இக்ராஃ கல்விச் சங்கத்தால் நடத்தப்பட்ட நேர்காணலில் தேர்வான மாணவர்களுக்கு இரண்டே நாட்களில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக - ஹஜ் பெருநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட அதன் செயற்குழுக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து, அதன் செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
செயற்குழுக் கூட்டம்:
இக்ராஃ கல்விச் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 10ஆம் நாள் (10-10-2014) வெள்ளிக்கிழமையன்று 19.30 மணியளவில், காயல்பட்டினம்,கீழ நெயினா தெரு, இக்ராஃ அலுவலகத்திற்கு எதிரே உள்ள கலீஃபா அப்பா தைக்கா வளாகத்தில், இக்ராஃ தலைவரும், ரியாத் காயல் நற்பணி மன்றத் தலைவருமான ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ் தலைமையில் நடைபெற்றது.
இக்ராஃ செயற்குழு மூத்த உறுப்பினர்களான ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர், ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர், ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜித்தா காயல் நற்பணி மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஜி சட்னி எஸ்.எம்.முஹம்மத் லெப்பை கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார், கூட்டத் தலைவர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இக்ராஃ துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ் கூட்ட ஒழுங்குகள் குறித்து சுருக்கவுரையாற்றினார்.
செயலர் அறிக்கை:
இக்ராஃ செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீது இக்ராஃவின் அண்மைச் செயல்பாடுகள் குறித்து விவரித்தார். அவரது உரையின் உள்ளடக்கம் வருமாறு:-
கல்வி உதவித்தொகை:
நடப்பு 2014-2015 கல்வியாண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்த மாணவ-மாணவியர் நேர்காணல், 10.08.2014 அன்று கலீஃபா அப்பா தைக்காவில் நடைபெற்றது.
(1) ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
(2) பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி,
(3) ஹாஜி ஜெஸ்மின் ஏ.கே.கலீல்,
(4) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்,
(5) ஜனாப் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் (செயலாளர்),
ஆகியோரடங்கிய குழுவினர் சுழற்சி முறையில் மாணவ-மாணவியரை நேர்காணல் செய்தனர்.
பெறப்பட்ட 69 மொத்த விண்ணப்பங்களுள் - 21 மாணவர்கள்; 24 மாணவியர் என மொத்தம் 45 பேரின் விண்ணப்பங்கள் கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடையனவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு உடனடியாக அவர்களுக்கான கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டு விட்டது. இவர்கள் அனைவரும் Arts, Diplamo, ITI பயில்வோராவர்.
இந்த 45 பேருள், நிர்ணயிக்கப்பட்ட சிறப்புத் தகுதி அடிப்படையில் - 4 மாணவர்கள்; 3 மாணவியர் என மொத்தம் 7 மாணவ-மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு 3 ஆண்டு கல்விக்கான முழு செலவினமும் உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது. இவ்வகைக்காக முதலாமாண்டு (2014-15) கல்வி உதவித்தொகையாக மொத்தம் 1 லட்சத்து 15 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஏனையோருக்கு வழமை போல ஆண்டுக்கு ரூபாய் 5 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
இவ்விரு கல்வி உதவித்தொகைகளையும் சேர்த்து மொத்தம் 3 லட்சத்து 5 ஆயிரத்து 500 ரூபாய் கல்வி உதவித்தொகையாக நடப்பாண்டு வழங்கப்படவுள்ளது. (இது முதலாமாண்டு மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் கல்வி உதவித்தொகையாகும். இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி நிதி தனி).
ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகை:
ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்துள்ள மாணவ-மாணவியர் நேர்காணல் 28.09.2014 ஞாயிற்றுக்கிழமையன்று இக்ராஃ அலுவலகத்தில் நடைபெற்றது.
(1) ஹாஜி டீ.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர்,
(2) ஹாஜி எம்.ஏ.எஸ்.ஜரூக்
ஆகியோர் விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்தனர்.
18 மாணவர்கள்; 4 மாணவியர் என மொத்தம் 22 பேர் - ஜகாத் நிதியின் கீழ் கல்வி உதவித்தொகைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு தினத்திலேயே அவர்களுக்கான கல்வி நிதியும் வழங்கப்பட்டு விட்டது. அவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் ஆகும். (இந்த வருடம் சேகரிக்கப்பட்ட ஜக்காத் நிதி ரூபாய் 2,27,000/- முழுவதும் வழங்கப்பட்டு விட்டது). இந்நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் பெரும்பாலும் பி.இ., டிப்ளமோ, ஐ.டி.ஐ., உள்ளிட்ட படிப்புகளுக்காகவும், மாணவியர் - பிஸியோதெரோபி, பி.எட்., B.Tech (Pharmaceutical Technology Programme ) உள்ளிட்ட படிப்புகளுக்காகவும் கல்வி உதவித்தொகை கோரியிருந்தனர்.
ஆயுட்கால உறுப்பினர்கள்:
இக்ராஃவின் ஆயுட்கால உறுப்பினர்களாக 109 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுள் 81 பேர் - உறுப்பினர் சந்தா தொகையான ரூபாய் 15 ஆயிரத்தைச் செலுத்தியுள்ளனர். இந்த வகையில் பெறப்பட்டுள்ள மொத்த தொகை 12 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.
நிலம் ஆவணப்பதிவு:
இக்ராஃவுக்கு வாங்கப்பட்டுள்ள நிலம், 09.10.2014 அன்று காயல்பட்டினம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆவணப்பதிவு செய்யப்பட்டது.
இக்ராஃவின் மூத்த செயற்குழு உறுப்பினர்களான
ஹாஜி எஸ்.எச்.ஷெய்கு அப்துல் காதிர் என்ற சின்ன லெப்பை,
ஹாஜி ஏ.ஆர்.முஹம்மத் இக்பால்,
இக்ராஃ தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்கு தாவூத் இத்ரீஸ்,
செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத்,
துணைச் செயலாளர் எஸ்.கே.ஸாலிஹ்,
நிர்வாகி ஏ.தர்வேஷ் முஹம்மத்,
செயற்குழு உறுப்பினர் எம்.எம்.ஷாஹுல் ஹமீத்
ஆகியோர் ஆவணப் பதிவின்போது உடனிருந்தனர். “ஆவணப் பதிவு முடிந்ததும் நிலத்திற்கான கிரயத்தொகையை இக்ராஃ நிர்வாகிகள் வழங்க, நிலத்தின் உரிமையாளர் சார்பாக ஹாஜி வாவு எஸ்.அப்துல் கஃப்பார் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்'' என்று விளக்கிய செயலாளர், நிலத்திற்கு வழங்கப்பட்ட கிரயத்தொகை மற்றும் பத்திரப்பதிவுக்கு செலவான தொகை குறித்தும் விளக்கினார். அதனைத் தொடர்ந்து பத்திரப்பதிவுக்கு ஆன செலவினங்கள் வகைக்கு எவரேனும் நன்கொடை அளிக்க விரும்பினால் தாராளமாக வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டபோது, இக்ராஃ நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் ரூபாய் பத்தாயிரம் வரை நன்கொடை அளித்தனர்.
தம்மாம் கா.ந.மன்றம் நடத்தும் அறிவியல் கண்காட்சி:
சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நற்பணி மன்றம், இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து இம்மாதம் 18ஆம் தேதி சனிக்கிழமையன்று காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடத்தவுள்ள - காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்கும் அறிவியல் கண்காட்சிப் போட்டி மற்றும் அதன் இணை நிகழ்ச்சிகள் குறித்து கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்துகொள்ளுமாறு - தம்மாம் காயல் நற்பணி மன்றத் தலைவர் டாக்டர் ஏ. முஹம்மத் இத்ரீஸ் அனைவருக்கும் அழைப்பும் விடுத்தார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றம்:
இக்ராஃவுக்காக வாங்கப்பட்டுள்ள நிலத்தில் கட்டிடம் கட்டும் வரை அதை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
கட்டிடம் கட்டும் வரை வெறுமனே வைத்துக்கொண்டிராமல், தரையிலிருந்து 8 அடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் எழுப்பி, வருங்கால நிழல் தேவைக்காக இப்போதே மரம், செடி, கொடிகளை நட்டு பராமரிக்கலாம் என்று கூட்டத்தில் பங்கேற்ற சிலர் கருத்துக் கூறினர். பின்னர், சட்ட விதிகள், சூழ்நிலை ஆகியவற்றின் அடிப்படையில் செய்திட முடிவு செய்யப்பட்டது.
தீர்மானங்கள்:
கூட்டத்தில் பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - கல்வி உதவித்தொகை அனுசரணையாளர்களுக்கு நன்றி:
இக்ராஃ கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டிலிருந்து 3 ஆண்டுகளுக்கு புதிதாக கல்வி உதவித்தொகை அனுசரணையளிக்க முன்வந்துள்ள மன்றங்கள் மன்றும் கல்வி ஆர்வலர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2 - நில உரிமையாளருக்கு நன்றி:
இக்ராஃவுக்காக வாங்கப்பட்டுள்ள 4000 சதுர அடி மொத்த நிலத்தில் 2000 சதுர அடி நிலத்தை நன்கொடையாக வழங்கிய – நில உரிமையாளர் ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.ஹபீபுல்லாஹ் அவர்களுக்கு இக்கூட்டம் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 3 - நிலத்தில் கோட்டைச் சுவர் எழுப்பல்:
இக்ராஃவுக்காக வாங்கப்பட்டுள்ள 4000 சதுர அடி நிலத்தைச் சுற்றி – தரையிலிருந்து 8 அடி உயர அளவில் கோட்டைச் சுவர் எழுப்பிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இறுதியில் நன்றியுரை, துஆவைத் தொடர்ந்து, ஸலவாத் - கஃப்பாராவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.அல்ஹம்துலில்லாஹ்!
பங்கேற்றோர்:
ரியாத் காயல் நல மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி கூஸ் எஸ்.ஏ.டீ.முஹம்மது அபூபக்கர், அவ்வமைப்பின் கணக்கு தணிக்கையாளர் ஹாஜி பி.எம்.எஸ்.முஹம்மது லெப்பை, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை எஸ்.நவாஸ், கத்தர் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் சுலைமான், துபை காயல் நல மன்ற பொருளாளர் முஹம்மது யூனுஸ் மற்றும் எம்.எஸ்.அப்துல் ஹமீது ஆகியோர் சிறப்பழைப்பாளர்களாகவும், செயற்குழு உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இவ்வாறு செயலாளர் கே.ஜெ.ஷாஹுல் ஹமீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
N.S.E.மஹ்மூது
மக்கள் தொடர்பாளர்
இக்ராஃ கல்விச் சங்கம் – காயல்பட்டினம்
இக்ராஃ கல்விச் சங்கத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இக்ராஃ கல்விச் சங்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |