காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் மகன் ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் அபூபக்கர், இம்மாதம் 06ஆம் நாள் சனிக்கிழமையன்று காலமானார்.
இவர், ஜாவியா அரபிக்கல்லூரியில் திருக்குர்ஆன் மனனம் செய்து முடித்து, 15.06.2014 அன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ ஸனது (பட்டச் சான்றிதழ்) பெற்றார்.
முன்னாள் மாணவரான இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஜாவியா அரபிக்கல்லூரியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எங்களின் அன்பிற்கும், பாசத்திற்குமுரிய மாணவர் அல்ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மது அபூபக்கரின் வஃபாத் செய்தி எங்களை பெரும் அதிர்ச்சியடையச் செய்தது.
இவர் எம் கல்லூரியில் பயின்ற காலத்தில் - தொழுகை, திக்ர், பாடத்திற்கு முற்கூட்டியே வருவது, தினந்தோறும் தவறாமல் பாடம் கொடுப்பது, விடுப்பு எடுக்காமை, ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்குக் கட்டுபட்டு நடத்தல், பணிவு, அடக்கம், ஆடையில் தூய்மை, நல்ல இனிமையான குரல் வளம், எந்த சபையிலும் கூச்சப்படாமல் தன்னுடைய இனிய குரலில் கிராஅத் ஓதும் திறன் உள்ளிட்ட தனது தனிப்பெரும் குணங்களைக் கொண்டு - ஒரு மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்ந்ததன் மூலம், அனைவரின் அன்பையும் நிறைவாகப் பெற்றார்.
சில ஆண்டுகளுக்கு முன் நாகர்கோவில் அருகில் உள்ள கோட்டாறில் நடைபெற்ற மாநிலம் தழுவிய திருக்குர்ஆன் ஹிஃப்ழு போட்டியில் இரண்டாம் பரிசைப் பெற்று, எம் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தவர்.
அன்பு மாணவரான இவரது மறைவால் துயருற்றிருக்கும் - இவரை ஈன்றெடுத்த பெற்றோர், பெற்றோரின் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை தந்தருள்வானாக!
மேலும் மர்ஹூமின் பாவங்கள் அனைத்தையும் கிருபையுள்ள அல்லாஹ் மன்னித்து, அவருடைய கப்ரை சுவர்க்க பூஞ்சோலையாக்கி வைப்பானாக! ஆமீன்.
இப்படிக்கு
நிர்வாகிகள், உஸ்தாத்மார்கள், மாணவர்கள்,
ஜாவியத்துல் ஃபாஸிய்யதுஷ் ஷாதுலிய்யா அரபிக் கல்லூரி
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஹாஃபிழ் முஹம்மத் அப்துல் காதிர் அல்புகாரீ
ஜாவியா அரபிக்கல்லூரி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |