தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் கடந்த மாதம் கோவிலிற்கு தீவைப்பு மற்றும் பீடத்திற்கு சேதம் விளைவித்த வழக்கில் ஆறுமுகனேரி போலீஸார் சனிக்கிழமை மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
காயல்பட்டினத்தில் கடந்த மாதம் 10ஆம் தேதி மங்களவிநாயகர் கோவில் தெருவில் இசக்கி அம்மன் கோவில் பீடம் சேதப்படுத்தப்பட்டது.
அதே மாதம் 23ஆம் தேதி காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில் ஓடக்கரை அருகிலுள்ள இசக்கிஅம்மன் கோயில் மர்ம நபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.
மேலும் - இதே காலகட்டத்தில், இந்து இயக்கப் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் வழக்கு பதிவாகியது.
இந்நிலையில் கடந்த 11ம் தேதி சேதுராஜா தெரு அப்துல் அன்சார் மனைவி ஆயிஷாபீவி அணிந்திருந்த 4 பவுன் செயினை பறிக்க முயன்ற சம்பவம் நடந்தது. இச்சம்பவம் தொடர்பாக கே.எம்.டி.மருத்துவமனை அருகில் சந்தேகப்படும்படி பதுங்கி இருந்ததாக கூறப்படும் அக்பர்ஷா 3வது தெருவைச் சேர்ந்த அப்துல் காதிர் என்பவர் மகன் சாகுல்ஹமீது (27) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் காயல்பட்டினம் சீதக்காதிநகர் முகம்மது நுர்தின் என்பவர் மகன் தாஜிதின் (32), காயல்பட்டினம் காட்டுத் தைக்கா தெரு செய்யது முகம்மது என்பவர் மகன் கௌஸ்மொய்தீன் (30) ஆகியோருடன் இணைந்து கோயிலுக்கு தீவைப்பு, பீடம் உடைப்பு, இந்து இயக்கப் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக அவர் ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
சாகுல் ஹமீது கைதானதை தொடர்ந்து தாஜிதின், கவுஸ்மொய்தீன் ஆகியோரை ஆறுமுகனேரி ஆய்வாளர் முத்து சுப்பிரமணியம் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோயிலுக்கு தீவைப்பு, பீடம் உடைப்பு, இந்து இயக்கப் பிரமுகர்களுக்கு கொலை மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக காவல்துறை தரப்பு கூறுகிறது. இதனையடுத்து சனிக்கிழமை மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்களில் - தாஜீதின் 2010ல் மின்னல் மீனா என்ற சேக் அலி என்ற திருநங்கை கொலை வழக்கிலும் மற்றும் 2009ல் பட்டரை முகம்மது கொலை செய்ய முயன்ற வழக்கிலும் கைதாகியிருந்தார் என காவல்துறையினர் கூறுகின்றனர்.
தகவல்:
தினமணி |