காயல்பட்டினம் தென் பாக கிராமம் சர்வே எண் 278 இடத்தில் பயோ காஸ் திட்டப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
சுற்றுச்சூழல் துறைகளின் முறையான அனுமதி பெறாமல் நடைபெறும் இப்பணிகளை எதிர்த்து, சகாயமாதா மீனவர் சங்கம், கொம்புத்துறை ஊர் நல குழு மற்றும் கொம்புத்துறை சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு குழு ஆகியவை இணைந்து தொடர்ந்துள்ள இவ்வழக்கு ஏப்ரல் 30 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கினை அனுமதித்து எதிர்தரப்புகளுக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர், வழக்கினை - கோடைக்கால விடுமுறையில் கூடும் சிறப்பு நீதிமன்ற அமர்வில் விசாரிக்க அனுமதி வழங்கினர்.
சுற்றுச்சூழல் துறை அரசு செயலர், நகர ஊரமைப்பு இயக்ககம் (DTCP) மற்றும் மாவட்ட ஆட்சியர் (மாவட்ட கடலோரம் மேலாண்மை அமைப்பு தலைவர்), தூத்துக்குடி மாசு கட்டுப்பாட்டு வாரியம் - சுற்றுச்சூழல் பொறியாளர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர், காயல்பட்டினம் நகர்மன்ற ஆணையர் மற்றும் இப்பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி பெற்றுள்ள SK & Co. நிறுவனம் ஆகியோர் இவ்வழக்கில் எதிர் மனுதாரர்கள் ஆவர்.
நீதிபதிகள் பீ.என.பிரகாஷ் மற்றும் புஸ்பா சத்யநாராயணா ஆகியோர் முன்னிலையில் - உயர்நீதிமன்றத்தின் விடுமுறை அமர்வு இன்று முதல் முறையாக கூடியது. அப்போது சர்வே எண் 278 வழக்கு (வழக்கு எண் WP [MD] 7730/2015), 59வது வழக்காக விசாரணைக்கு வந்தது.
எதிர்மனுதாரர்கள் அனைவரின் தரப்பிலும் நோடீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, வழக்கினை - விடுமுறை நீதிமன்றத்தின் அடுத்த வார அமர்வுக்கு (மே 13, 14) - நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
மனுதாரர்கள் சார்பாக வழக்கறிஞர்கள் டி.அருள் மற்றும் எம்.பி.செந்தில் ஆகியோர் ஆஜராகின்றனர்.
அரசு துறை தரப்புகள் சார்பாக அரசு வழக்கறிஞர் பாஸ்கர பாண்டியன், மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பாக வழக்கறிஞர் சி.இளமான், நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் சார்பாக அஜ்மல் அஸோசியேட்ஸ், நகர்மன்ற ஆணையர் சார்பாக அரசு வழக்கறிஞர் எம்.ராஜராஜன் ஆகியோர் ஆஜராகின்றனர்.
இன்றைய விசாரணையின் போது - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை, இவ்வழக்கில் தன்னையும் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தது என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
|