பயோ காஸ் திட்டத்திற்கும், நகரின் திடக்கழிவுகள் திட்டத்திற்கும் என முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யத் அப்துர் ரஹ்மான் -
காயல்பட்டினம் நகராட்சிக்கு, இரு பத்திரங்கள் வாயிலாக - 5.5 ஏக்கர் நிலம், அக்டோபர் 2014 இல்
வழங்கினார். ஒரு பத்திரம் வாயிலாக 4 ஏக்கர் நிலமும், மற்றொரு பத்திரம் வாயிலாக 1.5 ஏக்கர் நிலமும், வழங்கப்பட்டது.
சாலைகளுக்கு என வழங்கப்பட்ட 1.5 ஏக்கர் நிலத்தில் - இரு சாலைகள் அமையும் என அப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒரு சாலையின் அளவு கிழமேலாக 466 மீட்டர் (அகலம் 10 மீட்டர்) எனவும், இந்த சாலை - வாவு கதீஜா சாலை என்று அழைக்கப்படும் என்றும்
அப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மற்றொரு சாலையின் அளவு தென் வடலாக 140 மீட்டர் (அகலம் 10 மீட்டர்) எனவும், இந்த சாலை வாவு மொஹுதூம் சாலை என்று
அழைக்கப்படும் என்றும் அப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சாலையின் அளவீட்டை, திருச்செந்தூர் தாலுகா அலுவலகம் ஆரம்பத்தில் இருந்து ஏற்றுக்கொள்ளவில்லை என காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது. சாலைக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தினை தவிர்த்து - 4 ஏக்கர் நிலத்தினை மட்டும்
திருச்செந்தூர் தாலுகா ஏற்றுக்கொண்டு, சர்வே எண் 278 இடத்தை, உட் பிரிவு (278/1B) செய்திருந்தது.
இது தவிர, சாலைக்கு என ஒதுக்கப்பட்ட இடம் - துவக்கம் முதல், CRZ - 1 உட்பிரிவுக்குள் வருகிறது என்றும், CRZ - 1 உட்பிரிவு இடங்களில்,
சாலைகள் அமைக்க - CRZ NOTIFICATION 2011 தடை விதித்துள்ளது என்றும் காயல்பட்டணம்.காம் செய்தி
வெளியிட்டிருந்தது.
இந்த பகுதி வழியாக தான் சாலை அமைய உள்ளதாக, காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட
கேள்விக்கு, நவம்பர் 2014இல் பதில் வழங்கிய நகராட்சியும் தெரிவித்திருந்தது.
சர்வே எண் 278 இடத்தில சாலை வசதி குறித்த கேள்விகளுக்கான நகராட்சியின் பதில்
அப்பாதையில் சாலை அமைக்க - டிசம்பர் மாதம் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் - தீர்மானம் கொண்டு வர
ஆணையர் முயற்சி செய்தார். CRZ பகுதிக்குள் வரும் இவ்விடத்தில் சாலை அமைக்க, நகர்மன்றத் தலைவர் சம்மதம் தெரிவிக்காததால் அம்முயற்சி
கைவிடப்பட்டது.
இதற்கிடையே, டிசம்பர் 8 (2014) அன்று - மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம், சர்வே எண் 278 இடத்தில குப்பைகள் கொட்டிட அனுமதி கோரி,
நகராட்சி மனு செய்ததது. இந்த மனுவிற்கான பதில் பெறப்படுவதற்கு முன்னரே, டிசம்பர் 15 அன்று - பயோ காஸ் திட்டத்திற்கான வேலை
ஆணையை, இதற்காக குறைந்த ஒப்பந்தப்புள்ளி வழங்கியிருந்த SK & Co என்ற நிறுவனத்திற்கு, ஆணையர் வழங்கினார்.
ஜனவரி 7, 2015 அன்று நேரில் ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள், தேர்வு செய்யப்பட்டு இடத்தை நிராகரித்து, ஜனவரி 12 தேதிய கடித்ததை - ஆணையருக்கு அனுப்பினர்.
அதன் பிறகும், நகராட்சி மீண்டும் விண்ணப்பம் செய்யவே, அந்த விண்ணப்பத்தையும், திருநெல்வேலியில் உள்ள DTCP அமைப்பு பிப்ரவரி 19 அன்று திருப்பி அனுப்பியது.
இதனை தொடர்ந்து - மார்ச் மாத துவக்கத்தில், நகராட்சி நிர்வாகத்துறை மண்டல இயக்குனர் சீனி அஜ்மல் கான், மாவட்ட கடற்கரை மேலாண்மை
குழுமத்தின் (DISTRICT COASTAL ZONE MANAGEMENT AUTHORITY; DCZMA) தலைவரான மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பம் செய்து - பணிகளை
துவக்க நகராட்சி ஆணையருக்கு அறிவுறுத்தியுள்ளார் என தெரிகிறது.
CRZ வரைமுறை இடங்களில் உள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் கிடையாது. மேலும் பெறப்படும்
விண்ணப்பங்களை, DCZMA - சென்னையில் உள்ள மாநில கடற்கரை மேலாண்மை குழுமத்திற்கு (STATE COASTAL ZONE MANAGEMENT AUTHORITY; SCZMA) பரிந்துரையோடு மட்டும் அனுப்பி வைக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 9 அன்று - CRZ வரைமுறைக்குள் சர்வே எண் 278 இடம் வருகிறதா என கண்டறிய, நகராட்சி சார்பாக - அண்ணா பல்கலைக்கழகத்திற்கு,
கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் - முன்னாள் நகர்மன்றத் தலைவர் சாலைக்கு என தந்த 1.5 ஏக்கர் நிலத்தை காண்பிக்காமல், மீதி 4 ஏக்கர்
நிலத்தை மட்டும் காண்பித்து (278/1B), அவ்விடம் CRZ வரைமுறைக்குள் வருகிறதா என்ற ஆய்வறிக்கை கோரப்பட்டிருந்தது.
அக்கடிதத்திற்கு மார்ச் 18 அன்று பதில் வழங்கிய அண்ணா பல்கலைக்கழகம் - ஆய்வுகள் மேற்கொள்ள, கட்டணமாக ஏறத்தாழ சுமார் 2 லட்சம்
ரூபாய், நகராட்சியினை செலுத்த கூறியது.
மற்றொரு புறத்தில் - மார்ச் 24 அன்று மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு குப்பைகள் கொட்ட அனுமதி கோரி - நகராட்சி - கடிதம் எழுதியது.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் மார்ச் 24 நகராட்சி சமர்ப்பித்திருந்த விண்ணப்பத்திற்கு - மார்ச் 30 அன்று - பதில் வழங்கிய அதன் மாவட்ட பொறியாளர், DTCP அமைப்பிடம் - நிலப்பயன்பாடு சான்றிதழ் பெறவும், DTCP அறிவுறுதியப்படி அண்ணா பல்கலைக்கழக சான்றிதழ் பெறவும் கூறியிருந்தார்.
இந்த விண்ணப்பங்கள் / ஆய்வு கோரிக்கைகள் நிலுவையில் இருக்கும் நிலையிலேயே, மார்ச் 25 அன்று - எந்த அரசு துறையின் அனுமதியும்
பெறாமல், ரகசியமான முறையில், பணிகளை நகராட்சி ஆணையர் காந்திராஜ், சர்வே எண் 278இல்
துவக்கினார்.
நகராட்சி மூலமாக தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் - முன்னாள் நகர்மன்றத் தலைவர் சாலைக்கு என தந்த சர்ச்சைக்குரிய இடத்தினை
காண்பிக்கவில்லை. அந்த இடத்தினை நகராட்சி விண்ணப்பங்களில் மறைத்துள்ளது மூலம், சட்டத்திற்கு புறம்பாக CRZ 1 பகுதியில் சாலைகள்
அமைத்து, சுமார் 10 ஏக்கர் நிலத்தினை, சட்ட வரைமுறைக்குள் கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சி கைவிடப்பட்டதாக தெரிகிறது.
இந்த திட்டத்திற்கான சாலையின் நிலை என்ன? முன்னாள் நகர்மன்றத் தலைவர் வழங்கிய இடத்தில் இனி சாலை வராது என்றால், வேறு எந்த
வழியாக சர்வே எண் 278/1B இடத்தை அடைய முடியும்? (பார்க்கவும்: பயோ காஸ் திட்டம்: பாதை இல்லாத
பயணம்?)
இக்கேள்விகளுக்கான பதில் - தனது விண்ணப்பத்துடன் நகராட்சி சமர்ப்பித்துள்ள FMB வரைப்படத்தில் மறைந்துள்ளது.
நகராட்சி சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைப்படம்
இந்த வரைப்படத்தில், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சாலைக்கு என வழங்கிய 1.5 ஏக்கர் நிலம் காண்பிக்கப்படாமல், சர்வே எண் 278 இடத்திற்கு
மேற்கே வண்டிப்பாதை (Cart Track) உள்ளதாக காண்பிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதை, நகராட்சியின் பயோ காஸ் திட்டம் மற்றும் திடக்கழிவு திட்ட அறிக்கைகளில் (PROJECT REPORTS) இருந்ததா? இப்பாதைக்கு
- தீர்மானம் மூலம் - நகராட்சி அனுமதி வழங்கியதா? இந்த வண்டிப்பாதை எந்தெந்த தனியார் சர்வே எண்கள் வழியாக செல்கிறது? போன்ற கேள்விகள் எழுந்தாலும் -
அடிப்படையான மற்றொரு கேள்வியும் எழுகிறது.
உண்மையிலேயே - வருவாய் துறை ஆவணங்களில், சர்வே எண் 278 இடத்திற்கு மேற்கில் வண்டிப்பாதை உள்ளதா?
|