புற்றுநோய் பதிவகம்:
காயல்பட்டினம் புற்றுநோய் காரணி கண்டறியும் மையம் (Cancer Fact Finding Centre - CFFC) ஏற்பாட்டில், சென்னை அடையார் புற்றுநோய் மையத்தின் மூலமாக - புற்றுநோய் பதிவகம் (CANCER REGISTRY) காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில், இம்மாதம் 12ஆம் நாள் (12-10-2014) ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில் துவக்கப்பட்டது.
துவக்க நிகழ்ச்சி:
துவக்க நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமை தாங்கினார். கே.எம்.டி.மருத்துவமனை நிர்வாகிகளான எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ, டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, CFFC சர்வதேச ஒருங்கிணைப்பாளர் ஹாஜி சாளை ஷேக் ஸலீம், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி மற்றும் அடையார் புற்றுநோய் மையத்தின் Senior investigators திரு.முருகைய்யா, திரு.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் கத்தீபு ஏ.ஆர்.எம்.எம்.மாமுனா லெப்பை கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார்.
சர்வதேச ஒருங்கிணைப்பாளர் உரை:
CFFC சர்வதேச ஒருங்கிணைப்பாளர் சாளை ஸலீம் அனைவரையும் வரவேற்றுப் பேசியதோடு CFFC பற்றிய அறிமுகவுரையாயாற்றினார்.அவரது உரைச் சுருக்கம்:-
காயல் நல மன்றங்களின் சேவை:
காயல்பட்டினத்திலுள்ள - பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலுள்ள மக்களுக்கு உதவுவதற்காக, தங்களாலியன்ற உதவிகளைத் தொடராக வழங்கி வரும் - காயல் நல மன்றங்களை நோக்கி, கடந்த சில ஆண்டுகளாக உதவி கோரி வரும் விண்ணப்பங்கள் பெரும்பாலும் புற்றுநோய் மருத்துவத்திற்கு பல லட்சம் ரூபாய் உதவி கேட்டு பெறப்பட்ட விண்ணப்பங்களேயாகும்.
CFFC துவக்கம்:
அதன் விளைவாக, அவர்களுள் ஒரு சிலர் இணைந்து துவக்கியதுதான் Cancer Fact Finding Committee - CFFC எனும் புற்றுநோய் காரணி கண்டறியும் குழு.
பரிசோதனைகள்:
காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கான காரணத்தை அறிந்துகொள்வதற்காக, நகரிலுள்ள காற்று, நீர், மளிகைக் கடைகளில் விற்கப்படும் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை - அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனைக் கூடங்களில் கொடுத்து, சோதனை செய்யப்பட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அடுத்தகட்ட செயல்திட்டங்கள் தீட்டப்பட்டு - ஒரு சில செய்து முடிக்கப்பட்டும், வேறு சில செய்ய வேண்டிய நிலையிலும் உள்ளன.
ஆலைக்கழிவுகளின் மாசு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல்:
CFFC செய்த முயற்சிகளின் படி, நகரிலுள்ள புற்றுநோய் பரவலுக்கு பல காரணங்கள் உணரப்பட்டாலும், காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள்ளேயே இயங்கி வரும் அமிலக் கழிவு தொழிற்சாலையான DCW ஆலை பெரும் அச்சுறுத்தலாக உணரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அந்த ஆலையால் தயாரிக்கப்படும் உற்பத்திப் பொருட்கள், அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்கள், அவற்றின் பக்க விளைவுகள், எதிர்பாராத விபத்துகள் நேர்ந்தால் எதிர்பார்க்கப்படும் மிக மோசமான சீரழிவுகள் ஆகியன குறித்து பொதுமக்களுக்கு - பொதுக்கூட்டங்கள், பிரசுரங்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் விழிப்புணர்வூட்டப்பட்டு வருகிறது.
KEPA துவக்கம்:
இது தொடர்பாக சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வலுவான அமைப்பு தேவை என்று கருதப்பட்டதையடுத்து, Cancer Fact Finding Committee என்ற பெயரிலிருந்த CFFC-யின் கடைசிக் கூட்டம், காயல்பட்டினம் ஃபாயிஸீன் சங்கத்தில் நடத்தப்பட்டு, அக்கூட்டத்தின் நிறைவில் “காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு - KEPA” என்ற பெயரில் புதிய அமைப்பு துவக்கப்பட்டு, அரசுப்பதிவும் செய்யப்பட்டது. அதன் கீழ் நகரில் பல்வேறு போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
CFFC பெயர் மாற்றம்:
அன்றிலிருந்து, Cancer Fact Finding Committee என்றிருந்த CFFC, “Cancer Fact Finding Centre - புற்றுநோய் காரணி கண்டறியும் நடுவம்” என்ற பெயரில் இயங்கத் துவங்கியது. நகரில் புற்றுநோய் தொடர்பான ஆய்வுப் பணிகளை மட்டும் முதன்மைச் செயல்திட்டமாகக் கொண்டு இவ்வமைப்பு தொடர்ந்து இயங்கி வருகிறது. இப்பயணத்தில் ஒரு மைல் கல்தான் தற்போது துவக்கப்படுகிற இந்த புற்றுநோய் பதிவகம் - Cancer Registry ஆகும்.
இவ்வாறு சாளை ஷேக் ஸலீம் பேசி தனதுரையை நிறைவு செய்தார்.
புற்றுநோய் பதிவகம் திறப்பு:
பின்னர், அடையார் புற்றுநோய் மையத்துடன் இணைந்து, கே.எம்.டி. மருத்துவமனையில் CFFC நடத்தவுள்ள புற்றுநோய் பதிவகம் - Cancer Registry திறக்கப்பட்டது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி பதிவகத்தைத் திறந்து வைத்து, அடையார் புற்றுநோய் மையத்தின் Senior investigators முருகைய்யா, செல்வகுமார் ஆகியோர் வழங்கிய Cancer Registry பதிவக புத்தகத்தை முறைப்படி பெற்றுக்கொண்டு CFFC நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்கள் இந்த முயற்சியை பாராட்டிப் பேசிய அவர் ''புற்றுநோய் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை; தற்போது முற்கூட்டியே கண்டறியும் நவீன கருவிகள், சிகிச்சைகள் எல்லாம் உள்ளன; புற்று நோய் குறித்து முற்கூட்டியே கண்டறிய சுய பரிசோதனை மற்றும் screening test செய்து இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்; ஷிஃபா ஹெல்த் அண்ட் வெல்ஃபர் அசோசியேஷன் போன்ற அமைப்புகள் மருத்துவத்திற்காக உதவி செய்து வருகின்றன'' என்று கூறி முடித்தார்.
CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் உரை:
அவரைத் தொடர்ந்து CFFC அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.தர்வேஷ் முஹம்மத், புதிதாகத் துவக்கப்பட்டுள்ள Cancer Registry குறித்த திட்ட விளக்கவுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
பெண் தன்னார்வலர்களைக் கொண்டு புற்றுநோய் குறித்து சர்வே:
கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு காயல்பட்டினத்தில் புற்றுநோயின் தாக்கம், அதனால் ஏற்படும் மரணம் பெருகி வருவது பல வகைகளில் உணரப்பட்டு, அதன் எதிரொலியாக - முதல் முயற்சியாக 2011ஆம் வருடம் இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் 40 பெண் தன்னார்வலர்களைக் கொண்டு காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடம் வீடு வீடாகச் சென்று, புற்றுநோய் பரவல் குறித்த தகவல்கள் (சர்வே) பத்தே நாட்களில் சேகரிக்கப்பட்டன. 95 சதவிகித மக்களின் ஒத்துழைப்புடன் நிறைவு பெற்ற அந்த survey முடிவில், 450க்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ள முடிந்தது.
தொழிலதிபர் எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் முயற்சி:
அதே காலகட்டத்தில் CFFC (Cancer Fact Finding Committee - புற்று நோய் காரணி கண்டறியும் குழு) உருவாக்கப்பட்டு அதன் மூலம் நகரில் பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையில் தொழிலதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் அவர்கள் முயற்சியில், சென்னை - அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் ஷாந்தா அவர்களை அக்டோபர் 01, 2011 அன்று காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, இதே கே.எம்.டி. மருத்துவமனை வளாகத்தில் மிகப்பெரிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அச்சமயம் இங்குள்ள புற்றுநோய் பரவல் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.
அடையார் புற்றுநோய் மையத்திற்குக் கோரிக்கைகள்:
இந்த கொடிய நோயிலிருந்து இப்பகுதி மக்களை மீட்டெடுக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக
>> அடையாறு புற்றுநோய் மையத்தின் மேற்பார்வையில் காயல்பட்டினத்தில் புற்றுநோய் பதிவகம் (Cancer Registry) அமைய வேண்டும்...
>> இந்நகரில் Cancer Screening பரிசோதனையைச் செய்திட நிரந்தரமாக வழிவகை செய்து தர வேண்டும்...
என்ற கோரிக்கைகளை முன்வைத்தோம்.
கோரிக்கைகள் ஏற்பு:
அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக தனதுரையில் தெரிவித்த டாக்டர் ஷாந்தா, அதற்குத் தகுந்தாற்போல் மருத்துவர் மற்றும் செவிலியை (நர்ஸ்) அடையாறு புற்றுநோய் மையத்திற்கு பயிற்சிக்கு அனுப்புமாறு அந்நிகழ்ச்சியின்போது கேட்டுக்கொண்டார். ஆனால் சில அசௌகரியங்களால் அது எங்களுக்குக் கைகூடாமல் போய்விட்டது.
ஆனால் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் அதனால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருவதைக் கருத்திற்கொண்டு இப்பணிகளை உடனே துவக்க வேண்டும் என்று கருதிய நாங்கள், நடப்பு அக்டோபர் 01ஆம் நாளன்று, டாக்டர் சந்தா அவர்களை சென்னையில் நேரடியாகச் சந்தித்து ஆலோசனை செய்தோம். ஏற்கனவே கூறியதைப் போன்றே ஆர்வமுடன் பேசினார்கள். நாங்கள் நேரில் முன்வைத்த அதே இரண்டு கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டார்கள்.
மாவட்டம் முழுமைக்குமான புற்றுநோய் பதிவகம்:
மேலும் தற்போது தமிழ்நாடு அரசின் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையும், அடையாறு புற்றுநோய் மையமும் இணைந்து cancer Registry செய்து வருவதாகவும், CFFC சார்பில் Cancer Registryயை காயல்பட்டினத்திற்கு மட்டுமின்றி, தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் பொறுப்பெடுத்துக் கொள்ளுமாறும் அவர்கள் கூறினார்கள். அதனை ஏற்றுக்கொண்டோம்.
எங்களைப் பொருத்த வரை இது கடினமான பணிதான் என்றாலும், இதன் முக்கியத்துவத்தை - தற்போதைய சூழ்நிலைகளைக் கவனத்தில் கொண்டு, இதற்கான பொறுப்பை CFFC ஏற்றுக்கொண்டுள்ளது.
இரு வகை பதிவு முறைகள்:
இரண்டு வகையான cancer Registryஐ CFFC மேற்கொள்ளவுள்ளது.
(1) அடையாறு புற்றுநோய் மையத்துடன் இணைந்து நடப்பாண்டு முதல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவலை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சென்று சேகரிப்பது. இதற்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு ஆயத்தமாக உள்ளது.
(2) Internal Registry. இது நமதூரில் மட்டும் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இறந்தவர்கள் பற்றிய தகவல் சேகரிப்பு. இதற்கென தனியாக விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டு, தேவையான தகவல்கள் அதன் மூலம் சேகரிக்கப்படும்.
பொதுமக்களுக்கு வேண்டுகோள்:
எனவே, நம் வருங்கால சந்ததியினரைக் காத்திடும் கடமை நமக்கு உண்டு என்பதை பொதுமக்கள் தயவுசெய்து மனதிற்கொண்டு, புற்றுநோயின் பாதிப்பு, இறப்பு குறித்த தகவலை தயங்காமல், மறைக்காமல் எங்களுக்குத் தெரிவிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
இதோ அருகிலுள்ள இந்த Cancer Registry அலுவலகம் அன்றாடம் காலை 09:30 மணி முதல் மாலை 05:00 மணி வரை திறந்திருக்கும். அதில் பெண் பொறுப்பாளர் ஒருவர் பணியில் இருப்பார். அவரிடம் இந்தத் தகவல்களை அளிக்கலாம். இதுபற்றிய பொதுமக்களுக்கான வேண்டுகோள் பிரசுரம் கூடிய விரைவில் அனைத்து வீடுகளுக்கும் வினியோகிக்கப்படும்.
இறப்புச் சான்றிதழில் இறப்பிற்கான காரணத்தைப் பதிவு செய்க!
மேலும் புற்றுநோயால் இறந்திருப்பின், நமதூர் நகராட்சியில் இறப்புச் சான்றிதழுக்குப் பதிவு செய்யும்போது, இறப்பிற்கான காரணத்தை மறைக்காமல் உண்மையான - முழுமையான தகவல்களைப் பொதுமக்கள் பதிய வேண்டும். அப்படிச் செய்தால்தான் சரியான புள்ளி விபரத்தை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவோ, அது குறித்து அரசிடம் வேண்டுகோள் வைக்கவோ முடியும்.
மாறாக, 450 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்... மாதம் 20 பேர் 30 பேர் புற்றுநோயால் இறக்கிறார்கள்... என்று நமக்குள்ளேயே சொல்வதையெல்லாம் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது. அரசின் கவனத்திற்கு சரியான புள்ளி விபரங்களை ஆதாரத்துடன் எடுத்துச் செல்ல வேண்டும். அதன் மூலம் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த Cancer Registry பணிகள் முறைப்படி மேற்கொள்ளப்படுகிறது.
புற்றுநோய் பரிசோதனை நிரந்தர மையம்:
CFFCயின் அடுத்த முயற்சி Cancer Screening Test இங்கு நிரந்தரமாக அமைப்பது. இதன் மூலம் புற்றுநோய் பரவலை முற்கூட்டியே - ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, இக்கொடிய நோயிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது. வருடத்திற்கு ஒருமுறை புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் நடத்துவதற்குப் பகரமாக, மாதம் இரண்டு முறை அல்லது மாதம் ஒருமுறை நடத்துவது. அவ்வப்போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
கே.எம்.டி. நிர்வாகத்திற்கு நன்றி:
இந்த முயற்சிக்கு எங்களுக்கு ஊக்கமளித்து, உதவி, ஒத்துழைப்புகளை தொடர்ந்து தந்து கொண்டிருக்கும் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் அவர்களுக்கு இந்த நல்ல நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காரணம், சில சமயம் நாங்கள் தளர்ந்து போனாலும் அவர்கள் தளராமல் எங்களைத் தொடர்புகொண்டு Cancer Registry குறித்து நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் அவர்களும் பங்கேற்பதாக இருந்த நிலையில், தனது தவிர்க்கவியலாத அலுவல் காரணமாக அவர்களால் கலந்துகொள்ள இயலாமல் போய்விட்டது. எல்லாம்வல்ல இறைவன் அவர்களுக்கும், எங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று மிகுந்த ஆர்வத்தோடு இந்த முயற்சியில் ஒத்துழைப்பு நல்கிடும் மருத்துவ மாமேதை பத்மபூஷன் டாக்டர் ஷாந்தா அவர்களுக்கும் நீடித்த ஆயுளையும், நோயற்ற வாழ்வையும் வழங்கட்டும். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
CFFCயின் இந்தப் பணிகளுக்கு ஒரு அறையை இலவசமாக தந்துதவுமாறு கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகிகளிடம் கேட்டபோது, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர்களும் மறுக்காமல் தந்துள்ளார்கள். அதற்காக மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் இத்தருணத்தில் எனது மனார்ந்த நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு, ஏ.தர்வேஷ் முஹம்மத் உரையாற்றினார்.
நகர்மன்றத் தலைவர் உரை:
அவரைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் உரையாற்றினார்.
அவரது சுருக்கவுரையில், உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள Pink October பற்றிக் கூறினார். தற்போது நகரில் அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதையும், அதைத் தடுத்திட வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது என்பதையும், இதில் பெண் தன்னார்வலர்கள் சமூக அக்கறையோடு செயலாற்றி வருவதும், இந்த cancer registry முயற்சியும் பாராட்டுக்குரியது என்றும் கூறி தனதுரையை நிறைவு செய்தார்.
அடையார் புற்றுநோய் மைய பிரதிநிதிகள் உரை:
இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவும், cancer registry பதிவக பொறுப்பாளர்களுக்கு பயிற்சியளிக்கவும் வருகை தந்திருந்த - அடையார் புற்றுநோய் மையத்தின் தலைமை ஆய்வாளர்களான (Senior Investigators) திரு. முருகய்யா, திரு. செல்வ குமார் ஆகியோர் உரையாற்றினர்.
புற்றுநோயின் வகைகள், அதன் தன்மைகள், அவற்றைத் தடுக்க வேண்டிய செயல்முறைகள், பதிவகத்தின் பணிகள், அதனால் விளையப் போகும் நன்மைகள், நலமான வாழ்வுக்குச் செய்ய வேண்டியவை / செய்யக் கூடாதவை என பல அம்சங்களை உள்ளடக்கி சுருக்கவுரையாற்றியதோடு, துவக்கப்பட்டுள்ள இப்பதிவகத்தின் செயல்பாடுகளுக்கு அடையார் புற்றுநோய் மையம் தனது முழு ஒத்துழைப்பையும் நிறைவாக அளிக்கும் என்று அவர்கள் தமதுரையில் கூறினர்.
சந்தேகங்களுக்கு விளக்கம்:
புற்றுநோய் மற்றும் புற்றுநோய் பதிவகம் தொடர்பாக நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் கேட்ட பல்வேறு சந்தேகங்களுக்கும் அவர்கள் விரிவான விளக்கமளித்துப் பேசினர்.
நன்றியுரை:
அதனைத் தொடர்ந்து CFFC செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் நன்றியுரையாற்றினார். அவரது உரைச் சுருக்கம்:-
CFFC துவங்கப்பட்டது முதல் இன்றளவும் செய்து வரும் அனைத்து நற்பணிகளுக்கும் துணை நிற்கும் எல்லாம்வல்ல அல்லாஹ்வுக்கு முதற்கண் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நகரில் புற்றுநோய் பரவலைத் தடுக்கும் நோக்குடன் செய்யப்படும் அனைத்து செயல்திட்டங்களுக்கும் முதுகெலும்பாய்த் திகழ்ந்து கொண்டிருக்கும் அனைத்துலக காயல் நல மன்றங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் யாவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
இடையறாத பணிகள் காரணமாக - எளிதில் சந்திக்க இயலாத சென்னை - அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் ஷாந்தா அவர்களை - அவர்களுடன் தனக்கிருந்த நெருங்கிய தொடர்பு மூலம் காயல்பட்டினத்திற்கு வரவழைத்து, இங்குள்ள புற்றுநோய் பரவல் குறித்து அவரை அறியச் செய்து, அவரது புற்றுநோய் மையத்தின் மூலம் - தூத்துக்குடி மாவட்டத்திற்காக தற்போது இந்த புற்றுநோய் பதிவகம் துவக்கப்படுவது வரை அனைத்திற்கும் மூல காரணமாய் விளங்கிக் கொண்டிருக்கும் தொழிலதிபர் ஹாஜி எல்.கே.எஸ்.செய்யித் அஹ்மத் அவர்களுக்கு இந்த நல்ல நேரத்தில் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏதோ சில தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்தோம்; அத்துடன் தன் பணி முடிந்தது என்றிருந்து விடாமல், இந்தப் புற்றுநோய் பதிவகத்திற்குத் தேவையான கணினி, ஜெராக்ஸ் ப்ரிண்டர், மரச் சாமான்கள் உள்ளிட்ட - தேவையான அனைத்துப் பொருட்களையும் வாங்கிட பொருளுதவியையும் அவர்கள் தன் தனிப்பொறுப்பில் செய்து தந்துள்ளதையும், மூன்று வருடங்களுக்கு முன்பே துவங்க வேண்டிய இந்த பதிவகம் சில அசௌகரியங்களால் எங்களால் துவங்க முடியாமல் தாமதமாகிக் கொண்டிருந்தபோது அவர்கள் எங்களுக்கு அடிக்கடி தொலைபேசி மூலம் நினைவுபடுத்தியும், விரைவில் துவக்கிட உற்சாகப்படுத்தியதையும் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
எங்களின் அன்பான வேண்டுகோளை ஏற்று, Cancer Registry செய்திட ஏற்பாடு செய்து தந்துள்ள, தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியுள்ள அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவர் டாக்டர் ஷாந்தா அவர்களுக்கும், அவர்கள் சார்பாக இந்த எளிய திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பல்வேறு பயனுள்ள தகவல்களை வழங்கிய அடையார் புற்றுநோய் மையத்தின் Senior investigators திரு.முருகைய்யா, திரு.செல்வகுமார் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றியை சமர்ப்பித்துக் கொள்கிறோம்.
இந்தப் பதிவகத்திற்காக இடம் தந்துள்ளதோடு, தொடர்ந்து பல்வேறு ஒத்துழைப்புகளையும் தந்து கொண்டிருக்கும் கே.எம்.டி. மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், குறிப்பாக மேலாளர் ஜனாப் கே.அப்துல் லத்தீஃப் அவர்களுக்கும் இத்தருணத்தில் CFFC நிர்வாகத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியினை சமர்ப்பித்துக் கொள்கிறோம்.
இந்த நல்ல காரியங்களுக்காக யார், யாரெல்லாம் தம் உடல், பொருள், ஆவி அனைத்தாலும் ஒத்துழைப்புகளை நிறைவாக வழங்கிக் கொண்டிருக்கின்றார்களோ அனைவருக்கும் எல்லாம்வல்ல அல்லாஹ் ஈருலகிலும் நல்லருள் புரிவானாக.
நமது இந்த நல்ல செயல்பாடுகளின் பலனாக, நம் நகரைப் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கப்பட்டதாக ஆக்கித் தருவானாக.
இவ்வாறு எஸ்.கே.ஸாலிஹ் பேசினார்.
ரியாத் காயல் நல மன்றம், இக்ராஃ கல்விச் சங்கம் ஆகியவற்றின் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் தமிழாக்கத்துடன் இறைப் பிரார்த்தனை செய்ய, அத்துடன் நிகழ்ச்சிகள் யாவும் நண்பகல் 11:45 மணியளவில் நிறைவுற்றன.
பங்கேற்றோர்:
இந்நிகழ்ச்சியில், துபை காயல் நல மன்றத்தின் பொருளாளர் முஹம்மத் யூனுஸ், தம்மாம் காயல் நல மன்ற துணைத் தலைவர் சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை நவாஸ், இலங்கை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.ஐ.புகாரீ, காயல்பட்டினம் ஐக்கியப்பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.ஷாஹுல் ஹமீத், கத்தர் காயல் நல மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் சொளுக்கு எம்.இ.செய்யித் முஹம்மத் சாஹிப் (சேம்ஸா),
ஜெய்ப்பூர் காயல் நல மன்ற தலைவர் எம்.ஏ.எஸ்.செய்யித் அபூதாஹிர், காயல்பட்டினம் ஐக்கியப்பேரவை - ஹாங்காங் அமைப்பின் உள்ளூர் பிரதிநிதி எஸ்.அப்துல் வாஹித், ஷிஃபா ஹெல்த் அண்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் நிர்வாகி எம்.என்.ஸிராஜுத்தீன், கே.எம்.டி. மருத்துவமனை மேலாளர் கே.அப்துல் லத்தீஃப், காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்ஜஹாங்கிர், எஸ்.ஐ.தஸ்தகீர், எஸ்.எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ், எம்.அஹமது உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
புற்றுநோய் பதிவக பயிற்சி முகாம்:
மறுநாள் - 13.10.2014 திங்கட்கிழமையன்று 10.00 மணி முதல் 13:45 மணி வரை, புற்றுநோய் பதிவக பயிற்சி முகாம் கே.எம்.டி. மருத்துவமனையின் டைமண்ட் ஹால் கூட்ட அரங்கில் நடைபெற்றது. அடையார் புற்றுநோய் மையத்தின் Senior investigators முருகய்யா, செல்வகுமார் ஆகியோர் powerpoint presentation மூலம் விரிவான விளக்கங்களுடன் பயிற்சியளித்தனர்.
இதில், CFFC அங்கத்தினர்களான ஏ.தர்வேஷ் முஹம்மத், எம்.எஸ்.முஹம்மது ஸாலிஹ், பதிவகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பெண் பொறுப்பாளர், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களான மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ ஏ.எம்.முஹ்யித்தீன் லெப்பை ஸக்காஃபீ, ‘ஜாஸ் பெர்ஃப்யூம்ஸ்’ ஜெ.ஏ.அப்துல் ஹலீம், ஹாஃபிழ் எஸ்.எம்.எஸ்.மஹ்மூத் ஹஸன், ஹாஃபிழ் கே.எம்.முத்து இஸ்மாஈல், ரியாத் காயல் நல மன்றம் மற்றும் இக்ராஃ கல்விச் சங்கத்தின் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷேக் தாவூத் இத்ரீஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மதிய உணவு இடைவேளைக்குப் பின், காயல்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று cancer registry பதியப்படும் விதம் பற்றியும், கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அடையார் புற்றுநோய் மைய பிரதிநிதிகள் விளக்கிக் கூறினர்.
அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரைச் சந்தித்த அவர்கள், CFFC தலைமை ஒருங்கிணைப்பாளர் ஏ.தர்வேஷ் முஹம்மதை அறிமுகப்படுத்தி, தூத்துக்குடி மாவட்டத்திற்கான cancer registry பொறுப்பை CFFC ஏற்றுள்ளதாகவும், தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் கேட்டுக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து CFFC தனது பதிவகப் பணிகளை (Cancer Registry) அன்றே துவங்கும் விதத்தில் அரசு மருத்துவமனை பதிவேட்டிலிருந்து பதிவு செய்து கொண்டது.
தகவல்:
A.தர்வேஷ் முஹம்மத்
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
புற்றுநோய் காரணி கண்டறியும் நடுவம் - Cancer Fact Finding Centre (CFFC)
காயல்பட்டினம்
CFFC தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 06:47 / 26.10.2014] |