சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம்
செப்டம்பர் 05-ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.45 மணியளவில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்ட நிகழ்வுகள் குறித்து,
அம்மன்றத்தின் துணைச் செயலாளர் எம்.எஃப்.ஃபஸல் இஸ்மாயில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம்,
இம்மாதம் செப்டம்பர் 05 ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.45 மணியளவில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
ஹாஃபிழ் சோனா அபூபக்கர் ஸித்தீக் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். தலைமை தாங்கிய மன்ற ஆலோசகர் பாளையம்
முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்று தலைமையுரையாற்றினார்.
மன்றத்தின் கடந்த கால நிகழ்வுகளின் நிறை குறைகள் பற்றி மன்ற உறுப்பினர்களிடம் கேட்டறிந்து அதற்குறிய ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும் அவர் தமது உரையில் சிங்கை நல மன்றத்தின் கூட்ட நிகழ்வறிக்கையை முற்கூட்டியே அனைத்து உறுப்பினர்களுக்கும் மின்னஞ்சல் மூலம்
அனுப்பி வைக்கப்படுகின்றது. அத்துடன் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு உடனுக்குடன் உறுப்பினர்கள் வருகை பற்றிய பதில் கிடைத்தால் அது
கூட்ட ஒருங்கிணைப்பிற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
சமீப காலமாக சிங்கப்பூர் அரசாங்கம் புதிதாக வரும் வெளிநாட்டு தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கான விசா மற்றும் வேலைக்கான
அனுமதி அட்டை வழங்குவதில் கட்டுப்பாடு மற்றும் புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. எனவே, வேலை தேடி சிங்கைக்கு வரும்
காயலர்கள் தமது படிப்பிற்குரிய வேலை மற்றும் வாய்ப்புகளை நன்கு அறிந்து அதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில் வேலை தேடிவர
முன் வர வேண்டும். சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் இது குறித்த தகவல்களைக் கேட்டறிந்து கலந்தாலோசனை செய்த பின்னர்
வந்தால் மட்டுமே சுலபமான முறையில் வேலை கிடைக்க ஏதுவாக இருக்கும் என்றார்.
நல மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவில் நடத்தப்படும் விளையாட்டுப் போட்டிகளை இன்னும் ஒழுங்குமுறைப்படுத்தி அதற்குரிய குழுக்களை தேர்வு
செய்து முன்னதாகவே போட்டிகளை நடத்துவது கால விரயத்தை தவிர்க்க ஏதுவாக இருக்கும் என்றார்.
எதிர்வரும் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளையொட்டி, இன்ஷாஅல்லாஹ் வரும் அக்டோபர் 05, 06 ஆம் நாட்களில், சிங்கப்பூர் Fairy Point
Chalet –1 இல் வைத்து ஹஜ்ஜுப்பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
மன்றத்தில் புதிய உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்ட (மன்ற உறுப்பினர் சாளை ஷேக் ஹுமாயூன் அவர்களின் மகன்) ஷேக் ஷீத்
சிற்றுரையாற்றினார். தன்னை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், சிங்கை காயல் நல மன்றத்தில் உறுப்பினராவது தனக்கு மிகுந்த
மகிழ்ச்சியளிப்பதாகவும், சிங்கையில் தனக்குத் தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு அருள் புரிந்த எல்லாம்வல்ல அல்லாஹ்வுக்கும், துவக்கம் முதல்
துணை நின்று வழிகாட்டி சிங்கை காயல் நல மன்றத்தினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
தற்போது சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்திருக்கும் காயலர்களான அபூபக்கர் ஸித்தீக், அப்துர் ரஹ்மான், செய்யது ஹஸன், இஸ்மாயீல்,
இபுறாஹிம்(புஹாரி), வஸீம் ஹஸன் ஆகியோர் தங்களை சுய அறிமுகப்படுத்திக் கொண்டதோடு வேலை கிடைக்க துஆ செய்யுமாறு
வேண்டினர்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
நடப்பு கூட்டத்தை ஒருங்கிணைத்த மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எம்.ஐ.அபூபக்கர் ஸித்தீக் சிற்றுரையாற்றினார்.
அவர் தமது உரையில், தமக்கு வேலை கிடைத்த இந்த இரண்டே மாதத்தில் மன்றத்தின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைக் கண்கூடாகப் பார்த்து
வியந்ததாகவும், தான் சென்னையில் பணியாற்றிக்கொண்டிருந்த காலங்களில் நகர் நல அமைப்புகளின் தொடர்பே இல்லாமல் இருந்து வந்ததாகவும்,
சிங்கைக்கு வந்த பின்னர் தன்னை மன்றத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதால் ஊர் நலனுக்காகப் பாடுபடுவதில் மிகுந்த மன நிறைவும்
மகிழ்ச்சியும் கிடைப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறுகையில் வாரந்தோறும் மன்ற ஆலோசகர் ஒருங்கிணைப்பில் நடைபெற்று வரும் ஹாஃபிழ்களுக்கான குர்ஆன் பயிற்சி வகுப்புகளில்
ஹாபிஃழ் அல்லாதவர்களும் பங்கெடுத்து தஜ்வீதுடன் ஓதும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் நாளைடைவில் அவர்களும்
ஹாஃபிழ்கள் ஆக வாய்ப்புள்ளது. இந்த நல்ல வாய்ப்பினை மன்ற உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தமது உரையை
அவர் நிறைவு செய்தார்.
