இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், சுற்றுச்சூழலைப் பாதிக்கும் DCW தொழிற்சாலையை - பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வரை மூட அரசைக் கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் பொதுக்குழுக் கூட்டம் இம்மாதம் 07ஆம் நாள் வியாழக்கிழமையன்று 17.00 மணியளவில், தூத்துக்குடி ராஜ் ஹோட்டல் கேளரங்கில் மாவட்ட தலைவர் பீ. மீராசா மரைக்காயர் தலைமையில் நடைபெற்றது.
கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர். கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தீர்மானம் 1 - தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கக் கோரி...
அதிமுக ஆட்சியமைத்தால், தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வாக்குறுதியளித்தார். அவர் முதல்வாரன பின்னர் நடத்திய மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் - தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார். ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்காக தூத்தக்குடி மீன்வளக் கல்லூரி எதிரில் மாவட்ட நிர்வாகத்தால் இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாநகரில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருப்பதைக் கருத்திற்கொண்டு, தேர்வு செய்யப்பட்ட இடத்தில் விரைவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தை அமைத்திட மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 2 - ஏரல் ஆற்றுப்பாலம் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி...
தொழில் நகரமான ஏரலுக்கு குரும்பூரிலிருந்து செல்லும் ஆற்றுப் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. திமுக ஆட்சிகாலத்தில் இப்பாலம் புதிதாகக் கட்டப்பட்டும் முடிவு பெறாமல் இருந்தது. தற்போது அதிமுக ஆட்சியிலும் பாலப் பணிகள் முடிக்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் இப்பாலத்தின் மேல் பகுதியிலும் தண்ணீர் கடந்து செல்வதால், அந்த வழித்தடம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு அதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. வனத்துறை அனுமதி வாங்கிய பின்னரும் ஆற்றுப் பால வேலைகள் மந்தமாகவே உள்ளது.
போர்க்கால அடிப்படையில் உடனடியாகப் பணி செய்து, இப்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விட மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
அத்துடன், விவசாயம் நிறைந்த இப்பகுதியில், மங்களக்குறிச்சியிலிருந்து சூளைவாய்க்கால் வரை உள்ள வாய்க்காலில் தூர் வாரவும் வாய்க்காலின் இரண்டு பக்கமும் உள்ள சிதிலமடைந்துள்ள சுவர்களை செப்பனிடவும் மாவட்ட நிர்வாகத்தை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 3 - காயல்பட்டினத்தில் பழுதடைந்த சாலைகளைச் சீரமைக்கக் கோரி...
கடந்த வடகிழக்குப் பருவமழையின்போது, காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து மாவட்டத்திலேயே அதிக மழை பெய்த பகுதிகளில் இடம் பெற்றது. தேங்கிய மழை நீரை வெட்டி விடுவதற்காக நகரெங்கும் சாலைகள் தோண்டப்பட்டது.
தற்போது மழைக்காலம் முடிந்து, கோடைகாலமும் வந்துவிட்ட நிலையிலும் தோண்டப்பட்ட சாலைகளை இதுவரை மூடி செப்பனிடாமல் உள்ளதால், பொதுமக்கள் இடறி விழும் நிலையும், வாகனங்கள் விகத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. எனவே இச்சாலைகளை போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்குத் தகுந்தவையாக அமைத்துத் தர நகராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 4 : தொழிற்சாலைக் கழிவுகளால் பாதிக்கப்படும் பகுதிகளைப் பாதுகாக்க கோரி...
காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில், DCW தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதன் உற்பத்திப் பொருட்களும், அவற்றுக்கான மூலப் பொருட்கள் பலவும், அதன் கழிவுகளும் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்களைப் பரப்பும் தன்மையைக் கொண்டவையாகும்.
காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு இந்த தொழிற்சாலையின் பாதிப்பு முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று பொதுமக்களிடையே மிகுந்த அச்சமுள்ளது.
எனவே, பொதுமக்கள் அச்சத்தைப் போக்கும் வரை இத்தொழிற்சாலையை மூடிடவும், காயல்பட்டினத்தில் புற்றுநோய் குறித்து சுதந்திரமான வல்லுநர் குழுவின் மூலம் கணக்கெடுத்து, பாதிப்புகளுக்குத் தகுந்தவாறு நிவாரணங்களை வழங்கவும், இனி பாதிப்புகள் ஏற்படாவண்ணம் மேல் நடவடிக்கை எடுக்கவும். மத்திய மாநில சுற்றுச் சூழல் அமைச்சகங்கள். மாவட்ட நிர்வாகம், மாநில - மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 5 - தூத்துக்குடி மாநகரின் சுற்றுப்புற சூழல் பாதிப்பு தொடர்பாக...
தூத்துக்குடி துறைமுகம் வழியாக கையாளும் நிலக்கரி, கந்தகம், ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் பொருள்கள் மற்றும் கெமிக்கல் எந்த ஒரு பாதுகாப்பு நடவடிக்கையும் இல்லாமல் லாரிகள் மூலமாக எடுத்துச் செல்லும்போது சாலைகளில் சிந்துவதால் சுற்றுப்புறசூழல் பாதிக்கப்படுவதோடு, கடந்த மூன்றாண்டு காலமாக தமிழகத்தில் நடைபெற்ற விபத்துக்களில் பல தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளன. இதற்கு நிவாரணமாக தூத்துக்குடி துறைமுக நிர்வாக சபை தூத்துக்குடி மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் அதிகமாக நிதி அளிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் 6 - புதிய நிர்வாகிகள் தேர்வு:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கு, 2015-2018 பருவத்திற்கான நிர்வாகிகள் பின்வருமாறு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்:
தலைவர்:
பீ.மீராசா மரைக்காயர் (தூத்துக்குடி)
செயலாளர்:
எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் (காயல்பட்டினம்)
பொருளாளர்:
கே.மீராசா (திரேஸ்புரம்)
துணைத் தலைவர்கள் :
(1) மன்னர் ஏ.ஆர்.பாதுல் அஸ்ஹப் (காயல்பட்டினம்)
(2) என்.முஸ்தஃபா (முத்தையாபுரம்)
துணைச் செயலாளர்கள்:
(1) ஐ.செய்யித் அப்பாஸ் (ஆத்தூர்)
(2) ஜெ.சாதிக் அலி (ஏரல்)
(3) எஸ்.முகைதீன் (கயத்தார்)
மாநில பிரதிநிதிகள்:
(1) கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்
(2) எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ
(3) திரேஸ்புரம் கே.மீராசா
(4) நவ்ரங் எம்.சகாப்தீன்
கவுரவ ஆலோசகர்கள்:
(1) தூத்துக்குடி எம்.அப்துல் கனீ
(2) ஆழ்வை ஒய்.எஸ்.எம்.மஸ்ஊத்
(3) காயல் எஸ்.டீ.முஸ்தஃபா கமால்
(4) ஆத்தூர் எல்.இ.அப்துல் காதிர்
சட்டமன்றத் தொகுதி வாரியாக மாவட்ட துணை தலைவர்கள், துணை செயலாளர்கள் நியமனம் என்ற அடிப்படையில் - வெற்றிடமாக உள்ள பொறுப்புகளுக்கும், இளைஞரணி (யூத் லீக்), மாணவரணி (எம்.எஸ்.எஃப்.), சுதந்திர தொழிலாளர் யூனியன் (எஸ்.டீ.யு.), மகளிரணி, மீனவரணி, தகவல் தொடர்பு உள்ளிட்ட பொறுப்புகளுக்கான பொறுப்பாளர்களை, மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாலோசனைக்குப் பின் நியமனம் செய்திட தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நன்றியுரைக்குப் பின், துஆவுடன் பொதுக்குழுக் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
பொதுக்கூட்டம்:
பின்னர், தூத்துக்குடி ஜெய்லானி தெருவில் அன்றிரவு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில், கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றினர்.
வாழ்நாள் சாதனையாளர் விருது:
இக்கூட்டத்தில், தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அறப்பணிகளுக்கு தம் வாழ்நாளெல்லாம் சேவைகள் ஆற்றிய தூத்துக்குடி எம்.அப்துல் கனீ, ஐ.எம்.உஸ்மான், ஆத்தூர் எல்.இ.அப்துல் காதிர் ஆகியோருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதுகளை, பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வழங்கி கண்ணியப்படுத்தினார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
தூத்துக்குடியிலிருந்து...
S.P.M.பாஷா
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்டத்தின் முந்தைய பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |