காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் நேற்று (மே 06 புதன்கிழமை) 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
மே 08 வெள்ளிக்கிழமை மாலையில் நடைபெற்ற போட்டியில், தூத்துக்குடி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும், பெங்களூரு BDFA அணியும் மோதின.
ஆட்டம் துவக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்திருந்தது என்றாலும், பெங்களூரு அணியிடமே பந்தின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தது.
ஆட்டத்தின் 16ஆவது நிமிடத்தில், பெங்களூரு அணி வீரர் கோல் காப்பு எல்லைக்குள் தவறிழைத்ததையடுத்து, தூத்துக்குடி அணிக்கு பெனாலிட்டி கிக் வாய்ப்பு கிடைத்தது. அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்ட அவ்வணி வீரர் ப்ரூஸ்டன் ஒரு கோல் அடித்தார்.
இரண்டாவது பாதியில், பெங்களூரு மணிமாறன் 57ஆவது நிமிடத்திலும், மணிவண்ணன் 83ஆவது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடிக்கவே, நிறைவில் 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு BDFA அணி வெற்றிபெற்று, முதலாவது காலிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
நேற்று, ஹாங்காங் தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.ஜமால் என்ற ஜமால் மாமா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருக்கு, ஆட்ட இடைவேளையின்போது, ஈரணியினரும் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
அறிமுக நிகழ்ச்சியின் நிறைவில், மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களை நோக்கி சிறப்பு விருந்தினர் கையசைக்க, அனைவரும் குரலெழுப்பியும், சீட்டியடித்தும் தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர்.
இன்று (மே 09 சனிக்கிழமை) மாலை நடைபெறும் முதலாவது காலிறுதிப் போட்டியில், நேற்றைய போட்டியில் வென்ற பெங்களூரு BDFA அணியும், ஏற்கனவே காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ள தமிழ்நாடு கால்பந்துக் கழகம் - சென்னை அணியும் மோதவுள்ளன.
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு நடைபெற்ற மூன்றாம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |