முன்னாள் நகர்மன்றத் தலைவர் நகராட்சிக்கு வழங்கிய சர்வே எண் 278 (காயல்பட்டினம் தென் பாக கிராமம்) இடத்தில - தற்போது பயோ காஸ் திட்டப் பணிகள், முறையான அனுமதிகள் எதுவும் பெறப்படாமல் நடைபெற்று வருகின்றன.
ஏப்ரல் 10, 2015 அன்று வரை இது குறித்த விண்ணப்பங்களை - அரசு துறைகளுக்கு, நகராட்சி சமர்ப்பித்து வந்துள்ள நிலையில், இப்பணிகளுக்கான பூமி பூஜை - மார்ச் 25 அன்று நடைபெற்ற செய்தியை காயல்பட்டணம்.காம் வெளியிட்டிருந்தது.
பூமி பூஜையை தொடர்ந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள், பணிகள் நடக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தாலும், சமூக ஆர்வலர் ஒருவர் பூமி பூஜை குறித்து - தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்த கேள்விக்கு, பூமி பூஜை நடக்கவில்லை என்ற பதில், காயல்பட்டினம் நகராட்சி சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
மார்ச் 25, புதனன்று காலை 10 மணியளவில் நடந்த பூமி பூஜை நிகழ்வில் - நகராட்சி ஆணையர் காந்திராஜ், நகராட்சி பொறியாளர் சிவகுமார், நகராட்சி பணிகள் மேற்பார்வையாளர் சுதாகரன், சுகாதார ஆய்வாளர் பொன்வேல் ராஜ், தொழில்நுட்ப உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணிப்புரியும் செந்தில் குமார், இப்பணிகளுக்கான டெண்டர் பெற்றுள்ள சேலத்தை சார்ந்த SK & CO நிறுவனத்தை சார்ந்தவர்கள் ஆகியோர் மட்டும் கலந்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
|