உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடை பெற்றது. இது குறித்து இக்ராஃ செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கை:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளாக கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, I.T.I. போன்ற படிப்புகளுக்கு வருடந்தோறும் 50 முதல் 60 மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடம் அனுசரணை பெற்று வழங்கப்பட்டு வருகிறது.
ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகைக்கு நேர்காணல்:
இது தவிர கடந்த நான்கு ஆண்டுகளாக இக்ராஃவுக்கு ஜகாத் நிதி தனியாக சேகரிக்கப்பட்டு அதற்கு தகுதி வாய்ந்த மாணவ-மாணவியர் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்வி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதுபோன்று இவ்வருடமும் (2014-15) இக்ராஃவின் ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்த மாணவ-மாணவியருக்கான நேர்காணல் கடந்த 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணி முதல் 12.30 மணி வரை, காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவிலுள்ள இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
கடந்த 16-06-2014 அன்று நடைபெற்ற இக்ராஃவின் செயற்குழுக் கூட்டத்தில் ஜகாத் நிதிக்கு நேர்காணல் செய்திட தேர்ந்தெடுக்கப்பட்ட குழுவினர்களில், இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் ஆகியோர் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர். இக்ராஃ மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூது, நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் இதன்போது உடனிருந்தனர்.
18 மாணவர்கள், 4 மாணவியர் உட்பட மொத்தம் 22 மாணவ-மாணவியர் இந்த நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர், அவர்களுக்கான கல்வி உதவித்தொகை - (இக்ராஃவின் நடப்பாண்டில் சேகரிக்கப்பட்ட ஜகாத் நிதித்தொகையான ரூ.2,27,000/-) அடுத்த சில நாட்களில் வழங்கி முடிக்கப்பட்டது.
திருக்குர்ஆனை மனனம் செய்து முடித்துள்ள ஹாஃபிழ் மாணவர்கள், பள்ளிவாசல்களில் பணிபுரியும் இமாம் - பிலால்களின் மக்களுக்கு இந்நேர்காணலில் முன்னுரிமை வழங்கப்பட்டதுடன், சிறப்புத் தேர்ச்சி மதிப்பெண் (மெரிட்) பெற்றிருந்த மாணவ-மாணவியருக்கு மற்ற மாணவர்களை விட கூடுதலாக உதவித்தொகை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நேர்காணலில் பங்கேற்ற மாணவர்கள் பெரும்பாலும் பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ., உள்ளிட்ட படிப்புகளுக்காக உதவித்தொகை கோரியிருந்தனர். மாணவியர் - பிஸியோதெரோபி, பி.எட். , B.Tech (Pharmaceutical Technology Programme ) உள்ளிட்ட படிப்புகளுக்காக கல்வி உதவித்தொகை கோரியிருந்தனர்.
இக்ராஃ ஜகாத் நிதியைப் பொருத்த வரை,
2010-11ஆம் வருடம் ரூபாய் 48,800/- கிடைக்கப் பெற்று 5 மாணவ-மாணவியருக்கும்,
2011-12ஆம் வருடம் ரூபாய் 91,000/- கிடைக்கப்பெற்று 10 மாணவ-மாணவியருக்கும்,
2012-13ஆம் வருடம் ரூபாய் 4,36,400/- கிடைக்கப்பெற்று 39 ஏழை-எளிய மாணவர்களுக்கும்,
2013-14ஆம் வருடம் ரூபாய் 2,40,600/- கிடைக்கப்பெற்று 25 மாணவ-மாணவியருக்கும்,
இவ்வருடம் (2014-15) ரூபாய் 2,27,000/- கிடைக்கப்பெற்று 22 மாணவ-மாணவியருக்கும்
கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
வழமையான கல்வி உதவித்தொகைக்கு நேர்காணல்:
இது தவிர முன்னதாக உலக காயல் நல மன்றங்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களின் அனுசரணைகளுடன், நமது இக்ராஃ கல்விச் சங்கத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டு (2014-15) கல்வி உதவித்தொகை பெற பட்டப்படிப்பு, தொழிற்கல்வி பயிலும் மாணவ-மாணவியர் 69 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
வழமை போன்று இவ்விண்ணப்பங்கள் மூன்றடுக்கு விசாரணையின் கீழ் பரிசீலிக்கப்பட்டுள்ளன. துவக்கமாக, விண்ணப்பப் படிவங்களிலுள்ள ஜமாஅத் சான்றறிக்கை பரிசீலிக்கப்பட்டது. இரண்டாவதாக விண்ணப்பதாரர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில், இக்ராஃ நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத், பொருளாளர் கே.எம்.டீ.சுலைமான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள் இக்ராஃவிற்கு நேரடியாக அழைக்கப்பட்டு, நேர்காணல் செய்யப்பட்டனர். இந்த நேர்காணல் நிகழ்ச்சி, 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 09.45 மணி முதல் மதியம் 01:45 மணி வரை காயல்பட்டினம் கீழ நெய்னா தெருவில், இக்ராஃ கல்விச் சங்க அலுவலகத்திற்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில் நடைபெற்றது.
இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக் தம்பி, ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல், ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக் மற்றும் இக்ராஃ செயலர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் ஆகியோரடங்கிய குழு, நடப்பாண்டு இக்ராஃவின் கல்வி உதவித்தொகையைப் பெற விண்ணப்பித்த மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தது.இவர்களுக்கு உதவியாக இக்ராஃவின் பொருளாளர் கே.எம்.டி.சுலைமான் மற்றும் நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்நேர்காணலில், 21 மாணவர்கள், 24 மாணவியர் - நடப்பாண்டு (2014-15) கல்வி உதவித்தொகை பெற தேர்வு செய்யப்பட்டனர். இதில் 7 மாணவ-மாணவியருக்கு அவர்களுக்கான முழுக் கல்விக் கட்டணமும் மூன்றாண்டுகளுக்கு பொறுப்பேற்கப்பட்டு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ - மாணவியருள் பலர் ஆதரவற்றவர்கள்; வறுமையில் வாழ்ந்து வருபவர்கள் என்பதும், இவர்களை நம்பியே இவர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன என்பதும், இந்த மாணவ - மாணவியருக்குத் தேவையான வழிகாட்டுதலும், மேற்படிப்பு குறித்த ஆலோசனைகளும் இந்நேர்காணலின்போது வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இக்ராஃவின் முறையான கல்விப்பணிகளை நேரில் கண்டும், கேள்விப்பட்டும் ஏராளமான கல்வி ஆர்வலர்களும், நன்கொடையாளர்களும், காயல் நல மன்றங்களும் தாங்களாகவே முன்வந்து கல்விக்காக ஸதக்கா மற்றும் ஜக்காத் நிதி வழங்கி வருவது குறித்து இக்ராஃ நிர்வாகம் மிகுந்த மகிழ்ச்சியையும், நிதி வழங்கியவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு, இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.ஜே.ஷாஹுல் ஹமீது தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம் - காயல்பட்டினம்
இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் கடந்தாண்டு (2013-2014) ஜகாத் நிதியின் கீழான கல்வி உதவித்தொகைக்கு நேர்காணல் செய்யப்பட்டது தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் சார்பில் கடந்தாண்டு (2013-2014) வழமையான கல்வி உதவித்தொகைக்கு நேர்காணல் செய்யப்பட்டது தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |