வேலை தேடி வரும் மாணவர்களுக்காக பெங்களூருவில் அமைக்கப்பட்டுள்ள விடுதியில் தங்க வரும் ஏழை மாணவர்களின் கட்டணத்தை மன்றம் ஏற்கும் என கர்நாடக மாநிலம் - பெங்களூரு கா.ந.மன்றப் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
பொதுக்குழுக் கூட்டம்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் எமது பெங்களூரு காயல் நல மன்றத்தின் 13ஆவது பொதுக்குழுக் கூட்டம், 19.10.2014 ஞாயிற்றுக்கிழமையன்று, பெங்களூரு எம்.ஜி. சாலையிலுள்ள மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி அலுவலகத்தில் நடைபெற்றது.
ஹாஜி ஜபரூத் மவ்லானா கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் வி.டி.என்.மஹ்மூத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
ஹாஃபிழ் மன்னர் பி.ஏ.செய்யித் அப்துர் ரஹ்மான் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தி, கூட்ட அறிமுகவுரையாற்ற, ஹாஃபிழ் அப்துல்லாஹ் முஹாஜிர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை மற்றும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான மன்ற நடவடிக்கைகள் குறித்து மன்றச் செயலாளர் இப்றாஹீம் நவ்ஷாத் விளக்கிப் பேசினார்.
தலைமையுரை:
மன்றத் தலைவர் பி.எஸ்.ஏ.எஸ்.ஜெய்த் நூருத்தீன் தலைமையுரையாற்றினார்.
கடந்த ஆண்டை போன்று இவ்வாண்டும் செயற்குழு உறுப்பினர்கள் மிகசிறப்பாக செயலாற்றிடவும், கடந்த ஆண்டில் நிலுவையில் உள்ள சந்தா தொகைகளை உறுப்பினர்களிடமிருந்து வசூலித்து மன்றத்தின் நகர்நலப் பணிகள் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மன்றத்தால் நடத்தப்படும் கூட்டங்கள் உறுப்பினர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார்.
புதிய உறுப்பினர்கள் அறிமுகம்:
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சிறப்பழைப்பாளர்களும், காயல்பட்டினத்திலிருந்து பெங்களூருக்கு புதிதாக வந்துள்ள மன்றத்தின் புதிய உறுப்பினர்களும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
மன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Mentor and Mentee Programme குறித்து, மன்ற துணைத்தலைவர் ஜபரூத் மவ்லானா விளக்கிப் பேசினார்.
கருத்துப் பரிமாற்றம்:
உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டது. மன்றம் மற்றும் நகர்நலன் குறித்த பல்வேறு கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
தீர்மானங்கள்:
கீழ்க்காணும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1: அடுத்த கூட்டம் குடும்ப ஒன்றுகூடல்:
மன்றத்தின் அடுத்த - 14ஆவது பொதுக்குழுக் கூட்டத்தை எதிர்வரும் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 07ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தேவனஹல்லியிலுள்ள மர்ஹூம் ஆடிட்டர் பி.எஸ்.எம்.புகாரீ ஹாஜி ஃபர்ம் ஹவுஸில் இன்ஷாஅல்லாஹ் குடும்ப ஒன்றுகூடல் நிகழ்ச்சியாக நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிகள் யாவற்றையும் ஒருங்கிணைக்க,
ஹாஃபிழ் கே.எஸ்.எம்.எல்.முஹம்மத் உமர் (Majestic),
ஹாஃபிழ் வி.டி.என்.மஹ்மூத் (BTM Layout),
குலாம் (Hulsoor)
ஷேக் சுலைமான் (KR Puram)
ஆகியோரிடம் பொறுப்பளித்தும், அவர்களுக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் மன்ற நிர்வாகக் குழு முறைப்படி செய்யவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2: ஏழை மாணவர்களின் விடுதிக் கட்டணத்தை மன்றம் ஏற்கும்:
மன்றத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் மாணவர் தங்கும் விடுதியில் தங்க வரும் ஏழை மாணவர்களுக்கு, அவர்களின் கட்டணத்தை தொகை ரூபாய் 500ஐ மன்றம் பொறுப்பெடுத்துக்கொள்ள இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 - மண வாழ்த்து:
அண்மையில் மணவாழ்வு கண்டுள்ள மன்ற உறுப்பினர் ஷெய்க் அப்துல் காதிர், ஹாஃபிழ் அப்துல் கரீம் ஃபாயிஸ் ஆகியோரின் அவர்களின் புதுமணவாழ்வு சிறக்க இக்கூட்டம் மனதார வாழ்த்துகிறது.
தீர்மானம் 4 - பாராட்டுத் தீர்மானங்கள்:
1) ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன், மைக்ரோகாயல், அபூதபீ காயல் நல மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து இம்மாதம் 17, 18, 19 (வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் மகளிருக்கான இரத்த சோகை தடுப்பு முகாம்
2) சஊதி அரபிய்யா தம்மாம் காயல் நற்பணி மன்றம் - காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து, காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள பள்ளி மாணவ-மாணவியருக்கிடையிலான 3ஆவது அறிவியல் கண்காட்சிப் போட்டி மற்றும் விஞ்ஞான விந்தைகள் நிகழ்ச்சி
3) கத்தர் கா.ந.மன்றம், ஹாங்காங் பேரவை, ஷிஃபா இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்
ஆகிய நிகழ்ச்சிகளை - நகர்நலன் கருதி நடத்தியமைக்கும்,
4) கடந்த ரமழான் மாதத்தில் இந்திய சமூக - கலாச்சார மையம் மற்றும் அபூதபீ அவ்காஃப் இணைந்து நடத்திய - உலகளாவிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் பெற்ற - அபூதபீ காயல் நல மன்ற உறுப்பினர் ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ அவர்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்து மகிழ்கிறது.
தீர்மானம் 5 - மறைந்தோருக்கு இரங்கல்:
காயல்பட்டினம் - சென்னை வழிகாட்டு மையம் (KCGC) அமைப்பின் துணைத்தலைவர் எச்.என்.ஸதக்கத்தல்லாஹ்வின் தந்தை - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எம்.எஸ்.ஹஸன் நெய்னா.
நுஸ்கியார் அறக்கட்டளையின் நிறுவனர் மர்ஹூம் நுஸ்கீ ஹாஜியாரின் மகள் டாக்டர் மும்தாஜ் உடைய கணவர் - காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த முஹம்மத் இக்பால்,
கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ‘பொக்கு’ ஹுஸைன் ஹல்லாஜ் உடைய மாமியார், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவைச் சேர்ந்த ஏ.எச்.முஹம்மத் ஆயிஷா உம்மாள்,
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் இணைச் செயலர் ஹாஜி எஸ்.எம்.யூஸுஃப் ஸாஹிப் உடைய சகோதரர் - ஸீ-கஸ்டம்ஸ் சாலையைச் சேர்ந்த ஹாஜி உ.ம. எஸ்.முஹம்மத் அலீ தம்பி
ஆகியோர் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவர்களின் மறுமை நல்வாழ்விற்காக மனதார பிரார்த்திக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, இக்கூட்டம் சிறப்புற நடந்தேற அருள் செய்த அல்லாஹ்வுக்கும், மன்றத்தின் அனைத்துறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள், சிறப்பழைப்பாளர்கள், இடவசதி செய்து தந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் மனப்பூர்வமான நன்றி தெரிவிக்கப்பட்டது.
துஆ - ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது, எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்.
இக்கூட்டத்தில், மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீர், சமோஸா சிற்றுண்டி வழங்கி உபசரிக்கப்பட்டது. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
முஹம்மத் இப்றாஹீம் நவ்ஷாத்
ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான்
படங்கள்:
மூஸா நெய்னா
ஹாஃபிழ் V.D.N.மஹ்மூத்
பெங்களூரு காயல் நல மன்றத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
பெங்களூரு காயல் நல மன்றம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |