காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் நேற்று (மே 06 புதன்கிழமை) 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 07 வியாழக்கிழமை மாலையில் நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில், துவக்கப் போட்டியில் வெற்றிபெற்ற தமிழ்நாடு கால்பந்துக் கழகம் - சென்னை அணியும், ஊட்டி வெலிங்டன் எம்.ஆர்.சி. அணியும் மோதின.
ஊட்டி வெலிங்டன் அணியின் யாதவ் கிருஷ்ணன் என்ற வீரர் ஆட்டம் துவங்கிய 4ஆவது நிமிடத்தில், தனதணிக்காக ஒரு கோல் அடித்தார். அத்தோடு அந்த அணி கோல் கணக்கை முடித்துக்கொண்டது.
தமிழ்நாடு கால்பந்துக் கழகம் - சென்னை அணி, அடுத்தடுத்து 7 கோல்களை அடித்தது. அவ்வணியின் காழி அலாவுத்தீன் 14ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ரீகன் 42, 62, 76ஆவது நிமிடங்களில் 3 கோல்களை அடித்தார். எட்வின் 49, 57ஆவது நிமிடங்களில் 2 கோல்களை அடித்தார்.
ஊட்டி அணி வீரர் கோல் காப்பு எல்லைக்குள் சென்னை வீரரின் காலை இடறி விட்டமைக்காக சென்னை அணிக்கு ஃப்ரீ கிக் பெனாலிட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆட்டத்தின் 79ஆவது நிமிடத்தில் அதை சரியாகப் பயன்படுத்திய சென்னை வீரர் கார்த்திக் ஒரு கோல் அடிக்கவே, 7-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வெற்றிபெற்று, இம்மாதம் 09ஆம் நாளன்று நடைபெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர்.
இன்று (மே 08 வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும், பெங்களூரு BDFA அணியும் மோதவுள்ளன.
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற இரண்டாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |