காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற
வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.
இது குறித்து, கோமான் ஜமாஅத் தலைவர் பெயரில் வெளியாகியுள்ள அறிக்கை வருமாறு:
காயல்பட்டினம் நகரமன்றத் தலைவர் சகோதரி I.ஆபிதா சேக் அவர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.
18-9-2014 அன்று நடைபெற உள்ள, நகர்மன்ற ஒன்றாவது வார்டுக்கான தேர்தல் களத்தில், தங்களின் தவறான ஈடுபாட்டை அறிந்து எங்கள் கோமான் ஜமாத்தினர் மிகவும் வருத்தம் அடைந்துள்ளோம்.
சுயேட்சைகள் மட்டுமே போட்டி இடவேண்டிய இத்தேர்தலை, அரசியல் தேர்தல் களமாக நீங்கள்தான், உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி மாற்றி உள்ளீர்கள் என்பதை, நாங்கள் மிக தெளிவாக தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தோம்.
நீங்கள் அருணாச்சலபுரத்தில் வாக்கு கேட்டதை நாங்கள் அறிய வந்தபோது, மேற்கண்ட தகவல் உண்மைதான் என்பதை உறுதிபடுத்திக் கொண்டோம்.
எனக்கு ஆதரவாக எந்த பெண்ணும் நகராட்சியில் இல்லை, எனவே இந்த பெண் வேட்பாளரை வெற்றி பெற செய்யுங்கள் என்றும், அதுவும் எனக்கு வாக்களித்ததை போல் வெற்றி பெற செய்யுங்கள் என்றும் பெண்கள் இடத்தில் வாக்கு சேகரித்துள்ளீகள்.
மேலும், அதிமுக அல்லாத கட்சிக்காரர்களிடம் வாக்கு கேட்கும் போது, கட்சியை மறந்து இருவரில் நல்லவரான, அ தி மு க வேட்பாளரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றும் கேட்டுள்ளீர்கள்.
அரசியல் கட்சியில் அங்கம்வகிக்கும் முதிர்ச்சி அடைந்தவர்களிடம் கூட இல்லாத சூது, வாது நிறைந்த அணுகுமுறை அல்லவா இது?
ஒரு குறிப்பிட்ட கட்சிக்காரரிடம் நீங்கள் வாக்குக் கேட்கும் போது, உங்களோடு வந்தவர் பல லகரங்கள் வரை நாங்கள் செலவு செய்து வெற்றி பெறுவோம் என, ஆணவத்தோடு சொன்ன போது, நீங்கள் மறுப்பு தெரிவிக்கவில்லையாம். அப்படியெனில் என்ன செய்யப் போகிறிர்கள்?
வேட்பு மனு பரிசீலனையின் போது, எங்கள் கோமான் ஜமாத் வேட்பாளருக்கு இரண்டு வாக்குகள் இருப்பதாகவும், எனவே அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அ தி மு க வேட்பாளர் வழக்கறிஞரை வைத்து ஆட்சேபனை செய்த போது, அதற்கான வாதம் நடைபெற்றது .
அப்போது ஆணையரால் வழங்கபட்ட அவகாச நேரத்தில், ஆட்டோவில் தாங்கள் வீட்டுக்கு சென்று, விதிமுறைகள் புத்தகத்தை எடுத்து வந்து வக்கீலிடம் கொடுத்தீர்களே! ஏன் இவ்வளவு ஆத்திரம் எங்கள் மீது?
பிறகு வட்டாட்சியரிடம் உரிய சான்றிதழை நாங்கள் பெற்று ஆணையரிடத்தில் வழங்கி, எங்கள் வேட்பாளர் மனுவும் ஏற்கப்பட்ட பிறகு, 3 மணி அளவில் நகராட்சியில் ஐவரின் மனுவும் ஏற்கப்பட்டதாக அறிவிக்கை செய்யப்பட்ட பின்பும், நீங்கள் அமைதி அடையவில்லையே!
மாலை 6 மணிக்கு மூவருடன் திருச்செந்தூர் சென்று, வட்டாட்சியர் அலுவலகத்தை வம்புக்கு இழுத்து, எப்படி சான்று வழங்கலாம் என சண்டையிட்டு வந்தீர்களே! இதை மறுக்க முடியுமா. ஏன் இந்த வெறி? எங்கள் ஜமாத் உங்களுக்கு என்ன கேடு செய்தது?
வேட்புமனுவில் அசரபு சொத்து கணக்கை மறைத்தாரா? வங்கி இருப்பை மறைத்தாரா? (அவரிடத்தில் சொத்தும் இல்லை. வங்கி இருப்பும் இல்லை). கிரிமினல் வழக்கு ஏதும் இருந்து அதை அசரபு மறைத்தாரா? இப்படி ஏதும் இல்லையே!
ஒரே முகவரி உள்ள, ஒரே வீட்டில் தவறுதலாக வாக்காளர் பட்டியலில் இருந்த, இரு வாக்குகளில் ஒன்றை அசரபு நீக்கி உள்ளார். நீக்கியதற்கான சான்றையும் வைத்திருந்தார். ஆனால் நீக்கப்பட்டது எந்த வரிசை எண்ணில் உள்ள வாக்கு என்பதில்தான் சர்ச்சை.
எனவே, ஆணையர் சட்டப்படி வழங்கிய அவகாச குறுகிய நேரத்தில், ஜும்மா உடைய நேரமாக இருந்ததால், மிகவும் சிரமப்பட்டு, திருச்செந்தூர் சென்று, வட்டாட்சியரிடத்தில் உரிய சான்று பெற்று வழங்கப்பட்டுவிட்டது. மனுவும் ஏற்கப்பட்டது. இதுதான் நடந்தது.
இருப்பினும், நீங்கள் சற்றும் எதிர்பார்க்காத சூழ்நிலையில், கடைசி நேரத்தில் உரிய சான்றிதழை பெற்று வழங்கியதை தங்களால் தாங்கிக்கொள்ள முடியாமல் இவ்வாறெல்லாம் செயல்பட்டு உள்ளீர்கள். ஏன்? ஏன்?
உங்களைப் பொருத்த அளவில், தேவைப்படும் போது அடுத்தவர்கள் தயவை பெற்று கொள்வீர்கள். தேவையில்லையெனில், அவர்களையே அலட்சியம் செய்வீர்கள். உங்கள் சுயநலத்திற்காக எதையும் சொல்வீர்கள், எதையும் செய்வீர்கள் என்பதை தெரிந்து கொண்டோம்.
பதவியும், அரசியல் செல்வாக்கும் நிரந்தரமானது அல்ல என்பதை புகழ் போதையில் மிதக்கும் உங்களுக்கு புரிய வைக்க, வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
இப்படிக்கு,
தலைவர் மற்றும் ஜமாத்தார்கள்,
கோமான் ஜமாத், காயல்பட்டினம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|