காயல்பட்டினத்தில் அண்மையில் பெய்த மழை காரணமாக, நகர் முழுவதிலுமிருந்து வழிந்தோடும் நீர், வடமுனையில் கீரிக்குளம் வழியாகவும், தென்முனையில் ஓடக்கரை வழியாகவும் கடலில் கலக்கிறது. இவ்விரண்டிற்கும் இடையில், கொச்சியார் தெரு மற்றும் அதற்குப் பின்புள்ள தெருவில் நடுப்பகுதியில் பெருமளவு நீர் தேங்கி நின்றது.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தம் வீடுகளிலிருந்து வெளியேற, இடுப்பளவு மழை நீர்த்தேக்கத்தில் நனைந்தே எங்கும் சென்று வர வேண்டியதிருந்ததால், பல நாட்களாக அவர்கள் வீட்டுக்குள்ளேயே சிறைபட்டிருந்தனர்.
இதனால் பெரும் அவதிக்குள்ளான அவர்கள், தேங்கிய மழை நீர் வழிந்தோட நடவடிக்கை எடுக்குமாறு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், நகராட்சி ஆணையர், அப்பகுதியை உள்ளடக்கிய 08ஆவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆகியோரிடம் தொடர்ந்து முறையிட்டதன் பலனாக, பொக்லைன் இயந்திரம் மூலம் அங்கு தேங்கியிருந்த நீரை வழிந்தோடச் செய்யும் பணி, இம்மாதம் 24ஆம் நாளன்று துவங்கியது. நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர் எஸ்.பொன்வேல்ராஜ், குடிநீர் குழாய் பொருத்துநர் நிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் அவ்விடத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்டு பணிகளைத் துவக்கினர்.
சுமார் 3 அடி அளவில் தேங்கியிருக்கும் மழை நீரை கடலுக்கு அனுப்ப, அப்பகுதியையொட்டிய ஸீ-கஸ்டம்ஸ் சாலையைத் தோண்டினால் மட்டுமே, கீரிக்குளம் வழியாக தேக்க நீர் கடலுக்குள் செல்லும் என்று கருதிய அதிகாரிகள், மறுநாள் (அக்டோபர் 25) சாலையை வெட்டி, மழை நீர் வழிந்தோட பாதையிட்டனர். இந்நடவடிக்கை காரணமாக, சுமார் 2 அடி அளவுக்கு தண்ணீர் வழிந்தோடி, தற்போது 1 அடி அளவில் மட்டுமே தேங்கியுள்ளது.
இது தாழ்வான பகுதியாகையால், நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் வழிந்தோடும் மழைநீர் இப்பகுதியில் தேங்குவது வழமையாகிவிட்டது. மழைக்காலம் வரும்போதெல்லாம் இப்பிரச்சினை கிளம்புவதைத் தவிர்த்திட, இப்பகுதியில் முறையாக அளவிட்டு, மழைநீர் வழிந்தோடுவதற்கு நிரந்தரமாகக் குழாய் பதிக்க வேண்டுமென்பது அப்பகுதி மக்களின் தற்போதைய கோரிக்கையாக உள்ளது. மழை நிவாரணப் பணிகளைப் பார்வையிட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் (ஆர்.டி.எம்.ஏ.) வந்திருந்ததாகவும், அவரிடமும் இதுகுறித்து முறையிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இன்று காலையில் காயல்பட்டினம் நகராட்சி ஆணையரைச் சந்தித்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து முறையிட்டதோடு, இளைஞர் ஐக்கிய முன்னணியின் (YUF) சார்பிலான மனுவையும் அவரிடம் அளித்துள்ளனர்.
ஸீ-கஸ்டம்ஸ் சாலையில் - கொச்சியார் கீழத் தெருவையொட்டிய பகுதி தோண்டப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளதைக் கருத்திற்கொண்டு, பனைமரக் கம்புகளை இணைத்துக் கட்டி, சிறிய பாலத்தை இரண்டு இடங்களில் அமைத்துள்ளனர். அவற்றின் வழியாக பொதுமக்கள் கடற்கரைக்குச் சென்று வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமையாதலால் கடற்கரைக்கு வருவோர் எண்ணிக்கை - வார நாட்களை விட அதிகமாக இருந்தது. மழை நீர் வடிகாலுக்காக சாலை உடைக்கப்பட்டிருந்ததால், நாற்சக்கர - இரு சக்கர வாகனங்களில் வந்தோர், அவற்றை சொளுக்கார் தெரு - ஸீ-கஸ்டம்ஸ் சாலை முனையில் துவங்கி, கொச்சியார் தெரு வரை நிறுத்தி வைத்துவிட்டு, கடற்கரைக்குச் சென்று வந்தனர்.
ஒரு சிலர், மரப்பாலம் பலவீனமானது என்பதைக் கூட கருத்திற்கொள்ளாமல் இரு சக்கர வாகனங்களை பாலத்தின் மீது ஓட்டி, மறுபக்கம் சென்றனர்.
இதனால் எந்த நேரத்திலும் மரப்பாலம் உடையலாம் என்ற நிலையிருந்தது. சிறிது நேரத்தில் அவ்விடத்தில் முகாமிட்ட சமூக ஆர்வலர்கள் சிலர், பாலத்தைக் கடக்க முயன்ற இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் வேண்டிக்கொண்டதையடுத்து, அவர்கள் தமது வாகனங்களை பாலத்திற்கு முன்பாகவே நிறுத்திவிட்டு, கடற்கரைக்கு நடந்து சென்றனர்.
அதே நேரத்தில் கடற்கரையிலிருந்து யானை ஒன்று திரும்பி வந்துகொண்டிருந்ததைக் கண்ட அவர்கள், “இது எப்படி இவ்வளவு பெரிய பாலத்தைக் கடந்து வந்தது?” என்று கேட்டவாறு வியப்புடன் பார்த்தனர். சில நிமிடங்களிலேயே அதற்கு விடையும் கிடைத்தது. பாலத்தின் தாழ்வான பகுதி வழியே கால் வைத்து இறங்கிய யானை, மறு ஓரத்தில் ஏறி பக்குவமாகத் திரும்பிச் சென்றது. இக்காட்சியைப் பலர் தம் கைபேசிகளில் படப்பதிவு செய்துகொண்டனர்.
இத்தனை களேபரங்களுக்கும் இடையில் சில சிறுவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் பாலத்தில் வழிந்தோடும் நீரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர். பிஞ்சு வயதிலேயே இத்தனை பக்குவமாகக் கவலைப்படுகிறார்களே என்றெண்ணி அவர்கள் அருகில் சென்று அவதானித்தபோதுதான் காதில் விழுந்தது - “மச்சான்! சூப்பரான கெளுத்தி மீன் ஒன்னு இந்தப் பக்கமாத்தாண்டா ஓடிச்சி...”
தேங்கிய மழை நீர் முற்றிலும் வழிந்தோடிய பகுதிகளில், நகராட்சியின் சார்பில் ப்ளீச்சிங் பொடி தூவப்பட்டிருந்தது.
கள உதவி:
ஹாஃபிழ் M.F.ஃபஸல் இஸ்மாஈல்
தகவல் உதவி:
M.A.K.முஹம்மத் இப்றாஹீம் ஸூஃபீ
படங்களுள் உதவி:
ஹாஃபிழ் முஹம்மத் யாஸர்
ஹாஃபிழ் ரியாஸ்
காயல்பட்டினத்தில் மழை குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |