சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றப் பொதுக்குழுக் கூட்டத்தில், நகர்நலப் பணிகளுக்காக - ஓருநாள் ஊதிய நன்கொடையாக ரூபாய் 72 ஆயிரம் தொகை திரட்டப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருவருளால் எமது ரியாத் காயல் நற்பணி மன்ற 48ஆவது பொதுக்குழுக் கூட்டம் 26.09.2014 வெள்ளிகிழமையன்று மஃரிப் தொழுகைக்கு பின் ஃபத்ஹா ஷிஃபா அல்ஜஸீரா பாலி க்ளினிக் பார்ட்டி ஹாலில், மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளை ஹாஃபிழ் பீ.எஸ்.ஜெ. ஜைனுல் ஆப்தீன் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
ஹாபிழ்.ஹம்ஸா ழாஃபிர் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கிவைக்க, ஆலோசனைக் குழு உறுப்பினர் சகோதரர்.கூஸ் அபூபக்கர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். மன்ற உறுப்பினர் இன்னிசைத் தென்றல் அய்யம்பேட்டை பக்கீர் முஹ்யித்தீன், உறுப்பினர் குளம் ஷெய்கு அப்துல் காதிர் ஆகியோர் தமதினிய குரலால் இஸ்லாமிய பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர்.
தலைவர் உரை:
மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் தலைமையுரையாற்றினார்.
ஊரிலிருந்து உதவி கோரி வரும் விண்ணப்பங்களை மன்றம் விரைவாக பரிசீலிப்பதால் பயனாளிகள் உரிய நேரத்தில் பயனடைந்து வருவதாகவும், அவர்களுள் பலர் நம் யாவருக்காகவும் துஆ செய்ததாகவும் கூறிய அவர், இக்ராஃவின் செயல்பாடுகள் குறித்தும் - அதில் RKWA உறுப்பினர்களின் முக்கியத்துவத்தை விளக்கியும் பேசினார்.
தொகுப்புரை:
மன்ற ஆலோசகர், எம்.இ.எல்.செய்யித் அஹ்மத் நுஸ்கீ தொகுப்புரையாற்றினார். மன்ற உறுப்பினர்களின் சந்தா மற்றும் நன்கொடைகள் தொய்வின்றி வருவதாவும், முகமலர்ச்சியுடனும் - திருப்தியுடனும் உறுப்பினர்கள் தம் பங்களிப்பைத் தருவது மன்ற நிர்வாகச் செயல்பாடுகளுக்கு சிறந்த ஊக்கமளித்து வருவதாகவும் கூறினார்.
வட்டியில்லா கடன் வழங்குவதற்காக காயல்பட்டினத்தில் துவக்கப்பட்டுள்ள ஜன்சேவா குறித்துப் பேசிய அவர், இந்த நல்ல திட்டத்தில் அனைவரும் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.
செயற்குழு உறுப்பினர் ஹைதர் அலி அவர்கள் நல்ல பல ஆலோசனைகள் வழங்கினார். மன்ற செயற்குழு உறுப்பினர் கூஸ் அபூபக்கர் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் கூறி உரையாற்றினார்.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
இப்பொதுக்குழுவின்போது, உறுப்பினர்கள் தம் ஒருநாள் ஊதியத்தை வெள்ளை உறையில் வைத்து, அதற்கென வைக்கப்பட்டிருந்த பெட்டியில் செலுத்தினர். உறுப்பினர்கள் முன்னிலையில் கணக்கிடப்பட்டதில், ரூபாய் 72 ஆயிரம் நிதி திரட்டப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வினாடி வினா போட்டி:
உறுப்பினர் சூப்பர் செய்து இப்ராகிம் தொகுப்பில் உருவான அழகிய வினாடி-வினா போட்டி நடைபெற்றது. உறுப்பினர்கள் 4 அணிகளாகப் பிரிக்கப்பட்டு, 6 சுற்றுக்களாக அமைத்து நடத்தப்பட்டது. போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. இறுதியாக முதல் மூன்று அணியினருக்கு அனுசரணையோடு கூடிய அழகான பரிசுகளும் வழங்கப்பட்டன.
நன்றியுரை:
செயற்குழு உறுப்பினர் இஸ்மத் நவ்ஃபல் நன்றியுரையாற்ற, ஹாஃபிழ் பீ.எஸ்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீனின் இறைப்பிரார்த்தனைக்குப் பின் காயல் களரி கறி விருந்துடன் நிகழ்ச்சிகள் யாவும் இறையருளால் இனிதே நிறைவுற்றன. அனைத்து நிகழ்ச்சிகளிலும் மன்ற உறுப்பினர்கள், சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நோனா செய்யித் இஸ்மாஈல்
செய்தி தொடர்பாளர்
ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா
ரியாத் காயல் நல மன்றத்தின் முந்தைய (47ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |