காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் இம்மாதம் 06ஆம் நாள் புதன்கிழமை 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 09 சனிக்கிழமை மாலையில் நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில், தமிழ்நாடு கால்பந்துக் கழகம் – சென்னை அணியும், பெங்களூரு BDFA அணியும் மோதின.
முதல் பாதியில் ஈரணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. முந்தைய நாட்களில் சிறப்பாக விளையாடியவர்கள் இவர்கள்தானா என ரசிகர்கள் சந்தேகப்படும் அளவுக்கு விளையாட்டு மிகவும் மந்தமாக இருந்தது.
இரண்டாவது பாதியின் 56ஆவது நிமிடத்தில், சென்னை அணியின் ராமு என்ற வீரரும், அடுத்த இரண்டு நிமிடங்களில் (58ஆவது நிமிடத்தில்) பெங்களூரு அணியின் ஜான் பீட்டர் என்ற வீரரும் தமதணிக்காக தலா ஒரு கோல் அடிக்கவே, ஈரணி வீரர்களிடமும் வெற்றியை நோக்கிய திடீர் உற்சாகம் பிறந்தது.
ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் தொடர்ந்து உற்சாகமாக ஈரணியினரும் ஆடியபோதிலும், ஆட்ட நிறைவில் யாரும் கோல் அடிக்காததால், 1-1 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமனில் முடிவுற்றது.
இதனையடுத்து, வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதற்காக சமனுடைப்பு முறை கையாளப்பட்டது. இதில் 6-5 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றிபெற்று, இம்மாதம் 22ஆம் நாளன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர்.
இன்று (மே 10 ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், மதுரை மாவட்ட கால்பந்துக் கழக அணியும், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும் மோதவுள்ளன.
தகவல் உதவி:
‘ஆசிரியர்’ கலீஃபா ஸதக்கத்துல்லாஹ்
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற நான்காம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |