காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் DCW தொழிற்சாலை மற்றும் அதன் சார்பு நிறுவனங்களுடன் இணைந்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டாம் என காயல்பட்டினம் நகரின் பொதுநல அமைப்புகளுக்கு காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
காயல்பட்டினம் நகரில் செயல்பட்டு வரும் பொது நல அமைப்புகளின் பெருமதிப்பிற்குரிய நிர்வாகிகள் மற்றும் அங்கத்தினருக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...
ஆலைக்கெதிரான போராட்டம்:
காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள DCW தொழிற்சாலையின் மாசு காரணமாக நம் மக்களின் உடல் நலமும், நம் பகுதியின் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டுள்ளதையும், அதனைக் கண்டித்தும், இத்தொழிற்சாலையின் உற்பத்தி விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு அனுமதியளித்துள்ளதை எதிர்த்தும், நம் நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக்கமிட்டிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் சில மாதங்களாக நாம் போராடி வருவதையும் தாங்கள் நன்கறிவீர்கள்.
முக்கிய கோரிக்கை:
நம் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று, சுதந்திரமாக செயல்படக்கூடிய - தரமான அமைப்பின் மூலம், காயல்பட்டினம் உட்பட - இத்தொழிற்சாலையை ஒட்டியுள்ள அனைத்து ஊர்களிலுமுள்ள பொதுமக்களின் உடல் நல பாதிப்புகள் குறித்து ஆய்வுகளை மேற்கொள்வதாகும்.
அடையாறு புற்றுநோய் மையம் இசைவு:
இக்கோரிக்கையின் ஓர் அம்சமாக - புற்றுநோய்கள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள கடந்தாண்டு (2013) மார்ச் மாதம், சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய் மையம் தனது சம்மதத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்துள்ளது.
DCW ஆலையின் இருட்டடிப்பு:
ஆனால், DCW தொழிற்சாலை இந்த உண்மையை மறைத்து, ஆய்வுகள் மேற்கொள்ள தான் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் மையம் மற்றும் வேலூரிலுள்ள CMC ஆகிய மருத்துவ நிறுவனங்களை அணுகியதாகவும், தங்களிடம் போதிய ஆட்கள் இல்லாத காரணத்தால் இந்த ஆய்வுகளை மேற்கொள்ள இயலாது என அந்நிறுவனங்கள் கூறிவிட்டதாகவும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்து, பொதுமக்களாகிய நம்மைப் பாதிக்கும் தனது திட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி பெற்று வருகிறது.
பொதுநல அமைப்புகள், பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
சுதந்திரமாக இயங்கும் அமைப்புகளைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ள ஆயத்தமாக இல்லாத DCW தொழிற்சாலை, சில அமைப்புகளைக் கொண்டு காயல்பட்டினத்தில் மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிட்டுள்ளதாக, காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA அறிகிறது.
இந்த முகாம்கள், DCW தொழிற்சாலையின் பெயரிலோ, சாகுபுரம் அரிமா சங்கம் என்ற பெயரிலோ அல்லது வேறு பெயர்களிலோ நடத்தப்படலாம்.
நம் நகரில் பொதுமக்கள் சேவைக்காக இயங்கி வரும் பொதுநல அமைப்புகள், இதுபோன்ற முகாம்களை நடத்திட துணை நிற்க வேண்டாம் என - மக்கள் நலன் கருதி மிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதுபோல, பின்னணி அறிய முடியாத எந்த மருத்துவ முகாம்களிலும் பயனாளிகளாகக் கலந்துகொள்ள வேண்டாம் என பொதுமக்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |