காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற
வெற்றிடங்களுக்கும் தேர்தல் செப்டம்பர் 18 அன்று நடைபெறவுள்ளது.
தேர்தல் அறிவிப்பு குறித்து நகராட்சியில் ஒட்டப்பட்டுள்ள படிவம் 2
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று மாலை 3 மணி வரை, 5 பேர் - மனு தாக்கல் செய்திருந்தனர். மனு தாக்கல் செய்திருந்த
ஐந்து பேரின் விபரங்கள், அன்று மாலை - படிவம் 5இல் வெளியடப்பட்டது. அதில் - இன்று (செப்டம்பர் 5) காலை 11 மணிக்கு, மனுக்கள்
அனைத்தும் பரிசீலனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
படிவம் 5
தேர்தலில் போட்டியிட -
(1) ம.அமலக்கனி [அ.தி.மு.க.]
(2) எஸ்.ஐ.அஸ்ரஃப் [சுயேட்சை]
(3) எஸ்.ஐ.மொகுதூம் அப்துல் காதர் [சுயேட்சை]
(4) எஸ்.ஐ. கஸ்ஸாலி மரைக்கார் [சுயேட்சை]
(5) எம்.செந்தமிழ் செல்வன் [சுயேட்சை]
- என ஐந்து பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவர்களில் எஸ்.ஐ.மொகுதூம் அப்துல் காதர், எஸ்.ஐ. கஸ்ஸாலி மரைக்கார் ஆகியோர் கோமான் ஜமாஅத் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள
வேட்பாளருக்கு மாற்று வேட்பாளர்கள் என்றும், எம்.செந்தமிழ் செல்வன், அ.தி.மு.க. வேட்பாளர் ம.அமலக்கனிக்கு மாற்று வேட்பாளர் என்றும்
தெரிகிறது.
தமிழ்நாடு டவுன் பஞ்சாயத்துகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிமுறைகள் 2006 இன், விதி
எண் 27 படி, இன்று பரிசீலனை நடைபெறும்.
தேர்தல் அதிகாரி (நகராட்சி ஆணையர்) மூலம் பரிசீலனை நடைபெறும் போது - வேட்பாளரும், அவரை முன் மொழிந்தவரும், அவரால் நியமனம் செய்யப்பட்ட
ஒருவர் மட்டுமே, அனுமதிக்கப்படுவர்.
தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனு மீது - யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால், அதனை எழுத்துப்பூர்வமாக வழங்கவேண்டும்.
பெறப்பட்ட ஆட்சேபனை அடிப்படையிலோ அல்லது தானாகவோ, தேர்தல் அதிகாரி - கீழ்க்காணும் காரணங்களாக மட்டும், வேட்பு மனுவை
நிராகரிக்கலாம்.
(1) வேட்பு மனு தாக்கல் செய்த நாளன்று, வேட்பாளருக்கு அதற்கான் தகுதி இல்லை அல்லது இச்சட்டத்தின் ஏதோ ஒரு விதிமுறைப்படி தகுதி
இழக்கிறார்
(2) இச்சட்டத்தின் விதிகள் 24 (வேட்பு மனு தாக்கல் குறித்தது) அல்லது 25 (முன்தொகை செலுத்தவது குறித்தது) பின்பற்றப்படவில்லை
(3) வேட்பாளர் அல்லது முன்மொழிந்தவர் கையெழுத்து உண்மையானது அல்ல
(4)ஆதி திராவிடர்/பழங்குடியினர்/பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட தொகுதியில் இப்பிரிவுகளில் சாராதவர் விண்ணப்பம் செய்வது
மேலே கூறப்பட்ட குறைகள் மனுவில் இருந்தாலும், அவரின் சார்பாக வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் குறையில்லை என்றால் அந்த
மனுவினை ஏற்றுக்கொள்ளலாம்.
மேலும் - ஒருவர், ஒன்றுக்கு மேற்பட்ட மனுக்களுக்கு முன்மொழிந்திருந்தால், அவற்றில் முதலில் பெறப்பட்ட விண்ணப்பம் (எந்த குறையும் அதில்
இல்லையென்றால்) ஏற்றுக்கொள்ளப்படும்.
மனுவினை நிராகரிக்க பெரியளவிலான காரணங்கள் இருக்கவேண்டும். சிறு காரணங்களுக்காக மனுக்கள் நிராகரிக்கப்பட கூடாது.
மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலோ/நிராகரிக்கப்பட்டலோ, அது குறித்த தனது பதிவை, வேட்பாளரின் விண்ணப்ப படிவத்தில் (படிவம் 3), தேர்தல்
அதிகாரி செய்யவேண்டும். மனு நிராகரிக்கப்பட்டால், நிராகரிக்கப்பட்ட காரணத்தை - எழுத்துப்பூர்வமாக வேட்பு மனு தாக்கல் செய்தவருக்கு வழங்கவேண்டும்.
பரிசீலனையின் இறுதியில் - ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம், தமிழ் அகராதி வரிசைப்படி, படிவம் 6 இல் பதிவு செய்யப்பட்டு,
தேர்தல் அதிகாரியால் வெளியிடப்படவேண்டும்.
விதிமுறை 27(9) படி தகுதியான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளவர் பட்டியல் வெளியிடப்படவேண்டிய படிவம் 6இன் மாதிரி
|