மத்திய அரசு - 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியன்று Municipal Solid Wastes (Management and Handling) Rules, 2000 என்ற
விதிமுறைகளை - அரசு கெசட்டில் வெளியிட்டது. இதன்படி நாட்டில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் குப்பைகள் கொட்டுவதற்கான பிரத்தியேக
இடங்கள் (Compost Yards) - டிசம்பர் 2003 க்கு முன்னர், அடையாளம் காணப்பட்டு, பயனுக்கு வரவேண்டும்.
திருமதி வஹீதா நகர்மன்றத் தலைவராக இருக்கும்போது, செப்டம்பர் 6, 2006 ஆம் ஆண்டு - அரசாணை (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்
வழங்கல் துறை: GO No.86) ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதில் காயல்பட்டினம் உட்பட 12 நகராட்சிகளுக்கு குப்பைகளை கொட்ட நிலம் வாங்க
மானியம் வழங்கி - அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அரசாணை மூலம் நிலம் வாங்கும் வகைக்காக, PART 2 திட்டத்தின்படி 5 லட்சம் ரூபாய்
அரசு மானியம் காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.
2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹாஜி வாவு செய்து அப்துர்ரஹ்மான் நகர்மன்றத் தலைவராக பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து, அக்டோபர் 28,
2009 அன்று நடந்த காயல்பட்டினம் நகர்மன்ற கூட்டத்தில் - திடக்கழிவு மேலாண்மை பணிக்காக உரக்கிடங்கு (COMPOST YARD) வாங்குவது குறித்து
தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அத்தீர்மானத்தின்படி அப்போதைய நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர்ரஹ்மானின் மகளுக்கு சொந்தமான நிலத்தினை (காயல்பட்டினம்
தென் பாக கிராமம் சர்வே எண் 278) - சந்தை விலைக்கு குறைவாக நகராட்சிக்கு வாங்கிட முடிவுசெய்யப்பட்டது. அத்தீர்மானத்தில் ஏக்கர் ஒன்றின்
அப்போதைய சந்தை விலை 1.5 லட்ச ரூபாய் என்றும், அரசு வழிக்காட்டு விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 59,000 என்றும், அரசு வழிக்காட்டு
விலைக்கு கூடுதலாக, சந்தை விலைக்கு குறைவாக - ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 1 லட்சம் வீதமாக - 5 ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் கிரையத்தில்
நிலத்தினை வாங்கிடவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்றிட - இதன் விபரங்களை மாவட்ட ஆட்சியருக்கு
அனுப்பிடவும், அக்கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது.
முன்னாள் நகர்மன்றத் தலைவர் அக்டோபர் 2009 இல் 5 ஏக்கர் நிலம் தருவதாக கூறி - தீர்மானங்கள் நிறைவேற்றியப்பின், தமிழ்நாடு மாசு
கட்டுப்பாட்டு வாரியத்தின் தூத்துக்குடி கிளை (TNPCB), நகர் ஊரமைப்பு இயக்ககம் (DTCP) ஆகிய அரசு துறைகளுக்கு காயல்பட்டினம் நகராட்சியினால்
விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டது.
நகராட்சியின் விண்ணப்பத்திற்கு பதில் கூறிய நகர் ஊரமைப்பு இயக்கக இணை இயக்குனர் - இந்த சர்வே எண் CRZ பகுதிக்குள் வருகிறது என
20.10.2010 அன்று நகராட்சிக்கு கடிதம் அனுப்பினார்.
நகர் ஊரமைப்பு இயக்கக இணை இயக்குனர் 20.10.2010 அன்று நகராட்சிக்கு அனுப்பிய கடிதம்
இதனை - தொடர்ந்து, நகராட்சிக்கும் சில அரசு துறைகளுக்கும் கடித போக்குவரத்து சில காலங்கள்
நடந்தது. ஒப்புதல் சம்பிரதாயங்கள் சில மாதங்களுக்குள் முடிவுரவேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் இடத்தை
வழங்கியிருந்ததால், குப்பைக்கொட்டுவதற்கான இடத்திற்கு அனுமதி பெறப்படாத சூழலில், இவ்விசயம் முடிவுற்றது.
2011ம் ஆண்டு புதிய நகர்மன்றம் பொறுப்பேற்றது. சில மாதங்களில் தமிழக அரசு - பயோ காஸ் திட்டத்தினை காயல்பட்டினம் நகராட்சிக்கு
வழங்கிய பின்னர், அத்திட்டத்திற்கான இடத்தேவை குறித்த கோரிக்கையை வைத்து - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், ஆகஸ்ட் 2012 இல் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை உட்பட நகரின் அனைத்து அமைப்புகளுக்கும்,
ஜமாஅத்துகளுக்கும் கோரிக்கை வைத்து கடிதம் எழுதினார்.
இந்நிலையில் - நகர்மன்ற உறுப்பினர்கள் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையை அணுகினர். டிசம்பர் 19, 2012 அன்று நடந்த கூட்டத்தில்
கீழ்க்காணும் தீர்மானங்களை ஐக்கிய பேரவை நிறைவேற்றியது.
நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கு ஐந்து ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகவும், மேற்படி நிலத்தை முஸ்லிம் ஐக்கிய பேரவை தெரிவு செய்து
தரும்படியாக, நமது நகர்மன்ற துணைத்தலைவர் உள்பட உறுப்பினர்கள் 18 பேர்களும் கையொப்பமிட்ட கோரிக்கை மனுவை நகர்மன்ற உறுப்பினர்கள்
13 பேர்கள் சென்ற 05-12-2012ம் தேதி பேரவைக்கு நேரில் வந்து அளித்தார்கள். மேற்படி மனுவை இக்கூட்டம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.
கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, ஐந்து ஏக்கர் நிலத்தை பேரவையின் மூலம் தெரிவு செய்து கொடுப்பதென முடிவு
செய்யப்பட்டது.
தேவைப்படுகின்ற நிலத்திற்கு அரசு நிர்ணயித்துள்ள விலை ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் ஒரு இலட்சம் மட்டுமே. கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள்
நகராட்சியின் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனத்தலைவருமான, பேரவையின் கெளரவ ஆலோசனை குழு உறுப்பினர்
மரியாதைக்குரிய அல்-ஹாஜ் வாவு எஸ்.செய்யது அப்துர்ரஹ்மான் அவர்கள், நமதூர் கடையக்குடி பகுதியில் தனக்குச் சொந்தமான நிலத்தில்
பேரவையின் வேண்டுகோளை ஏற்று, தேவைப்படுகின்ற ஐந்து ஏக்கர் நிலத்தை, அரசு நிர்ணயித்த விலைக்கே தருவதாக ஒப்புக்கொண்டு அறிவிப்பு
செய்ததை இக்கூட்டம் தக்பீர் முழக்கதுடன் வரவேற்று, அவர்களுக்கு ஊர் மக்களின் சார்பாக இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.
2009ஆம் ஆண்டே முன்னாள் நகர்மன்றத் தலைவரால் வழங்க முன்வரப்பட்ட அதே நிலம் தான் இதுவென்றாலும், CRZ விதிமுறைகளை மீறாதப்படி
இந்நிலம் பிரிக்கப்பட்டு, CRZ எல்லைகளுக்கு அப்பாற்பட்ட 5.5 ஏக்கர் இடம் தான் தற்போது நகராட்சிக்கு - முன்னாள் நகர்மன்றத் தலைவரால்
இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலத்திற்கான பத்திரப்பதிவு சமீபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, அக்டோபர் 24
வெள்ளிக்கிழமை அன்று அப்பத்திரத்தை மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமாரிடம் வழங்கும் நிகழ்வு மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஐக்கியப் பேரவை பொதுச் செயலாளர் ஹாஜி பிரபு சுல்தான், ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு முஹம்மது இஸ்மாயில் (எ) முத்து
ஹாஜி, உறுப்பினர் ஹாஜி ஜரூக், வாவு S.A.R. இப்றாஹீம், நகர்மன்ற உறுப்பினர்கள் அஷ்ரஃப், செய்யது முஹம்மது ஃபாத்திமா, சாரா
உம்மாள், ஜஹாங்கிர், முஹம்மது மெய்தீன், பீவி பாத்திமா, பதுருல்ஹக், மும்பை முஹைதீன், ரங்கநாதன் (எ) சுகு, பாக்கிய ஷீலா, ஜமால்,
சாமு சிகாபுத்தீன், அஜ்வாது மற்றும் சாமி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தற்போது வழங்கப்பட்டுள்ள நிலத்தினை சுற்றி 500 மீட்டர் அளவில் BUFFER ZONE அமைக்கப்படவேண்டும்; அப்பகுதியில் எந்த கட்டுமானத்திற்கும் அனுமதி வழங்க கூடாது (NO DEVELOPMENT ZONE); Municipal Solid Wastes (Management
and Handling) Rules, 2000 விதிகள்படி, இவ்விடத்தில் குப்பைகள் கொட்ட - அரசு அனுமதியும் பெறவேண்டும்; மேலும் இவ்விடத்திற்கான
அணுகு சாலை அமைப்பு பணிகள் போன்றவைகளும் நிறைவுற்ற பின்னரே - இந்த இடம் பயன்பாட்டிற்கு வரும் என தெரிகிறது.
இவ்விடத்தில் பயோ காஸ் நிலையம் அமைய சாத்தியக்கூறுகள் குறைவு என சில அதிகாரிகள் வாய்மொழியாக கூறியுள்ள நிலையில் -
அத்திட்டத்திற்கான பொருத்தமான இடம் குறித்து தொழில்நுட்ப அறிக்கை கோரப்பட்டுள்ளது. அவ்வறிக்கை பெறப்பட்ட பின்னரே, இவ்விடத்தில் பயோ
காஸ் திட்டம் இடம் பெறுமா, அல்லது வேறு இடத்தில் அமைய பெறுமா என முடிவு செய்யப்படும் என்றும் தெரிகிறது.
புகைப்படம் மற்றும் தகவலில் உதவி:
எம்.ஜஹாங்கிர்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 9:15 pm / 26.10.2014] |