காயல்பட்டினத்தில் நேற்று (அக்டோபர் 23 வியாழக்கிழமை) இரவில் இதமழை பெய்துகொண்டிருந்தது. சொளுக்கார் தெருவில், 21.30 மணியளவில் மின் கம்பிவடம் ஒன்று கம்பத்திலிருந்து அறுந்து, தரையில் தேங்கியிருந்த மழை நீர் மீது விழுந்தது.
இதைக் கண்ணுற்ற அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அவ்வழியே செல்வோர் மின் கம்பிவடத்தைத் தீண்டி விடாதவாறு எச்சரிக்கையுடன் பார்த்துக்கொண்டனர். பின்னர், காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்திற்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அழைப்பிற்கு விடையில்லை என்றும், நேரில் சென்று பார்த்தபோது அங்கு யாரும் இல்லை என்றும் அவ்விளைஞர்கள் கூறினர்.
நீண்ட முயற்சிகளுக்குப் பின், காயல்பட்டினம் மின் வாரிய துணைப் பொறியாளரை அவரது கைபேசியில் தொடர்புகொண்டு விபரத்தைக் கூற, அவரும் துரிதமாக நடவடிக்கை எடுத்ததன் பேரில், அடுத்த சில நிமிடங்களில் மின் வாரிய ஊழியர் வந்து, அப்பகுதியில் மின் வினியோகத்தைத் துண்டித்து, மின் கம்பத்தில் ஏறி, அறுந்து விழுந்த மின் கம்பிவடத்தைத் துண்டித்து எடுத்துச் சென்றார். இந்நிகழ்வு காரணமாக அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. அரை மணி நேரத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
தகவல்:
சொளுக்கு S.M.I.செய்யித் முஹம்மத் ஸாஹிப்
சொளுக்கார் தெரு - காயல்பட்டினம்
மின் வாரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |