காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 10 ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில், மதுரை மாவட்ட கால்பந்துக் கழக அணியும், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும் மோதின.
ஆட்டம் துவங்கிய நான்காவது நிமிடத்தில், திருவனந்தபுரம் அணியின் ப்ரிட்டோ என்ற வீரர் ஒரு கோல் அடித்திருந்தார். அதன் பிறகு முதல் பாதியில் யாரும் கோல் அடிக்கவில்லை. ஆட்டமும் மந்த கதியிலேயே சென்றது.
இரண்டாவது பாதியில், 59 மற்றும் 64ஆவது நிமிடங்களில் மதுரை அணி வீரர் முருகன் அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடிக்க, மதுரை அணி முன்னிலை பெற்றது. அதனைத் தொடர்ந்து, ஈரணிகளும் வெற்றிபெறும் முனைப்பில் ஆடத் துவங்கியதால், இரண்டாவது பாதி ஆட்டம் விறுவிறுப்பாக இருந்தது.
திருவனந்தபுரம் வீரர் பெஜோய் 70ஆவது நிமிடத்திலும், ஜோபின் 91ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடிக்கவே, நிறைவில் 3-2 என்ற கோல் கணக்கில் திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணி வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர்.
இரண்டாவது பாதி ஆட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கையில், திடீரென மேகங்கள் திரண்டு, வானம் கருத்து, சாரல் மழை பெய்தது.
இன்று (மே 11 திங்கட்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், நேற்று வெற்றிபெற்ற திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும், சென்னை வருமான வரித்துறை அணியும் மோதவுள்ளன.
அன்றாடம் நடைபெறும் போட்டிகள் அனைத்தும், www.azadtrophy.com என்ற இணையதளத்தில் நேரலை செய்யப்பட்டு வருகிறது.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற ஐந்தாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |