வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முறைப்படுத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கையை நிறைவு செய்வதென, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 13ஆம் நாள் சனிக்கிழமை 18.00 மணியளவில், தூத்துக்குடி தெற்கு புதுத் தெருவிலுள்ள சமுதாய நலக் கூட கேளரங்கில் நடைபெற்றது.
கூட்ட நிகழ்ச்சிகளை, கட்சியின் மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ நெறிப்படுத்தினார். காயல்பட்டினம் நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய - தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர் கூட்டத்தின் நோக்கம் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், தென்காசி முஹம்மத் அலீ, முஹம்மத் ஷாதுலீபுரம் காஜா, என்.டீ.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் உரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம் வருமாறு:-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்டமைப்புகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
கேரள முஸ்லிம் லீகினரின் பெருந்தன்மையான நடவடிக்கைகள் காரணமாக, அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகவும், ஏணி சின்னம் கட்சியின் நிரந்தர சின்னமாகவும் பெறப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, கட்சியின் முறைப்படுத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை தமிழ்நாடு மாநிலம் முழுக்க புதிதாகத் துவக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முறைப்படுத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கை நிறைவு செய்யப்பட வேண்டும்.
அதன் தொடர்ச்சியாக, ஒவ்வொரு கிளை சார்ந்த உள்ளாட்சியின் வார்டுகளுக்கு வார்டு பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர். அவர்களால் நகர நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கிளை நிர்வாகிகளால் மாவட்ட நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகங்களால் மாநில நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்படுவர். இவையனைத்தும் உறுப்பினர் சேர்க்கையைத் தொடர்ந்து அடுத்தடுத்து நடைபெறும்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் பேசினார்.
அவரைத் தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் உரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம் வருமாறு:-
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி கட்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் மறு சீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுச் செயலாளர் உங்களிடம் விளக்கிப் பேசினார்.
மறு சீரமைப்புப் பணிகளுள் மிகவும் முதன்மையானது உறுப்பினர் சேர்க்கைதான். இங்கே கருத்துக் கூறியவர்கள் தெரிவித்தது போல, அனைத்து கிளைகளிலும் வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வினியோகித்து, உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்.
அதுபோல, மஹல்லா ஜமாஅத்துகளின் அனுமதி பெற்று, பள்ளிவாசல்களில் அறிவிப்புச் செய்து உறுப்பினர் சேர்க்கை குறித்து பொதுமக்களுக்கு விளக்க வேண்டும். தெருமுனைப் பரப்புரைகள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவும் பொதுமக்களுக்கு இதுகுறித்து விளக்கலாம்.
ஒருவரையொருவர் குறை சொல்லிக் கொண்டிருக்காமல், அனைவரும் - குறிப்பாக நிர்வாகிகள் இது விஷயத்தில் தீவிர உழைப்பு செய்ய வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நம் சமுதாயத்தின் தாய்ச்சபை. இவ்வமைப்பை நானோ, வேறு யாருமோ உருவாக்கவில்லை. இந்திய விடுதலையின்போது, இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்த நீண்டகால சிந்தனையுடன் காயிதேமில்லத் அவர்களால் உருவாக்கப்பட்ட அமைப்பு. இது நம் கைகளில் தரப்பட்டுள்ள அமானிதம்.
இவ்வமைப்பை வலுப்படுத்தி, நம் வருங்கால சந்ததியிடம் வலிமையான அமைப்பாகக் கொடுக்க வேண்டியது நம் யாவரின் கடமை என உணர்ந்து செயலாற்ற வேண்டும். கட்சியை வளப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் மேற்கொள்ளப்படும் எல்லா நடவடிக்கைகளுக்கும் - நிர்வாகிகளாகிய நாங்கள் முழு ஒத்துழைப்பளிக்கவும், உங்களோடு இணைந்து செயலாற்றவும் ஆயத்தமாக உள்ளோம்.
நம் சமுதாயத்தின் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரையும் உறுப்பினராக்க வேண்டியது நம் கடமை. நம் சமுதாய இளைஞர்களை நாம் தக்க வைத்துக்கொள்வதன் மூலம், அவர்கள் தேவையற்ற சர்ச்சைகளுக்குள் சிக்கி, தங்கள் வாழ்வைச் சீரழித்துக்கொள்வதிலிருந்து காக்க இயலும்.
கட்சிக்கு நிரந்தர வருமானத்தை உருவாக்கும் நோக்குடன், ‘க்ரீன் சிட்டி’ எனும் பெயரில் செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உங்கள் யாவரின் ஒத்துழைப்புகளுடன் இறையருளால் விரைவில் அது செயலாக்கம் பெறும்.
மறைந்த நாவலர் யூஸுஃப் அவர்கள் இந்த தாய்ச்சபையை ‘பவித்திரமான இயக்கம்’ என்றழைப்பார். மறைந்த நம் தலைவர் அ.கா.அப்துஸ் ஸமத் ஸாஹிப் அவர்கள், தாய்ச்சபையினரை ‘திருக்கூட்டம்’ என வாயார அழைப்பார். இவர்களின் இந்த அடைமொழிகளுக்கு நாம் முழுத் தகுதியானவர்கள்தான் என்பதை எடுத்துரைக்கத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தொடர்ந்து செய்ய வேண்டும்.
இவ்வாறு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசினார்.
கட்சியின் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், கிளைகளின் சார்பிலும் மாநில தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
முறைப்படுத்தப்பட்ட உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்களை மாநில தலைமையகத்தின் சார்பில் பேராசிரியர் காதர் மொகிதீன் கையளிக்க, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அதன் தலைவர் பீ.மீராசா மரைக்காயர் அதைப் பெற்றுக்கொண்டு, அனைத்து கிளைகளுக்கும் பகிர்ந்தளித்தார்.
இக்கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
கட்சியின் முறைப்படுத்தப்பட்ட உறுப்பினர் சேர்ப்புத் திட்டத்தின் கீழ், மாவட்டத்தின் அனைத்து கிளைகளிலும் உறுப்பினர் சேர்க்கையை முழுவீச்சில் செய்வதென்றும், அனைத்து மஹல்லா ஜமாஅத்துகளின் ஒத்துழைப்புடன் - இதுகுறித்து பொதுமக்களுக்கு அறியத் தருவது என்றும், தேவைப்படும் இடங்களில் பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பரப்புரைகளை நடத்துவதென்றும், உறுப்பினர் சேர்க்கையை வீடு வீடாகச் சென்று செய்வது என்றும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் தூத்துக்குடி மாநகர தலைவர் ‘நவ்ரங்’ சஹாபுத்தீன் நன்றி கூற, ஹாஃபிழ் எஸ்.எல்.ஷெய்கு அப்துல் காதிர் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், தூத்துக்குடி, காயல்பட்டினம், ஏரல், சாத்தான்குளம், அரியநாயகிபுரம், வடமலை சமுத்திரம், தெற்கு ஆத்தூர், முத்தையாபுரம், ஜாஹிர் ஹுஸைன் நகர், திரேஸ்புரம், கோவில்பட்டி, கயத்தார், கேம்பலாபாத், நடுவப்பட்டி, பட்டினமருதூர் உள்ளிட்ட கிளைகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படங்களுள் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் முந்தைய கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண |