காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
50ஆம் ஆண்டு பொன்விழா சுற்றுப்போட்டிகள் நேற்று (மே 06 புதன்கிழமை) 16.50 மணியளவில், ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் துவங்கியது.
அண்மையில் காலமான - ஐக்கிய விளையாட்டு சங்க அங்கத்தினரான ஓ.ஏ.அஹ்மத் ஸாஹிப், பாக்கவீ பஷீர், எம்.எச்.முஹம்மத் சுலைமான், பி.மஹ்மூத் நெய்னா ஆகியோர் மறைவுக்கு துவக்கமாக இரங்கல் தெரிவிக்கும் வகையில், அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தமிழக அரசின் தொழிற்சாலைகள் மற்றும் வணிகத்துறை முன்னாள் முதன்மைச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஆட்சியருமான ஸ்வரண்சிங் ஐ.ஏ.எஸ். கொடியசைத்து முதல் போட்டியைத் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு கால்பந்துக் கழக தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கால்பந்துக் கழக தலைவருமான ஜேசையா வில்லவராயர், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் போட்டியில், தமிழ்நாடு கால்பந்துக் கழகம் - சென்னை அணியும், கேரள மாநிலம் கோவளம் கால்பந்துக் கழக அணியும் மோதின.
ஆட்டத்தின் முதல் பாதியில், 23ஆவது நிமிடத்தில் கோல் காப்பு எல்லைக்குள் - கோவளம் வீரர் சாம்ஸன் சென்னை வீரரின் காலைத் தட்டி விடவே, நடுவர் அவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்து, சென்னை அணிக்கு பெனாலிட்டி (ஃப்ரீ கிக்) வாய்ப்பு கொடுக்க, அதை சரியாகப் பயன்படுத்திய சென்னை வீரர் காழி அலாவுத்தீன் (காயல்பட்டினம்) முதல் கோலை அடித்தார். இரண்டாவது பாதியில் 5 கோல்கள் சென்னை அணி வீரர்களால் அடிக்கப்பட்டன.
51ஆவது நிமிடத்தில் ஜெபகுமார், 59ஆவது நிமிடத்தில் எட்வின், 68 மற்றும் 87ஆவது நிமிடங்களில் ரீகன், 82ஆவது நிமிடத்தில் கார்த்திக் ஆகிய சென்னை வீரர்கள் தமதணிக்காக கோல்களை அடித்தனர். ஆட்டத்தின் நிறைவில், தமிழ்நாடு கால்பந்துக் கழகம் - சென்னை அணி, 6-0 என்ற கோல் கணக்கில், கோவளம் கால்பந்துக் கழக அணியை வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இன்று (07.05.2015 வியாழக்கிழமை) மாலை நடைபெறும் போட்டியில், நேற்று வெற்றிபெற்ற தமிழ்நாடு கால்பந்துக் கழகம் - சென்னை அணி, ஊட்டி வெலிங்டன் எம்.ஆர்.சி. அணியுடன் மோதவுள்ளது.
ஆட்டத்தின் இடைவேளையில், பாண்டு வாத்தியங்கள் முழங்க, ஐக்கிய விளையாட்டு சங்க வீரர்களின் கொடி அணிவகுப்புடன் சுழற்கோப்பை மைதானத்தைச் சுற்றி கொண்டு வரப்பட்டது. பெவிலியனில், சிறப்பு விருந்தினர் மற்றும் முன்னிலை வகித்தோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர்.
பின்னர், ஈரணி வீரர்களும் சிறப்பு விருந்தினருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். நிறைவில் அனைவரும் குழுப்படமும் எடுத்துக்கொண்டனர்.
துவக்கப் போட்டியை, நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்து பார்த்து ரசித்தனர்.
நடப்பாண்டு கால்பந்துப் போட்டி குறித்த முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கனமழை காரணமாக, கடந்தாண்டு (2014) ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் மழை நீர் தேங்கியிருந்ததால், துவக்கப்போட்டி மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடைபெற்றது. அப்போட்டியில் மட்டும் ரசிகர்கள் நுழைவுக் கட்டணமின்றி அனுமதிக்கப்பட்டனர். அதுகுறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[பின்வருவன கோப்புப் படங்கள்!]
|