகிறது.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் - நகரில் உருவாகும் குப்பைகளைக்
கொட்ட - குறைந்த விலைக்கு தருவதாக அக்டோபர் 2009இல் ஒப்புக்கொண்ட - சர்வே எண் 278 இடத்தில்,
இத்திட்டம் அமைந்திட தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
392/5 இடம் - மயான இடம் என்று 18ஆவது வார்டு உறுப்பினர் இ.எம். சாமியும், பள்ளிக்கூடத்திற்கு அருகில்
உள்ள இடம் என்று 15ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜமாலும் கூறி வருகின்றனர்.
சுமார் 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நகராட்சிக்கு பாத்தியப்பட்ட சர்வே எண் 392/5 இடத்தில, பல
ஆண்டுகளுக்கு முன் சுமார் 5 ஏக்கர் இடத்தை மயானத்திற்கு ஒதுக்கியும், மீதி 2.5 ஏக்கர் இடத்தில் குப்பைகள்
கொட்டவும் - அப்போதைய காயல்பட்டினம் உள்ளாட்சி அமைப்பால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
மேலும் - இவ்விடத்திற்கு (392/5) அருகில் உள்ள பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியை, இந்த இடத்தில்
இத்திட்டம் அமைந்திட, பள்ளிக்கூடம் சார்பாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கப்படவில்லை என்றும்
காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் சில நாட்களுக்கு முன் தெரிவித்தார் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
இது தவிர - 392/5 சர்வே எண் இடத்தில பயோ காஸ் திட்டம் அமைந்திட எதிர்ப்பு தெரிவிக்கும் 18வது வார்டு
உறுப்பினர் இ.எம்.சாமியின் குடும்பத்தினருக்கு பாத்தியப்பட்ட - சர்ச்சைக்குரிய சர்வே எண் 420 இடம், தற்போது
திட்டத்திற்கு பரிசீலிக்கப்படும் 392/5 இடத்திற்கு அடுத்தாற்போல் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் தருவதாகக் கூறிய இடம், CRZ விதிமுறைகள் படி சிக்கல்கள் உள்ள இடம் என பல ஆண்டுகளுக்கு முன்னரே - நகராட்சிக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் - சனிக்கிழமை அன்று நடந்த கூட்டத்தில் நகர்மன்றத் தலைவரால்
மீண்டும் நினைவு கூறப்பட்டத்தாகவும், அப்படியானால் அவ்விடத்தைப் பிரித்து (SUB-DIVISION)
முயற்சி செய்யலாம் என உறுப்பினர்கள் அப்போது பதில் கூறியதாகவும் தெரிகிறது.
குப்பைகள் கொட்ட தேர்வு செய்யப்படும் இடத்தைச் சுற்றி 200 மீட்டர் தூரத்திற்கு No Development Zone (5 ஏக்கர்
ஒதுக்கப்படும் இடத்தில - கூடுதலாக சுமார் 20 ஏக்கர்) அறிவிக்கப்பட வேண்டும் என விதிகள் கூறுவதாக
நகர்மன்றத் தலைவராலும், மண்டல இயக்குநராலும் அப்போது தெரிவிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இச்சிக்கல்களுக்கு முடிவு காண பல மாதங்கள் ஆகும் என்றும், பயோ காஸ் திட்டத்திற்கான இடம் உடனடியாக
தெரிவிக்கப்படவேண்டும் என்றும், மேலும் காலம் தாழ்த்தினால் இத்திட்டம் - காயல்பட்டினம்
நகராட்சியிடமிருந்து திரும்பப் பெறப்படும் என்றும் அப்போது மண்டல இயக்குநர் தெரிவித்ததாகத்
தெரிகிறது.
அதற்கு பதில் கூறிய பல உறுப்பினர்கள், திட்டம் திரும்பி செல்லட்டும் என கூறவே, மண்டல இயக்குநர்,
அவ்வாறே - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஆணையருக்கு, நகராட்சி சார்பாக கடிதம் அனுப்ப,
காயல்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் கூறியதாகவும் தெரிகிறது.
விபரீதம் அறியாமல் DCW தொழிற்சாலையை காயல்பட்டினம் மக்கள் பல ஆண்டுகளுக்கு முன்னர்
அனுமதித்ததாகவும், அது தற்போது சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஏற்படுத்தி வருவதாகவும், அது போலவே இந்த
பயோ காஸ் திட்டமும் உள்ளது என்றும் உறுப்பினர் ஒருவர் அக்கூட்டத்தில் கூறியதாகத் தெரிகிறது.
அதற்கு பதில் கூறிய மண்டல இயக்குநர், தொழிற்சாலைகளினால் ஏற்படும் பிரச்சனைகளுடன் - பயோ காஸ்
திட்டத்தை இணைத்துப் பார்ப்பது சரியில்லை என்றும், தெளிவு பெற நகர்மன்ற அங்கத்தினர், இத்திட்டம்
அமலில் உள்ள ஆற்காடு போன்ற நகராட்சிகளுக்குச் சென்று கண்டு வரலாம் என்றும், அதற்கான செலவை
நகராட்சியே பொறுப்பேற்கலாம் என்றும் கூறியதாகவும் தெரிகிறது.
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் - பல அரசு புறம்போக்கு
நிலங்கள் உள்ளன. அதில் நகராட்சிக்கு பாத்தியப்பட்ட இடங்களும் பல. அவற்றில் - இத்திட்டத்தினை
அமல்படுத்த பரிசீலனை செய்யப்படும்போது எல்லாம், அருகாமையில் உள்ள மக்களை - இத்திட்டத்தினை எதிர்க்க
ஒரு சிலர், திட்டமிட்டு தூண்டி வருவதாக - காயலப்ட்டினம் நகராட்சியின் அங்கமான ஒருவர்,
காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார்.
உதாரணமாக - சப் ஸ்டேஷன் அமைந்துள்ள பகுதியில் அரசு புறம்போக்கு இடம் உள்ளதாகவும், அந்த இடத்தில்
இத்திட்டம் அமைத்திட பரிசீலனை செய்யப்பட்டபோது, அந்த இடத்தில் அத்திட்டம் அமைந்திட எதிர்ப்பு
தெரிவிக்கும்படி, அப்பகுதியின் முக்கிய பிரமுகர் ஒருவர் அறிவுறுத்தப்பட்டதாகவும் - மேலும் அவர்
காயல்பட்டணம்.காம் இணையதளத்திடம் தெரிவித்தார். |