சிங்கப்பூர் காயல் நல மன்றம் நடத்திய பொது அறிவுத் திறனாய்வுப் போட்டியில், அணிக்கு மூவர் வீதம் ஆண்கள் பிரிவில் 8 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் பங்கேற்றுள்ளன. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் அதன் செயலாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
இறையருளால் எமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் சார்பில், பொது அறிவுத்திறன் போட்டி, 18.04.2015 சனிக்கிழமையன்று மதியம் 02.30 மணியளவில், சிங்கப்பூர் காயல் நல மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களின் தலைமையில் மன்ற அலுவலக வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மன்றத்தின் உறுப்பினர்கள் பலரும் பங்கெடுத்தனர். மும்மூன்று பேர்கள் கொண்ட எட்டு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு போட்டி துவங்கியது.
போட்டியின் விதி முறைகள் மற்றும் கால அவகாசம் குறித்து மன்ற ஆலோசகர் பாளையம் ஹாஜி முஹம்மத் ஹஸன் விளக்கினார். ஆர்வமுடன் உறுப்பினர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொண்டு கேள்விகளுக்கு விடையளித்தனர். மார்க்கம், கணிதம், கணினி, அரசியல், மருத்துவம், உள்ளூர் மற்றும் உலக நாடுகள் குறித்த தகவல் சம்பந்தமான கேள்விகளுக்கு போட்டியாளர்கள் விடை பகர்ந்தனர்.
சுமார் ஐந்து மணி நேரம் பல சுற்றுக்களாக தொடர்ந்த நிகழ்ச்சி, அஸர் மற்றும் மஃரிப் தொழுகைக்காக இடை வேளை விடப்பட்டு இரவு எட்டு மணிக்கு நிறைவடைந்தது. இடையில் சுவையான தேனீர், சமூசா, கேசரி பரிமாறப்பட்டது.
இறுதிச் சுற்றில் வெற்றி வாகை சூடிய ஹாஃபிழ்- எம்.ஏ.சி.செய்யத் இஸ்மாயீல், செய்யத் முகைதீன், முஹ்சின் ஆகியோர் அடங்கிய குழுவைப் பாராட்டி அதற்குரிய பரிசினை வரும் 26-ஆம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றுகூடல் நிகழ்வின் போது வழங்குவதாக மன்ற ஆலோசகர் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து பெண்களுக்கான திறனாய்வுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மும்மூன்று பேர்கள் அடங்கிய மூன்று குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. மன்ற உறுப்பினர்களின் துணைவியர் மற்றும் உறவினர்கள் இதில் பங்கெடுத்தனர். கணிதம், கணினி, அரசியல், மருத்துவம், உள்ளூர் மற்றும் உலக நாடுகள் குறித்த தகவல் சம்பந்தமான கேள்விகளுக்கு அழகிய முறையில் ஆர்வத்துடன் பதில் அளித்தனர். இப்போட்டியில் கலந்துகொண்ட பெண்கள் அணியில் சகோதரிகள் சபீனா, சித்தி ராபியா, ஆதம் ஹவ்வா ஆகியோர் அடங்கிய குழு வெற்றி பெற்றது.
மன்ற நிகழ்வுகள் வெறும் அறிக்கை ஆலோசனை என்று மட்டும் நில்லாமல், ஹாஃபிழ்களுக்கு நினைவாற்றலை தக்க வைத்துக்கொள்ள குர்ஆன் மனனப் போட்டி, உடல் ஆரோக்கியத்திற்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் அறிவுத்திறனை வளர்ப்பதற்காக பொது அறிவுத்திறனாய்வு போட்டி என ஆக்கப்பூர்வமான நிகச்சிகளை நடத்தி மன்ற உறுப்பினர்கள் நலனில் எமது மன்றம் அக்கரையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இறைவன் உதவியால் இரவு ஒன்பது மணிக்கு இந்நிகழ்ச்சி நிறைவடைந்து அனைவரும் தத்தம் இல்லம் சென்றடைந்தனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தித் தொடர்பாளர் - KWAS
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |