ஆறுமுகநேரி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் நட்டார் மகன் கடற்கரையாண்டி (60). இவர் காயல்பட்டினத்தின் வட புறத்தில் உள்ள DCW தொழிற்சாலையில் சப் காண்டிரக்டில் வேலை பார்த்து வந்தார் என தெரிகிறது. இன்று மாலை - ஆலையின் உள்ளே, தளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் போது கடற்கரையாண்டி கீழே விழுந்தார்.
மூக்கில் பலத்த காயம்பட்ட அவரை உடனடியாக ஆத்தூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் கடற்கரையாண்டி இறந்தார். இந்நிலையில் இறந்த கடற்கரையாண்டி உடலை உறவினர்கள் ஆத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். போலீசார் இறந்தவர் உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லும் படி அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இறந்தவரின் உறவினர்கள் உடலை DCW தொழிற்சாலைக்கு கொண்டு வந்தனர். அங்கு நுழைவுவாயில் முன்பு இறந்த கடற்கரையாண்டி உடலை வைத்து மாலை 5.45 மணிமுதல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதுப்பற்றி தகவல் அறிந்த திருச்செந்தூர் டிஎஸ்பி கோவிந்தராஜ், ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், திருச்செந்தூர் தாசில்தார் நல்லசிவம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டம் நடத்தியவர்களுடன் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இறந்தவருக்கு நஷ்டஈடு தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவதாக ஆலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒரு லட்ச ரூபாய் நஷ்ட ஈடும் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் இறந்தவர் உடலுடன் அங்கிருந்து இரவு 8.55 மணிக்கு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணிநேரம் பரபரப்பு நிலவியது. |