தமிழகம், புதுச்சேரியில் 8.80 லட்சம் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆவலோடு எதிர்நோக்கியிருந்த பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
தமிழை முதன்மை பாடமாக எடுத்துப் படித்த திருப்பூர் விகாஸ் வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி பவித்ரா முதலிடம் பெற்றார். இவர் 1192 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அதேபோல் கோவை சவுடேஸ்வரி வித்யா மெட்ரிக் பள்ளி மாணவி நிவேதாவும் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
1190 மதிப்பெண்கள் பெற்று 4 பேர் இரண்டாம் இடம் பிடித்தனர். ஈரோடு மாவட்ட ஆதர்ஷ் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த விக்னேஸ்வரன், நாமக்கல் எஸ்.கே.வி.பள்ளியைச் சேர்ந்த பிரவீண், நாமக்கல் எஸ்.எஸ்.எம்.லக்ஷ்மியம்மாள் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர் சரண்ராம், திருச்சி சவுடாம்பிகா மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவி வித்யவர்ஷினி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் டிரினிட்டி அகாடமி மாணவி பாரதி 1189 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு துறை இயக்குநர் தேவராஜன் வெளியிட்டார்.
மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%
பிளஸ் 2 தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 90.6%. கடந்த ஆண்டும் இதே தேர்ச்சி விகிதமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 87.5%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 93.4%. இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பாட வாரியாக 200-க்கு 200 பெற்றவர்கள் எண்ணிக்கை:
இயற்பியல்- 124, வேதியியல்- 1,049, உயிரியல்-387, தாவரவியல்-75 விலங்கியல்-4, கணிதம்-9710, கணினி அறிவியல்-577, வணிகவியல்-819, கணக்குப்பதிவியல்-5,167, வணிகக் கணிதம்- 1,036 பேர் 200-க்கு 200 பெற்றுள்ளனர்.
முடிவை அறிந்துகொள்வதற்கான இணையதள விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை ஆசிரியர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (புரவிஷனல் மார்க் ஷீட்) தாங்கள் படித்த பள்ளியில் மே 14-ம் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம்.
மாணவர்கள் தங்கள் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை மதிப்பெண் விவரங்களுடன் இணைய தளங்களில் அறிந்துகொள்ளலாம்.
முடிவை அறிந்துகொள்ள நாட வேண்டிய வலைதளங்கள் விவரம்:
www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in
www.dge3.tn.nic.in
தேவைப்பட்டால், மே 18-ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்களும் தனித்தேர்வர்களும் தங்களது பிறந்த தேதியை குறிப்பிட்டு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 80 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 18-ம் தேதி முடிவடைந்தது. இப்பணியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி முடிந்த பிறகு, மாணவர்களின் மதிப்பெண் பட்டியல், அரசு தகவல் தொகுப்பு மையத்துக்கு (டேட்டா சென்டர்) ஆன்லைனில் அனுப்பப்பட்டு மதிப்பெண் சான்றிதழ் தயாரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனையடுத்து பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ம் தேதி, எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு மே 21-ம் தேதி வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி அறிவித்தது.
அறிவிக்கப்பட்டபடி, பிளஸ் 2 தேர்வு முடிவு இன்று வெளியிடப்பட்டது.
தகவல்:
தி இந்து |