மாவட்ட அளவிலான க்ரிக்கெட் லீக் போட்டியில் வென்றமைக்காக, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க (USC) அணிக்கு கோப்பை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
மாவட்ட அளவில் கடந்த 2013 - 2014 ஆண்டுக்கான லீக் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்த நிலையில், அதில் வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கான கோப்பை மற்றும் பரிசுகளை வழங்கும் நிகழ்வு இம்மாதம் 06ஆம் நாளன்று தூத்துக்குடி AVM ஜூவல்லர்ஸ் மஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு spic கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் ஆல்பர்ட் முரளீதரன், செயலாளர் சிவகுமரன், துணைச் செயலாளர் ரொனால்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட அளவில் 21 அணிகள் - முதல் டிவிஷன், இரண்டாவது டிவிஷன், மூன்றாவது டிவிஷன் என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடத்தப்பட்டது. அதில் அதிக புள்ளிகளைப் பெற்ற 4 அணிகள் தேர்வு செய்யப்பட்டு, IPL முறையில் பிளே ஆஃப் போட்டியும், அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியும் நடத்தப்படும்.
கடந்த 2013 – 2014ஆம் ஆண்டில் முதல் டிவிஷன் போட்டியில் தூத்துக்குடி SDR அணி முதலிடத்தையும், தூத்துக்குடி Seconds "A" அணி இரண்டாமிடத்தையும் பிடித்தது.
இரண்டாவது டிவிஷனில் தூத்துக்குடி TRC "B" அணி முதலிடத்தையும், தூத்துக்குடி Seconds "B" அணி இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.
மூன்றாவது டிவிஷனில் காயல்பட்டினம் USC அணி முதலிடத்தையும், தூத்துக்குடி Pearlcity அணியினர் இரண்டாமிடத்தையும் பிடித்தனர்.
இந்த அணிகளுக்கான கோப்பை மற்றும் தனிநபர் பரிசுகள் வழங்கும் நிகழ்வின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செயலாளர் சிவகுமரன் வரவேற்புரை மற்றும் நிகழ்ச்சி குறித்து அறிமுகவுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் கண்ணன் உரையாற்றினார்.
வெற்றிபெற்ற மற்றும் வெற்றிக்கு முனைந்த அணிகளுக்கு கோப்பைகளும், ஒவ்வொரு டிவிஷனிலும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, அதிக ரன் எடுத்த, சிறந்த ஆல் ரவுண்டர் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் USC அணி வீரர் ரமேஷுக்கு சிறந்த ஆல் ரவுண்டருக்கான பரிசு வழங்கப்பட்டது. இப்பரிசை அவர் சார்பாக அந்த அணியின் சக வீரர் பஷீர் பெற்றுக்கொண்டார்.
நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்
ஐக்கிய விளையாட்டு சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |