தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தல் பணிகளை கண்காணிக்க பொறுப்பு அலுவலர்களை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான ரவிகுமார் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி -
தேர்தலை மாவட்ட அளவில் கவனிக்கும் முன்னோடி அலுவலராக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பெல்லா,
வேட்பு மனுக்கள் பெறுதல், பரிசீலனை, புள்ளி விவரங்களை மாநில தேர்தல் ஆணையத்துக்கு தெரிவித்தல் தொடர்பான பணிகள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு மண்டலங்கள் மற்றும் மண்டல ஊர்திகள் ஒதுக்கீடு, இதர பணிகளை கண்காணிக்க ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஜார்ஜ் ஆண்டனி மைக்கேலும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல் ஒருங்கிணைப்பு பணிகளுக்கு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) கோமதி நாயகம்,
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்நிலை மற்றும் வினியோகம் செய்யும் பணிக்கு மாநகராட்சி செயற்பொறியாளர் ராஜகோபாலன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து யூனியன் தேர்தல் தொடர்பான அனைத்து பணிகளையும் கண்காணித்து ஒருங்கிணைக்கும் பணிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் இந்துபாலா,
ஊரக உள்ளாட்சி அமைப்புக்கு தேவையான வாக்குச்சீட்டுகள் அச்சடித்தல், வினியோகம் செய்தல் பணிக்கு பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் சண்முகவல்லி,
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் வாக்காளர்களுக்கான வாக்குச்சாவடி சீட்டு (பூத் சிலிப்) வினியோகம் செய்யும் பணியை கண்காணிக்க உதவி இயக்குனர் (தணிக்கை) லூர்துமேரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட உள்ள ரகசிய முத்திரைத்தாள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திர ஒட்டுத்தாள் முத்திரை வினியோகம் செய்யும் பணிக்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் ரங்கநாயகி,
ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு வாக்குப்பதிவு பொருட்கள் வழங்கும் பணிக்கு தூத்துக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தகவல்:
www.tutyonline.com
|