மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் – இறுதிப்போட்டியில், காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணி போராடித் தோற்றது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இறுதிப்போட்டி:
இச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, 25.05.2014 புதன்கிழமையன்று நடைபெற்றது. இப்போட்டியில் – மே 23ஆம் நாளன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும், மே 24ஆம் நாளன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியும் மோதின.
ஈரணியினரும் மிகுந்த உற்சாகத்துடன் விளையாடி, ரசிகர்கள் கண்களுக்கு துவக்கம் முதல் இறுதி வரை விருந்து படைத்தனர்.
காயலர்கள் தடுப்பாட்டம்! கேரளத்தினர் பேராட்டம்!!
கேரள அணியினர் ஒருபுறம் கோல் அடிக்க முழு முயற்சிகள் எடுத்துக்கொண்டிருந்த நிலையில், பலமிக்க அவ்வணிக்கு ஈடுகொடுத்த ஐக்கிய விளையாட்டு சங்க அணியினர் தடுப்பாட்டத்தில் வலிமை காட்டினர். ஆட்ட நிறைவு வரை எந்த அணியும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கோல் கணக்கில் போட்டி சமனில் முடிவுற்றது.
score
பின்னர் சமனுடைப்பு முறையில், 4-3 என்ற கோல் கணக்கில் கேரளா பொலிஸ் - மலப்புரம் அணி வெற்றிபெற்றது.
பெருந்திரளாக ரசிகர்கள்...
இறுதிப் போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் பெருந்திளராக வந்திருந்தனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என மைதானமே அமர்க்களப்பட்டது. சற்று தாமதமாக வந்தவர்களுக்கு பார்வையாளர் இருக்கையில் அமர இடம் கிடைக்கவில்லை. எனவே, பெரும்பாலோர் நின்ற நிலையில் ஆட்டத்தைக் கண்டுகளித்தனர்.
இடைவேளை நிகழ்ச்சிகள்:
இறுதிப்போட்டியில், தமிழ்நாடு கால்பந்துக் கழக தலைவர் க்ளைட்டஸ் பாபு, அதன் செயலாளர் ரவிகுமார் டேவிட், ஆச்சி மசாலா நிறுவன அதிபரும் - நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஏ.டி.கே.ஜெயசீலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்களுக்கு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டதோடு, ஈரணி வீரர்கள் மற்றும் நடுவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
intro grp 1000
இறுதிப்போட்டியில் பங்கேற்கும் ஈரணி வீரர்களும் தமக்குள் மாலை மாற்றிக்கொள்வது ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டியின் மரபாகும். அதனடிப்படையில், ஈரணி வீரர்களும் தமக்குள் மாலைகளை மாற்றிக்கொண்டனர். பின்னர், அவரவர் கழுத்துகளிலிருந்த மாலைகளை அவர்கள் ரசிகர்களை நோக்கி வீசி உற்சாகப்படுத்தினர்.
பரிசளிப்பு விழா:
அன்று 19.00 மணிக்கு பரிசளிப்பு விழா துவங்கியது. ஐக்கிய விளையாட்டு சங்க தலைவர் பி.எஸ்.ஏ.பல்லாக் லெப்பை தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக தலைவர் ஸ்ரீதர் ரோட்ரிகோ, நெல்லை மாவட்ட கால்பந்துக் கழக செயலாளர் நோபில் ராஜன், ஐக்கிய விளையாட்டு சங்க நிர்வாகிகளான பி.எஸ்.எம்.இல்யாஸ், எஸ்.ஏ.முஸ்தஃபா, டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப், பீர் முஹம்மத், எஸ்.எம்.ரஃபீ அஹ்மத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் முன்னிலை வகித்தனர். சுற்றுப்போட்டிக் குழு செயலாளர் பல்லாக் அப்துல் காதிர் நெய்னா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் இறைமறை குர்ஆன் வசனங்களையோதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். ஐக்கிய விளையாட்டு சங்க துணைச் செயலாளர் எஸ்.எம்.உஸைர் வரவேற்றுப் பேசினார்.
பின்னர் சிறப்பு விருந்தினர்களும, வெற்றி பெற்ற - இரண்டாமிடம் பெற்ற அணிகளின் பயிற்சியாளர்களும், இறுதிப்போட்டியின் மற்றொரு சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் தலைமை மருத்துவர் எட்வின் ஜோ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் பரிசளிப்பு நிகழ்ச்சி துவங்கியது. இறுதிப்போட்டியில் பங்கேற்ற ஈரணி வீரர்களுக்கும், நடுவர்களுக்கும், பால் பாய்ஸ் சிறுவர்களுக்கும் தனிப்பரிசு வழங்கப்பட்டது.
தொடரின் சிறந்த வீரர்களுக்கு, ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் வீரர்களான மர்ஹூம் கத்தீப் ஹாமித், மர்ஹூம் எம்.அல்தாஃப், ஐக்கிய விளையாட்டு சங்க முன்னாள் தலைவர் மர்ஹூம் எல்.கனீ ஆகியோர் நினைவாக பரிசுகள் வழங்கப்பட்டன.
பின்னர், இரண்டாமிடம் பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணிக்கு கோப்பையும், ரூபாய் 30 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
நிறைவாக, வெற்றி பெற்ற கேரளா பொலிஸ் - மலப்புரம் அணிக்கு மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பையும், ரூபாய் 50 ஆயிரம் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
நன்றியுரை, துஆ, நாட்டுப்பண்ணுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது.
பரிசளிப்பு விழாவை முன்னிட்டு - ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வழமை போல பேண்டு வாத்தியம், வான வேடிக்கை உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இறுதிப்போட்டி நாளான மே 25ஆம் நாளன்று காலையில், சுழற்கோப்பைகளை வாகனங்களில் காட்சிப்படுத்தி, பாண்டு வாத்தியம் முழங்க நகர் முழுக்க ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழா குறித்த தகவல்களடங்கிய செய்திகளை பின்வரும் இணைப்புகளில் சொடுக்கிக் காணலாம்.
(1) இறுதிப் போட்டி
(2) பரிசளிப்பு விழா |