கத்தர் காயல் நல மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, வினாடி-வினா போட்டி மற்றும் பரிசளிப்புடன் நடந்து முடிந்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
பெருநாள் ஒன்றுகூடல்:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், நடப்பு ஹஜ் பெருநாளையொட்டிய எமது கத்தர் காயல் நல மன்றத்தின் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, ஹஜ் பெருநாளான அக்டோபர் 04 சனிக்கிழமையன்று, 15.30 மணியளவில், கத்தர் அருங்காட்சியக பூங்காவில் நடைபெற்றது.
ஹாஃபிழ் நூஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மன்றத்தில் புதிதாக உறுப்பினர்களானவர்கள் இக்கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
தலைமையுரை:
நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் தலைமையுரையாற்றினார். அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்களைக் கூறி தனதுரையைத் துவக்கி அவர், புதிய உறுப்பினர்களை வரவேற்றும், உறுப்பினர்களுக்கிடையே ஒற்றுமையுடன் கூடிய செயல்பாடுகளை வலியுறுத்தியும் பேசினார். காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்புடன் இணைந்து, அக்டோபர் 12 அன்று மன்றம் நடத்தும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில், மன்ற உறுப்பினர்கள் தம் குடும்பத்தினர் அனைவரையும் கலந்துகொள்ளச் செய்யுமாறு அவர் தனதுரையில் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தவராக அவர் தனதுரையை நிறைவு செய்தார்.
வினாடி-வினா போட்டி:
மஃரிப் தொழுகைக்குப் பின் வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. மன்ற உறுப்பினர்கள் 7 அணியினராகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்ட இப்போட்டியை, தலைவர் எஸ்.ஏ.ஃபாஸுல் கரீம் நடத்தினார். ஹாஃபிழ் ஸதக்கத்துல்லாஹ், ஃபாரூக் அப்துல்லாஹ் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.
போட்டியின் நிறைவில், ஹாஃபிழ் ஏ.எச்.ஹபீப் முஹம்மத் நஸ்ருத்தீன் தலைமையிலான அணி முதற்பரிசையும், வி.எம்.டீ.அப்துல்லாஹ் தலைமையிலான அணி இரண்டாவது பரிசையும், கே.எம்.எஸ்.மீரான் தலைமையிலான அணி மூன்றாவது பரிசையும் பெற்றன.
மழலையருக்கு ஊக்கப்பரிசுகள்:
ஒன்றுகூடலில் பங்கேற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் ஊக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர் கவுரவிப்பு:
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கிய - இ.டீ.ஏ. அஸ்கான் நிறுவனத்தின் கத்தர் பிரிவிற்கான பொது மேலாளர் முஹம்மத் அப்பாஸுக்கு, மன்றத் தலைவர் சிறப்புப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினார்.
சிற்றுண்டி:
நன்றியுரை, துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் திரளாகக் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தேனீரும், சுண்டல், சாண்ட்விச் அடங்கிய சிற்றுண்டி பரிமாறப்பட்டது. நிறைவில் அனைவரும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஹாஃபிழ் எம்.எம்.எல்.முஹம்மத் லெப்பை, பொக்கு ஹல்லாஜ், முஹம்மத் முஹ்யித்தீன் என்ற மம்மி ஆகியோர், அனைத்து நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் சிறப்புற செய்திருந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
உள்ளூர் பிரதிநிதி
கத்தர் காயல் நல மன்றம்
கத்தர் காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ஹஜ் பெருநாளையொட்டி நடத்தப்பட்ட பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கத்தர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |