உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் சார்பில், மருத்துவ உதவி நிதியாக இதுவரை சுமார் 28.5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக - அதன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அவ்வமைப்பின் நிர்வாகி கண்டி ஸிராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் அசோஸியேஷன் கலந்தாலோசனைக் கூட்டம், 11.10.2014 சனிக்கிழமை மாலை 05.00 மணியளவில், காயல்பட்டினம் 289ஏ, சதுக்கைத் தெரு, பிரபு மன்ஸில் என்ற முகவரியில் அமைந்துள்ள ஷிஃபா அலுவலகத்தின் முதல் தளத்தில், ஷிஃபாவின் துணைத்தலைவர் சகோ.ஜெ.செய்யித் ஹஸன் தலைமையில் நடைபெற்றது.
ஷிஃபா செயற்குழு உறுப்பினர் எம்.ஐ.மெஹர் அலீ, துபை காயல் நல மன்றப் பொருளாளர் முஹம்மத் யூனூஸ், மலபார் காயல் நல மன்றத் தலைவர் மஸ்ஊத் ஆகியோர் முன்னிலை வகித்த இக்கூட்டத்திற்கு ஷிஃபா துணைத்தலைவர் ஜெ.செய்யித் ஹஸன் தலைமை தாங்கினார். ரியாத் காயல் நல மன்றத் தலைவரும், இக்ராஃ கல்வி சங்கத்தின் தலைவருமான ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
கூட்டத்திற்கு வருகை தந்த காயல் நல மன்ற பிரதிநிதிகள், ஷிஃபா அங்கத்தினர் அனைவரையும், தம்மாம் காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை ஜியாவுத்தீன் வரவேற்றுப் பேசினார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டத் தலைவர் விளக்கிப் பேசினார்.
புதிதாக வடிவமைக்கப்பட்ட ஷிஃபா விண்ணப்பப் படிவம் கூட்டத்தில் காண்பிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
மனுக்களின் நிலை:
கடல் கடந்து வாழும் நமது காயல் சகோதரர்களின் முழுமையான பங்களிப்பால் நமது காயல் சகோதர, சகோதரிகளின் மருத்துவ நலனில் அக்கறை கொண்டு, பல்வேறு மருத்துவ நலச் சேவையாற்றி வரும் நமது ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் அசோஸியேஷன் மூலம் மருத்துவ நிதியுதவி கோரி பெறப்பட்ட மனுக்கள் மற்றும் நிறைவுபெற்ற 102 மனுக்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி விபரம் வருமாறு.
மருத்துவ உதவி கோரி ஷிஃபாவால் இதுவரை பெறப்பட்டுள்ள மொத்த மனுக்கள் 123
அங்கீகரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட மனுக்கள் 112
வெளியிடப்பட காத்திருக்கும் மனுக்கள் 6
விசாரணை நிறைவு செய்யப்பட்டு மருத்துவரின் குறிப்புக்காகக் காத்திருக்கும் மனுக்கள் 2
நமது விசாரணைக்காக உள்ள மனுக்கள் 3
நிறைவுபெற்ற 102 மனுக்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ நிதியுதவி மொத்தத் தொகை ரூபாய் 28 லட்சத்து 38 ஆயிரத்து 711 (ரூபாய் 28,38,711).
பங்களிப்பிற்கு நன்றி:
ஷிஃபாவின் அலுவலகத் தேவைக்கு 4 மின் விசிறிகளை அன்பளிப்பாக வழங்கிய ரியாத் காயல் நல மன்றத்திற்கும்,
12 நாற்காலிகளுக்கு பங்களிப்பு வழங்கிய காயல்பட்டினம் கரூர் டிரேடர்ஸ் நிறுவனத்தாருக்கும்,
ஷிஃபாவின் அலுவலக தேவைக்குரிய உபகரணங்களை அன்பளிப்புச் செய்த ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஜட்னி முஹம்மத் லெப்பை அவர்களுக்கும் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
சிறப்பாக செயலாற்றி வரும் ஷிஃபா மருத்துவ குழுவினர்களது சேவை மேலும் சிறப்படைய வாழ்த்தப்பட்டு, அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
புற்று நோய் பரிசோதனை முகாம்:
கத்தர் காயல் நல மன்றம், காயல்பட்டினம் ஐக்கிய பேரவை ஹாங்காங், ஷிஃபா ஆகியன திருச்சி ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகத்துடன் இணைந்து, KMT மருத்துவமனையில் அக்டோபர் 12 அன்று நடத்தும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமில் அனைவரும் பங்கேற்குமாறும், குடும்பத்தினரையும் பங்கேற்கச் செய்யுமாறும் கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இரத்த சோகை தடுப்பு முகாம்:
மைக்ரோகாயல், ஷிஃபா அமைப்புகளுடன் இணைந்து அபூதபீ காயல் நல மன்றம் நடத்தும் இரத்த சோகை பரிசோதனை இலவச முகாமை (ஹீமோகுளோபின் சோதனையை) அக்டோபர் 17,18,19 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில்
1) ஷிஃபா அசோசியேஷன் அலுவலகம்
2) KMT மருத்துவமனை
3) மைக்ரோகாயல் அலுவலகம்
ஆகிய இடங்களில் நடத்தவுள்ளதாகவும், இம்முகாமிலும் அனைவரும் தம் குடும்பத்தினரைப் பங்கேற்கச் செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம் செய்ய நேரம் ஒதுக்கப்பட்டது. அதில், ஷிஃபாவின் நடப்பு மற்றும் வருங்கால செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜித்தா காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஜட்னி முஹம்மத் லெப்பை கூட்ட ஏற்பாடுகளுக்கு அனுசரணையளித்தமைக்காகவும், அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றமைக்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டது. துபை காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.அப்துல் ஹமீத் நன்றி கூறினார்.
ரியாத் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் பீ.எஸ்.ஜெ.ஜெய்னுல் ஆபிதீன் துஆ இறைஞ்ச, ஸலவாத் - கஃப்பாராவுடன் - மஃரிப் வேளை நெருங்குகையில், கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் முந்தைய கூட்டம் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |