காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டரின் 17ஆம் ஆண்டு வருடாந்திர விழா, ”அழகிய வாழ்வு பெற” என்ற தலைப்பில் இம்மாதம் 08ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை 17.00 மணியளவில், காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள தஃவா சென்டர் வளாக முன்புறத்தில் நடைபெற்றது.
ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் விழாவிற்குத் தலைமை தாங்கி தலைமையுரையாற்றினார். தஃவா சென்டர் பொருளாளர் ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஸ் முன்னிலை வகித்தார்.
தஃவா சென்டர் தலைவர் எம்.ஏ.புகாரீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தஃவா சென்டர் நடத்தும் புனித குர்ஆன் கல்லூரியின் முதன்மை ஆசிரியர் மவ்லவீ எஸ்.ஐ.ஷேக் அலீ ஃபிர்தவ்ஸீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.
இவ்விழாவில், இஸ்லாமைத் தாமாக முன்வந்து தம் வாழ்வியலாக்கிக் கொண்டுள்ள - தஃவா சென்டரின் புனித குர்ஆன் கல்லூரி மாணவ-மாணவியர் தமது அனுவங்களை உரைகளாக அளித்தனர். பின்னர் பல்வேறு கருத்துக்களைப் பொதிந்த குறுநாடகங்களையும் அவர்கள் நடத்திக் காண்பித்தனர்.
இவ்விழாவில், இஸ்லாமிய அழைப்பாளரும் – பொறியாளருமான சுரேஷ் பாபு என்ற அப்துர் ரஹீம் ஸாலிஹ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு “என்னைக் கவர்ந்த இஸ்லாம்” எனும் தலைப்பில் சிறப்பரையாற்றினார்.
இவ்விழாவில், உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு, அசைபட விரிதிரை (Projector) வசதியுடன் தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முஸ்லிமல்லாத மக்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம், பல்வேறு தலைப்புகளிலான இஸ்லாமிய நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
தஃவா சென்டர் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |