இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்ற - ஐக்கிய அரபு அமீரகம் அபூதபீ காயல் நல மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில், விடைபெறும் தலைவருக்கு பிரியாவிடையளிக்கப்பட்டதுடன், புதிய தலைவர், துணைத்தலைவர்கள், செயலாளர் ஆகிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள நிகழ்வறிக்கை:-
முதல் அமர்வு:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது அபூதபீ காயல் நல மன்றத்தின் 6ஆவது பொதுக்குழுக் கூட்டம் இஃப்தார் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, இம்மாதம் 25ஆம் நாளன்று (ரமழான் பிறை 8 வியாழக்கிழமை) 18.45 மணியளவில், அபூதபீ ஸலாம் தெரு, அல்பிர்தௌஸ் டவர் (National Bank of Fujaira and Takreer) 3ஆவது மாடியில் அமைந்துள்ள "அரபு உடுப்பி" [ARAB UDUPI]யின் பேன்குவெட் ஹாலில் [Banquet Hall] மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர்ரஹ்மான் மஹ்ழரீ தலைமையில், கவுரவ தலைவர் ஐ.இம்தியாஸ் முன்னிலையில் நடைபெற்றது. சிங்கப்பூர் காயல் நல மன்ற பொருளாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
துணைத்தலைவர் எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்த, ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். அழைப்பையேற்று இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த மன்றத்தின் நிர்வாகக் குழு, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள், அனைவரையும், மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ வரவேற்றுப் பேசினார்.
ஆண்டறிக்கை:
மன்றச் செயல்பாடுகளை விளக்கும் ஆண்டறிக்கை மற்றும் நடப்பாண்டின் வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றச் செயலாளர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை சமர்ப்பிக்க, கூட்டம் அதற்கு ஒருமனதாக ஒப்புதளித்தது..
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி:
ஹாஃபிழ் எஃப்.ஷாஹுல் ஹமீத் மஃரிப் அதான் சொல்ல, தொடர்ந்து இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மஃரிப் தொழுகைக்கான இடைவேளையுடன் முதல் அமர்வு நிறைவுற்றது.
காயல்பட்டினம் பாரம்பரிய முறைப்படி கறிகஞ்சி, பழ வகைகள், வடை வகைகளுடன் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கஞ்சி தயாரித்து வழங்கிய கவுரவ தலைவர் ஐ.இம்தியாஸ் அஹ்மத், இஸ்மாஈல் ஆகியோருக்கும், இஃப்தார் விருந்துக்கு அனுசரணை வழங்கிய சகோதரர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இரண்டாம் அமர்வு:
19.40 மணிக்கு, இரண்டாம் அமர்வு துவங்கியது.
தலைமையுரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ தலைமையுரையாற்றினார்.
அனைவரையும் வரவேற்று தனதுரையைத் துவக்கிய அவர், மன்றச் செயல்பாடுகளில் உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் கூடிய ஈடுபாட்டைப் பாராட்டியும் - ஒற்றுமையின் அவசியம் குறித்து வலியுறுத்தியும் பேசினார்.
உறுப்பினர்களின் தாராள உதவியால்,
நமதூர் இறையில்லங்களில் பணிபுரியும் இமாம் - முஅத்தின்களுக்கு பெருநாள் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்,
வறுமை நிலையிலிருக்கும் நமதூர் மக்களுக்கு உதவும் ரமழான் உணவுப் பொருள் வழங்கும் திட்டம்,
இக்ரா மூலம் ஏழை மாணவ/மாணவியருக்கான கல்வி உதவி திட்டம்,
ஷிஃபா மூலம் மருத்துவ உதவி
போன்ற திட்டங்களை விவரித்து, அவற்றில் மன்றத்தின் பங்களிப்புகளையும் விளக்கினார்.
மன்றத்தின் வளர்ச்சி, உறுப்பினர்களின் ஒற்றுமை, சந்தா தொகையை நிலுவையின்றி செலுத்தல் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியே அவரது உரை முழுக்க அமைந்திருந்தது.
விடைபெறும் தலைவருக்குப் பிரியாவிடை:
தன் சொந்தத் தேவை காரணமாக தாயகம் திரும்பவிருக்கும் மன்றத் தலைவருக்கு, பிரியாவிடையளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தலைவரின் நற்பண்புகள் - சேவைகளைப் பாராட்டியும் - நினைவுகூர்ந்தும் எஸ்.ஏ.சி.ஷாஹுல் ஹமீத் உரையாற்றியதோடு, அவரது வருங்கால வாழ்வு சிறக்கவும், சமூக நலப்பணிகள் தொடரவும் வல்ல அல்லாஹ்விடம் பிராத்தித்து உரையை நிறைவு செய்தார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
மன்றத்தின் புதிய நிர்வாகிகளது பெயர்களை விடைபெறும் தலைவர் முன்மொழிய, மன்றத்தின் கவுரவ தலைவர் ஐ.இம்தியாஸ் அஹ்மத் வழிமொழிய, அனைத்து உறுப்பினர்களின் தக்பீர் முழக்கத்துடன் கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
தலைவர்:
வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை
துணைத் தலைவர்கள்:
(1) எஸ்.ஏ.சி. ஷாகுல் ஹமீத்
(2) சுப்ஹான் என்.எம். பீர் முஹம்மத்
பொதுச் செயலாளர்:
எம்.மக்பூல் அஹ்மத்
இதர பொறுப்புகளில், ஏற்கனவே உள்ள நிர்வாகிகளையே தொடர்ந்து நீடிக்கச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
நினைவுப் பரிசு:
விடைபெறும் தலைவருக்கு, மன்றத்தின் கவுரவ தலைவர் ஐ.இம்தியாஸ் அஹ்மத், புதிய தலைவர் வி.எஸ்.டி.ஷேக்னா லெப்பை, துணைத்தலைவர்கள் எஸ்.ஏ.சி. ஷாஹுல் ஹமீத், சுப்ஹான் என்.எம்.பீர் முஹம்மத், பொதுச் செயலாளர் எம்.மக்பூல் அஹ்மத், பொருளாளர் எம்.ஓ.அன்ஸாரீ ஆகியோரினைந்து நினைவுப் பரிசு வழங்கி கண்ணியப்படுத்தினர்.
தாயகம் திரும்பிய பிறகும், மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பளிக்குமாறு அனைவரும் கேட்டுக்கொண்டனர்.
மன்றத்தின் 6 மாத கால நகர்நலப் பணிகள்:
ஜனவரி 2015 முதல் ஜூன் 2015 வரை மன்றம் மற்றும் தனி நபர் அனுசரணை மூலம் ரூபாய் 4,10,500 [நான்கு லட்சத்து பத்தாயிரத்து ஐநூறு] தொகையைக் கொண்டு, அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கீழ்க்கண்ட நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:-
இமாம், முஅத்தின் நிதி கூடுதலாக மொத்தம் ரூ 55,000 உதவி:
பெருநாளை முன்னிட்டு, நகர பள்ளிவாசல்களின் இமாம் - முஅத்தின்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வகைக்காக மன்றத்தின் சார்பில் 25 ஆயிரம் ரூபாய், தனிநபர் அனுசரணையில் 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 55 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
51 பேருக்கு ரமழான் சமையல் பொருளுதவி:
வழமைபோல நடப்பு ரமழான் மாதத்திலும், நகரிலுள்ள ஏழை - எளிய குடும்பங்களுக்கு அத்தியாவசிய சமையல் பொருளுதவி வழங்கப்பட்டுள்ளது. மன்றம் மற்றும் தனிநபர்களின் அனுசரணையுடன், மொத்தம் 51 பேருக்கு, ரூபாய் 1 லட்சத்து 32 ஆயிரத்து 500 தொகையில் இப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
மருத்துவ உதவி:
மருத்துவ உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மன்றத்தின் மருத்துவக் குழுவால் பரிசீலிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்ட விண்ணப்பங்களுக்காக மொத்தம் 78 ஆயிரம் ரூபாய் - ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஷிஃபா வருடாந்திர நிர்வாகச் செலவின வகைக்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இக்ராஃ மூலம் கல்வி உதவித்தொகை:
நடப்பு 2015-2016 கல்வியாண்டில், இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் - ஏழை மாணவ-மாணவியர் கல்வி உதவித்தொகை வகைக்காக 30 ஆயிரம் ரூபாய் தொகையும், இக்ராஃ வருடாந்திர நிர்வாகச் செலவின வகைக்காக 12 ஆயிரம் ரூபாய் தொகையும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
இதர உதவிகள்:
அவசர நிதியுதவியாக ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. ஜகாத் நிதியிலிருந்து 32 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
மன்றத்தின் நகர்நல உதவித் திட்டங்கள் இவ்வாறாக நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்ட நிறைவு:
மன்றத்தின் மக்கள் தொடர்ப செயலாளர் ஏ.ஆர்.ரிஃபாய் - இதுநாள் வரை மன்றத்தின் நகர்நலப் பணிகளுக்காக உளமார சேவையாற்றியமைக்காக - விடைபெறும் தலைவருக்கும், கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார். மவ்லவீ ஹாஃபிழ் நஹ்வீ எஸ்.ஏ.இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ இறை வேண்டுதலோடு பொதுக்குழுக் கூட்ட நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.
பஃபே முறையில் இரவுணவு:
பஃபே முறையில் இரவுணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற உறுப்பினர்களும், குடும்பத்தினரும் திரளாகக் கலந்து சிறப்பித்தனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இஃப்தார் மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தின் அனைத்து நிகழ்வுகளையும் https://picasaweb.google.com/117783117264538740964/KWAADGBMJune252015#slideshow/6164372637626872946 என்ற இணைப்பில் சொடுக்கி, படத்தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபூதபீ கா.ந.மன்றம் சார்பாக...
தகவல்:
M.E.முகியதீன் அப்துல் காதர்
(செய்தி & ஊடகத்துறை பொறுப்பாளர்)
செய்தியாக்கம்:
A.R.ரிஃபாய்
மக்கள் தொடர்பு செயலர்
படங்கள்:
சுப்ஹான் N.M.பீர் முஹம்மத்
(துணைத் தலைவர்)
அபூதபீ காயல் நல மன்றம் சார்பில் கடந்தாண்டு இஃப்தார் நிகழ்ச்சியுடன் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றத்தின் முந்தைய (5ஆவது) பொதுக்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
அபூதபீ காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[கூடுதல் விபரம் இணைக்கப்பட்டது @ 13:40 / 05.07.2015] |