சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழாவில், பள்ளியின் சாதனை மாணவியருக்கு பணப்பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
காயல்பட்டினம் சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியில், 2014-2015 கல்வியாண்டிற்கான விளையாட்டு விழா 26.08.2014 அன்று 10.00 மணியளவில், பள்ளி தாளாளரின் மகளும், பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக பொருளாளருமான வாவு சேகு ஃபாத்திமா மொகுதூம் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியை மு.ஜெஸீமா தலைவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பள்ளியின் சார்பில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவியருக்கு, விழா தலைவர் பரிசுகளை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விளையாட்டு விழா நிறைவுற்றது.
அன்று 14.30 மணியளவில், பள்ளியின் ஆண்டு விழா, வாவு எஸ்.அப்துல் கஃப்பார் தலைமையில், நடைபெற்றது. பள்ளியின் கணித ஆசிரியை மு.பீர் ஃபாத்திமா அனைவரையும் வரவேற்றார். தலைமையாசிரியை மு.ஜெஸீமா பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார்.
பள்ளி நிர்வாகி வாவு எஸ்.காதிர் ஸாஹிப் வாழ்த்துரையாற்றினார்.
இவ்விழாவில், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியரும், தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவருமான பத்மாவதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
2013-2014 கல்வியாண்டில், 06 முதல் 12ஆம் வரையிலான வகுப்புகளில், கல்வித் தரத்தில் முதலிரண்டு இடங்களைப் பெற்ற மாணவியருக்கு பள்ளியின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
12ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியருககு முறையே ரூபாய் 5 ஆயிரம், 2 ஆயிரம், 1,500 பணப்பரிசும்,
10ஆம் வகுப்பில் பள்ளியளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவியருக்கு முறையே ரூபாய் 2 ஆயிரம், ஆயிரம், 750 பணப்பரிசும்,
12ஆம் வகுப்பில், தனிப்பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்ற 3 மாணவியருக்கு தலா ரூபாய் 500 பணப்பரிசும்,
10ஆம் வகுப்பில், தனிப்பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 15 மாணவியருக்கு தலா ரூபாய் 250 பணப்பரிசும் வழங்கப்பட்டது.
பள்ளி தாளாளர் வாவு எஸ்.அப்துல் கஃப்பார் பணப்பரிசுகளை மாணவியரிடம் வழங்கினார்.
தொடர்ந்து, ஆடல் - பாடல் - நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் மாணவியர் தம் தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழாசிரியை ஐ.ஹஸீனா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஆங்கில ஆசிரியை ஜெயந்தி நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளியின் முந்தைய ஆண்டு விழா குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சுபைதா மகளிர் மேனிலைப்பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது; படங்கள் இணைக்கப்பட்டன @ 11:17 / 15.09.2014] |