காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற
வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.
இது குறித்து, கோமான் ஜமாஅத் தலைவர் பெயரில் அறிக்கை ஒன்று வெளிவந்திருந்தது. அதற்கு விளக்கம் கூறி, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக், அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
மரியாதைக்குரிய கோமான் ஜமாஅத் தலைவர் அவர்களுக்கு,
இறைவனின் சாந்தியும் சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!
அக்டோபர் 2011இல் நடந்த தேர்தலைத் தொடர்ந்து, காயல்பட்டினம் நகராட்சியின் தலைவராக தேர்வாகிய நாள் முதல் இன்று வரை, நான் மக்களுக்கு கொடுத்த வாக்குப்படி, முழு அர்ப்பணிப்போடும், ஊழல் - லஞ்சத்திற்கு ஒருபோதும் தலை அசைக்காதவளுமாக செயல்புரிந்து வருகிறேன். இதற்கு இறைவனே சாட்சி!
ஆனால் - நான் பதவியேற்ற நாள் முதல், தேர்தலில் தோல்வியுற்ற காழ்ப்புணர்ச்சியில், நகராட்சியினை முடக்கும் விதமாக ஒரு சில தீய சக்திகள் செயல்புரிந்து வந்ததை தாங்கள் அறிவீர்கள். அதற்குத் துணை புரிந்தோரில் - மதிப்பிற்குரிய முன்னாள் வார்டு 1 உறுப்பினர் ஹாஜி ஏ.லுக்மான் அவர்களும் ஒருவர் என்பது வருந்தத்தக்க உண்மை. அவ்வாறு அவர் செயல்புரிந்தபோதும், பொய்யான 11 குற்றச்சாட்டுகள் அடிப்படையிலான நம்பிக்கை இல்லா தீர்மானம் மனுவில் அவர் கையெழுத்திட்ட போதும், உண்மை நடப்பு என்ன என்று என்னிடம் வாய்மொழியாகவோ, எழுத்துப்பூர்வமாகவோ தாங்கள் ஒரு முறை கூட கேட்கவில்லை.
ஆனால் - இன்று, ஐந்தாண்டுகள் பணியாற்ற தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர் 2 ஆண்டுகள் பூர்த்தியாகும் முன்னரே பதவி விலகி சென்று, ஓராண்டு காலமாக - 1ஆவது வார்டு எந்த பிரதிநிதித்துவமும் இல்லாமல் இருந்து, மறுபடியும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ள சூழலில் - எந்த தீய சக்திகள் கடந்த மூன்றாண்டுகளாக நகராட்சியின் நடவடிக்கைகளை சீர்குலைக்க செயல்புரிந்து வருகிறதோ, அவர்களின் வாயிலாக பரப்பப்படும் அதே செய்திகள் அடிப்படையில் - என்னை விமர்சித்து அறிக்கை தங்கள் பெயரில் வெளிவந்துள்ளது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருக்கு என்று துவங்கும் அந்த அறிக்கையை - என்னிடம் கூட வழங்காமல் ஊடகங்களுக்கு, செய்தியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் கடிதத்தை எனக்கு வழங்கினால் மட்டும் பதில் கூறலாம் என்று நான் காத்திருக்கலாம் என்றாலும், தங்களுக்கும், இதுபோன்று தவறாகப் புரிந்து கொண்டிருப்போருக்கும் உண்மையை விளக்க இது ஒரு வாய்ப்பு என்பதால் மட்டுமே, எனது இந்த பதிலை வழங்குகிறேன்.
1ஆவது வார்டின் முன்னாள் உறுப்பினர் பதவி விலகி ஏறத்தாழ 15 மாதங்கள் ஆகிறது. உறுப்பினர் இல்லாத இந்தக் காலக்கட்டத்தில் 1ஆவது வார்டு சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகள் குறித்து - கோமான் ஜமாஅத் உட்பட அந்த வார்டின் அனைத்து மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்கும் வாய்ப்பும், அவற்றுக்குத் தீர்வுகள் வழங்கும் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வேளைகளில், மதிப்பிற்குரிய கோமான் ஜமாஅத்தை சார்ந்த பல பெரியவர்களையும், சமூக ஆர்வலர்களையும் சந்திக்கவும், அவர்களிடம் பேசவும் வாய்ப்பு கிடைத்தது. அந்த தருணங்களில் எல்லாம் - மறு தேர்தல் குறித்த பேச்சு வரும்போது, “ஜமாஅத்தில் இருந்து மீண்டும் ஒருவரை நிறுத்தும் எண்ணத்தில் நாங்கள் இல்லை, ஒரு முறை பட்டதே போதும், யார் யார் போட்டியிட விரும்புகிறார்களோ அவர்கள் போட்டியிடட்டும் என்ற முடிவில் நாங்கள் இருக்கிறோம்” என்றே தேர்தல் நாள் நெருங்கும் வரை தெரிவிக்கப்பட்டது.
மேலும், தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில தினங்களுக்கு முன்னர், தற்போது கோமான் ஜமாஅத் சார்பாக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மதிப்பிற்குரிய எஸ்.ஐ.அசரபு அவர்கள், அ.தி.மு.க. உறுப்பினர் என்ற அடிப்படையில், கட்சி சார்பாக 1ஆவது வார்டில் போட்டியிட, கட்சியின் நகர நிர்வாகிகளிடம் விருப்பம் தெரிவித்தார். அதன் அடிப்படையில், அவரின் பெயரும் கட்சியின் மேலிடத்திற்கு பரிந்துரையும் செய்யப்பட்டது. ஆனால் - திடீரென அவர் போட்டியிட மறுத்துவிட்டார். இதனைத் தாங்களும் அறிவீர்கள்.
இந்த நடப்புக்குப் பின்னர்தான், கட்சியின் தலைமை, கட்சி வேட்பாளரை அறிவித்தது என்பதனை தங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன். உண்மை இவ்வாறிருக்க, 1ஆவது வார்டு தேர்தலை, அரசியல் தேர்தல் களமாக, நான் ஆக்கியதாக தாங்கள் கூறுவது எந்த வகையில் நியாயம்?
தங்கள் அறிக்கையில், நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக செயல்புரிந்து வரும் தீய சக்தியின் பின்னணி கொண்ட ஊடகம் ஒன்று உள்நோக்கத்துடன் வெளியிட்ட செய்திகள் அடிப்படையில் சில விஷயங்களை கூறியுள்ளீர்கள். இதுபோன்ற கீழ்த்தரமான செய்திகளுக்கு மதிப்பளித்து, அதனை தங்கள் அறிக்கையில் மீண்டும் வெளியிட்டிருப்பது மன வேதனையைத் தருகிறது.
கோமான் ஜமாஅத் மக்களை - அன்றும், இன்றும், என்றென்றும் மதித்தவள்/மதிப்பவள் நான். இம்மக்களுடனான தொடர்பு - நான் நகர்மன்றத் தலைவியாவதற்கு முன்பே உருவானது என்பதனை நான் இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன்.
புரளிகளுக்கும், அவதூறுகளுக்கும் பதில்கள் கூறவேண்டியதில்லை. நான் சார்ந்துள்ள அ.தி.மு.கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு, ஜனநாயக முறைப்படி மட்டுமே நான் வாக்குகள் கோரி வருகிறேன் என்பதனை நான் தங்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதில் தாங்கள் குறை காண்பது எனக்கு வியப்பாக உள்ளது.
இறுதியாக ஒரு கோரிக்கையை வைத்து கடிதத்தை நிறைவு செய்கிறேன். செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ள 1ஆவது வார்டுக்கான இடைத் தேர்தலில், அ.தி.மு.க. சார்பாக நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, வெற்றிபெறச் செய்யுமாறு, தங்களையும் கோமான் ஜமாஅத்தின் அனைத்து வாக்காளர் பெருமக்களையும் கேட்டுக் கொள்கிறேன். அ.தி.மு.க. வேட்பாளரின் வெற்றி மூலம் - 1ஆவது வார்டு பகுதிக்கு, அதன் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, அனைத்து வசதிகளும் இறைவன் நாட்டத்துடன் கிடைக்க பிரார்த்தனை செய்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள,
ஐ.ஆபிதா ஷேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|