துணைச் செயலரின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழு கூட்ட நிகழ்வறிக்கை, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, மன்றத்தின்
துணைச் செயலாளர் எம்.எஃப். ஃபஸல் இஸ்மாயில் விளக்கிப் பேசினார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள்:
கடந்த ரமழான் மாதத்தில், ‘அத்தியவாசிய சமையல் பொருளுதவித் திட்டத்தின் கீழ், நகரின் ஏழைக் 120 குடும்பத்தினருக்கு சமையல் பொருளுதவி
வெற்றிகரமாக வினியோகித்து முடிக்கப்பட்டுள்ளது. அது போன்று வரும் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள அத்தியவாசிய
சமையல் பொருளுதவித் திட்டத்தின் பணிகள் குறித்து விளக்கினார்.
மன்றத்தின், முதியோர் நலத்திட்டத்தின் அனுசரனையாளர்கள் தமது பங்களிப்பினை வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் செலுத்துமாறு
கேட்டுக்கொண்டார். உறுப்பினர்க்குழு மின்னஞ்சல் மூலம் பெறப்படும் தகவல்களை முறைப்படுத்தி அதற்காக நியமனம் செய்யப்பட பொறுப்பாளர்களின்
ஒப்புதலுக்குப் பின்னர் அவைகளை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வர இயலாத காரணத்தால்
மன்றத்தின் துணைச் செயலாளர் எம்.எஃப். ஃபஸல் இஸ்மாயில் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அதில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள்:-
மன்றத்தின் நடப்பு நிதிநிலை குறித்து விளக்கப்பட்டது.
பல்வேறு உதவிகள் கோரி காயல்பட்டினத்திலிருந்து மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஷிஃபா மூலம் பெறப்பட்ட மருத்துவ உதவி கோரும்
விண்ணப்பங்களுக்கான நிதியொதுக்கீடு குறித்து விளக்கப்பட்டது.
கடந்த ஜூலை மாதம் வரை உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு ரூபாய் 1,46,000 வழங்கப்பட்டுள்ளது.
அரூஸுல் ஜன்னஹ் பெண்கள் மத்ரஸாவில் பயின்று ஹாஃபிழா பட்டம் பெற்ற ஒன்பது மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையாக மொத்தம் ரூபாய்
22,500 வழங்கப்பட்டுள்ளது.
நிதியொதுக்கீடு:
இக்ராஃ கல்வி உதவித்தொகைக்காக ரூபாய் 25,000
முஅஸ்கர் பெண்கள் மத்ரஸாவில் பயின்று ஹாஃபிழா பட்டம் பெற உள்ள ஒன்பது மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூபாய் 22,500
பித்ராஃ வகைக்காக ரூபாய் 12,500
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்திற்கான உதவித்தொகை ரூபாய் 1,45,000
ஆகியவற்றிற்கான தொகையை வழங்க மன்றம் ஒப்புதல் அளித்தது.
மேலும் நடப்பு காலாண்டுக்கான உறுப்பினர் சந்தா நிலுவையிலுள்ளோருக்கு நினைவூட்டல் செய்யப்பட்டுள்ளது.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப்பரிமாற்றம் செய்ய நேரம் அளிக்கப்பட்டது. உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கையில் உள்ளூரில் வசிக்கும்
வசதியற்றோருக்கு சிறு தொழில் துவங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி அதற்காக மன்றம் உதவி புரியலாமே என ஒரு உறுப்பினர் தனது
விருப்பத்தைக் கூறினர்.
உதவிகோருவோர் நிலை, துவங்கப் போகும் தொழில், அதற்கான உபகரணங்கள், உதவி வழங்கல் மற்றும் விதிமுறைகள் குறித்து ஆய்வு செய்து
அதற்கான அறிக்கையை மன்றத்தில் சமர்பிக்குமாறு சாளை நவாஸ் தலைமையில் செய்யத் ஹஸன், உதுமான், ஆர்.எம்.எஸ்.முஹம்மது மைதீன்
உள்ளிட்ட நால்வர் குழு அமைக்கப்பட்டது. மன்றம் அந்த அறிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும் என அறிவித்தது.
சிறப்பு விருந்தினர்கள்:
இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக ஹாஜி ஆர்.எஸ்.லத்தீஃப் அவர்களின் மகன் ஏ.எல். அப்துர் ரஹ்மான் மற்றும் முன்னாள் நகர் மன்றத் தலைவர்
ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் அவர்களின் மகன் வாவு எஸ்.எ.ஆர் முஹம்மத் இப்றாஹீம் ஆகியோர் கலந்து கொண்டு மன்றத்தின்
செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினர்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், ஹாஃபிழ் கே.டி.ஷாஹுல் ஹமீது பாதுஷா துஆவுடன் 21.40 மணியளவில் கூட்டம் இறையருளால்
இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இரவுணவு விருந்துபசரிப்பைத் தொடர்ந்து அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற துணைச் செயலாளர் எம்..எஃப்.ஃபஸல் இஸ்மாயில் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
M.N.L. முஹம்மத் ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்),
செய்தி தொடர்பாளர்.
சிங்கை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |