இம்மாதம் 12ஆம் நாளன்று நகரின் அனைத்து வார்டுகளிலும் தகவல் பலகையுடன் கொடியேற்றி, தெருமுனைப் பரப்புரை நிகழ்ச்சியை நடத்தவும், மாநில பொதுச் செயலாளர், இளைஞரணி மாநில செயலாளரை அதில் பங்கேற்கச் செய்யவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 01ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.00 மணியளவில், காயல்பட்டினம் சதுக்கைத் தெருவிலுள்ள கட்சியின் நகர கிளை அலுவலகமான தியாகி பி.எச்.எம்.முஹம்மத் அப்துல் காதிர் மன்ஸிலில், நகர தலைவர் வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் தலைமையில் நடைபெற்றது.
அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். நகர செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சி அறிமுகவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் கருத்துரையாற்றினார்.
கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் நாளன்று நடைபெற்ற கட்சியின் நகர பொதுக்குழுக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட - நகரின் அனைத்து வார்டுகளுக்கான நிர்வாகிகள் இக்கூட்டத்தில் அனைவருக்கும் அறிமுகம் செய்யப்பட்டனர்.
இக்கூட்டத்தில், கட்சியின் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், சுதந்திர தொழிலாளர் யூனியன் மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுத்தீன் ஆகியோர் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினார். அவர்களுக்கு, நகர கிளை சார்பில், நகர தலைவர் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
பங்கேற்றோர் கருத்துப் பரிமாற்றங்களையடுத்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - அனைத்து வார்டுகளிலும் தகவல் பலகையுடன் கொடியேற்றம்:
நகரில், புதிதாக வார்டு நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வார்டுகளிலும், 12.05.2015 செவ்வாய்க்கிழமை மாலையில் தகவல் பலகையுடன் பிறைக்கொடி ஏற்றி, தெருமுனைப் பரப்புரை செய்யவும், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர், இளைஞரணி மாநில செயலாளர் பள்ளப்பட்டி எம்.கே.முஹம்மத் யூனுஸ், தூத்துக்குடி மாவட்ட தலைவர் பீ.மீராசா மரைக்காயர் ஆகியோரை இந்நிகழ்ச்சிகளில் சிறப்பழைப்பாளர்களாகப் பங்கேற்க அழைத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 2 - திருவள்ளூர் பள்ளி கட்டுமானத்திற்கு நிதியுதவி:
திருவள்ளூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகளுக்காக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் 5 ஆயிரம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 3 - மாவட்ட பொதுக்குழுவில் 3 வேன்களில் சென்று பங்கேற்க முடிவு:
07.05.2015 வியாழக்கிழமையன்று மாலையில், தூத்துக்குடியில் நடைபெறும் - மாவட்ட நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், நகரின் அனைத்து வார்டு நிர்வாகிகள், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் 3 வேன்களில் சென்று பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - ரமழானுக்குப் பின் பொதுக்கூட்டம்:
காயல்பட்டினம் முழுக்க - வார்டு வாரியாக பிரச்சினைகள் குறித்து அலசி ஆராய்ந்து, அதன்படி ஊரின் பொதுவான கோரிக்கைகளை வடிவமைத்து, வரும் ரமழான் மாதத்தையடுத்து, காயல்பட்டினம் நகர கிளை சார்பில், வள்ளல் சீதக்காதி திடலில் மாபெரும் கோரிக்கைப் பொதுக்கூட்டத்தை நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. நகர பொருளாளர் எம்.ஏ.முஹம்மத் ஹஸன் நன்றி கூற, மவ்லவீ எஸ்.எஸ்.இ.காழி அலாவுத்தீன் ஆலிம் துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.A.இப்றாஹீம் மக்கீ
படங்களில் உதவி:
A.R.ஷேக் முஹம்மத்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[தலைப்பில் தேதி திருத்தப்பட்டது @ 22:01 / 03.05.2015] |