iPaidaBribe.com (நான் லஞ்சம் கொடுத்தேன்) இணையதளம், ஆகஸ்ட் 2010 இல் துவக்கப்பட்டது. ஜனக்ரஹா (மக்கள் சக்தி) என்ற பெங்களூரை சார்ந்த தொண்டு நிறுவனம் துவக்கிய இந்த இணையதளம், தற்போது உலக பிரசித்தி பெற்றது. இந்தியாவை தொடர்ந்து, இந்த இணையதளத்தின் சேவை - உலகின் பல்வேறு நாடுகளில் துவக்கப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் மூலம், பொது மக்கள், அரசு சேவைகளை பெற தாங்கள் கொடுத்த லஞ்சம் விபரங்களை பதிவு செய்யலாம். இதற்காக - இணையதளத்தில், பொது மக்கள் பூர்த்தி செய்ய படிவம் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், எந்த அரசு துறை, எதற்கு லஞ்சம் கோரப்பட்டது, ஊர், தேதி, லஞ்சம் கொடுத்த தொகை, பெயர், அதிகாரி பதவி, போன்ற விபரங்களை பதிவு செய்யலாம். தற்போது ஆங்கிலத்தில் பதிவு செய்யும் வசதி மட்டும் உள்ளது.
பெறப்படும் புகார்கள், அது குறித்த அதிகாரிகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவது மட்டுமன்றி, பதிவு செய்தோரின் விருப்பத்தை பொறுத்து, இணையதளத்திலும் வெளியிடப்படுகிறது.
இந்தியாவின் முக்கிய நகரங்களின் பெயர் மட்டும் இவ்விணையதள படிவத்தில் இடம்பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் இரு நகராட்சிகளின் ஒன்றான காயல்பட்டினம் பெயர் இடம் பெறாமல் இருந்தது.
லஞ்சத்திற்கு எதிரான ஒரு முக்கிய ஆயுதமாக இவ்விணையதளம் வளர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, காயல்பட்டினம் பெயரினையும் சேர்த்திட - காயல்பட்டணம்.காம் - இவ்விணையதள நிர்வாகிகளை கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, தற்போது - நகரங்கள் பெயரில் காயல்பட்டினமும் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்விணையதளத்தில், ஏற்கனவே - காயல்பட்டினம் மக்கள், அரசு சேவைகளை நாடி செல்லும் - திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இவ்விணையதள வசதி மூலம், காயல்பட்டினத்தில் - நகராட்சி, பத்திர பதிவு அலுவலகம், மின்வாரியம், காவல் நிலையம் உட்பட பல்வேறு அரசு துறைகளில் கோரப்படும் லஞ்சம் குறித்த விபரங்களை பதிவு செய்யலாம்.
லஞ்சம் கொடுக்காமல் சேவையை பெற்றிருந்தாலும், அரசு துறையில் ஒரு நேர்மையான அதிகாரியை சந்தித்தாலும் - அதனையும் பதிவு செய்ய இவ்விணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இணையதளம் துவக்கப்பட்டதில் இருந்து - இன்றுவரை, சுமார் 45,000 புகார்கள் பதிவாகியுள்ளன. 260 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்த தகவல் பதிவாகியுள்ளது.
இந்த இணையதளம் குறித்து உலகின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. அவற்றினை காண இங்கு அழுத்தவும்
[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:00 am / 5.5.2014] |