DCW ஆலையின் விரிவாக்கத்திற்கு அரசு அனுமதியளித்துள்ளதைக் கண்டித்து, இம்மாதம் 20ஆம் நாளன்று
மனித சங்கிலி போராட்டம் நடத்தவும், அன்றிரவு விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்தவும், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அனைத்து ஜமாஅத், பொதுநல அமைப்புகள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலையால் சுற்றுச்சூழலுக்கும், பொதுமக்களின் உடல் நலனுக்கும், உயிருக்கும் பெரும் பாதிப்புகள் உள்ளதாக அஞ்சப்பட்டு, அக்குறைகளைக் களைந்திட அரசுத் துறைகளுக்கு ஏராளமான கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்ட நிலையில், பொதுமக்களின் எதிர்ப்பு உணர்வுகளுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல், அந்த ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அரசு அனுமதியளித்துள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிப்பதற்காக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA சார்பில், நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகளின் கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 02ஆம் நாள் திங்கட்கிழமை 17.30 மணியளவில், காயல்பட்டினம் கீழ நெய்னார் தெருவிலுள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில், KEPA தலைவர் ஹாஜி
எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா தலைமையில் நடைபெற்றது.
காயல்பட்டினம் பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் தலைவர் ஹாஜி ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர், நகரப் பிரமுகர் ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி, KEPA துணைத்தலைவர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த செயல்திட்ட முன்வடிவை, KEPA இணைச் செயலாளர் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ், அதன் செயற்குழு உறுப்பினர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் ஆகியோர் கூட்டத்தில் விளக்கிப் பேசினர்.
அதுகுறித்து, கூட்டத்தில் பங்கேற்றோர் பல்வேறு ஆலோசனைகளை கருத்துப் பரிமாற்ற நேரத்தின்போது பதிவு செய்தனர்.
நிறைவில், பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - DCW ஆலை விரிவாக்க அனுமதிக்குக் கண்டனம்:
பொதுமக்களின் எதிர்ப்புகளை சிறிதும் மதிக்காமல், DCW தொழிற்சாலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அரசு
அனுமதி வழங்கியுள்ளதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - மனித சங்கிலி போராட்டம்:
DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அரசு அனுமதியளித்துள்ளதைக் கண்டித்தும், அந்த அனுமதியை
ரத்து செய்யக் கோரியும், காயல்பட்டினம் நகரின் அனைத்து பொதுமக்களையும் திரட்டி, 20.06.2014
வெள்ளிக்கிழமையன்று 16.30 மணிக்கு, காயல்பட்டினம் தாயிம்பள்ளி சந்திப்பிலிருந்து, பேருந்து நிலையம் வரை
மனித சங்கிலி போராட்டம் நடத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - விழிப்புணர்வு பொதுக்கூட்டம்:
DCW ஆலையின் நடப்பு உற்பத்தியால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், உற்பத்தி விரிவாக்கப்பட்டால் எதிர்பார்க்கப்படும்
தீய விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்காக, 20.06.2014 வெள்ளிக்கிழமையன்று 19.00 மணி
முதல் 21.30 மணி வரை, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்திட
இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 - அஞ்சல் அட்டை மூலம் அரசுக்குக் கோரிக்கை:
பொதுமக்களின் உடல் நலனுக்கும், உயிருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் DCW தொழிற்சாலையை
நிரந்தரமாக மூடக் கோரி, அஞ்சல் அட்டை மூலம் பொதுமக்கள் கோரிக்கைகளை அனுப்பத் தேவையான
அனைத்து ஒருங்கிணைப்புப் பணிகளையும் செய்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - கருப்புக் கொடி போராட்டம்:
DCW ஆலையின் விரிவாக்கத்திற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, காயல்பட்டினத்தின் அனைத்து
முக்கிய வீதிகளிலும், இல்லங்களிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துவது என இக்கூட்டம்
தீர்மானிக்கிறது.
தீர்மானம் 6 - வாகன பரப்புரை:
மனித சங்கிலி போராட்டம், விழிப்புணர்வு பொதுக்கூட்டம், அஞ்சல் அட்டை மூலம் அரசுக்கு கோரிக்கை
அனுப்பல், கருப்புக் கொடி போராட்டம் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்புச் செய்வதற்காக வாகன
பரப்புரை செய்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
KEPA இணைச் செயலாளர் ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ நன்றி கூற, துஆ, ஸலவாத், கஃப்பாராவுடன்
கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |