லஞ்சம் - ஊழலைக் கட்டுப்படுத்திட ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, எஸ்.டி.பீ.ஐ. கட்சி சார்பில், காயல்பட்டினம் பிரதான வீதியில், இம்மாதம் 03ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று 17.00 மணியளவில் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் எம்.ஷேக் அஷ்ரஃப் அலீ ஃபைஜீ தலைமை தாங்கினார். பொறுப்புக் குழு உறுப்பினர் என்.கே.ஜெ.முஹம்மத் அலீ முன்னிலை வகித்தார். காயல்பட்டினம் நகர செயலாளர் அப்துர்ரஹ்மான் வரவேற்றுப் பேசினார். தூத்துக்குடி தொகுதிச் செயலாளர் மெய்தீன் கனீ துவக்கவுரையாற்றினார். எஸ்.டி.பீ.ஐ. கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் சிறப்புரையாற்றினார்.
லஞ்சம் - ஊழல் தொடர்பான செய்திகள் அண்மைக் காலமாக மிக அதிகளவில் வெளியாவதாகவும், லஞ்சம், ஊழல் செய்யும் மத்திய - மாநில அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மட்டும் செய்திகள் வெளியாவதில்லை என்றும் அவர் பேசினார்.
இந்த அவலங்களைக் களைவதற்கு மத்திய அரசால் ‘லோக்பால்’ அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது போல, தமிழகத்தில் ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை நிறுவிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கட்சியின் பொறுப்புக் குழு செயலாளர் முஹம்மத் தாஹிர் நன்றி கூறினார். இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியினர் மற்றும் நகர பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
SDPI தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |