சகல வசதிகளுடன் கூடிய பெரிய ஆம்புலன்ஸ் வாங்கப்பட்டுள்ளதாகவும், வரும் நோன்புப் பெருநாளையடுத்து, காயல்பட்டினம் நகர கிளையின் சார்பில் மக்கள் சேவைக்காக அது அர்ப்பணிக்கப்படவுள்ளதாகவும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இஃப்தார் நிகழ்ச்சி, இம்மாதம் 05ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், காயல்பட்டினம் எல்.கே.லெப்பைத்தம்பி சாலையிலுள்ள தமுமுக நகர கிளை அலுவலக மேல் மாடியில், நகர செயலாளர் ஆஸாத் தலைமையில் நடைபெற்றது.
நோன்பு துறக்க அனைவருக்கும் பேரீத்தம்பழம், பழ வகைகள், வடை வகைகள், நோன்புக் கஞ்சி, குளிர்பானம் ஆகியன பரிமாறப்பட்டன.
இஃப்தார் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற அமர்வில், தமுமுக நகர துணைச் செயலாளர் ஜாஹிர் ஹுஸைன், மருத்துவ அணி செயலாளர் மஸ்ஊத், மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ஐதுரூஸ், அதன் துணைச் செயலாளர் காதர், தமுமுக மாவட்ட செயலாளர் யூஸுஃப், மாவட்ட பொருளாளர் ஷாஹுல் ஹமீத், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஆஸாத், மாவட்ட துணைச் செயலாளர் முஹ்ஸின் முர்ஷித் ஆகியோர் பேசினர். மருத்துவ அணி மாநில செயலாளர் கிதுரு சிறப்புரையாற்றினார்.
தமுமுக காயல்பட்டினம் நகர கிளை சார்பில் ஏற்கனவே உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனைத்து சமுதாய மக்களுக்கும் இதுநாள் வரை செய்யப்பட்டு வந்த சேவைகள் குறித்து விளக்கிப் பேசிய அவர்கள், சுமார் 8 ஆண்டுகள் மக்கள் சேவைக்காகப் பயன்படுத்தப்பட்ட இந்த வாகனம் தேய்மானம் கண்டுள்ளதால், சகல வசதிகளுடன் கூடிய பெரிய ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டு, உட்கட்டமைப்புப் பணிகளுக்காக கோயமுத்தூரில் உள்ளதாகவும், வரும் நோன்புப் பெருநாளையடுத்து, நகர தமுமுக சார்பில் அது முறைப்படி மக்கள் சேவைக்காக அர்ப்பணிக்கப்படவுள்ளதாகவும் இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நகர பொருளாளர் எஸ்.டீ.செய்யித் இப்றாஹீம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிகளில் தமுமுக மற்றும் மமக மாவட்ட - நகர நிர்வாகிகளும், அங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
தகவல்:
ஜாஹிர் ஹுஸைன்
(APT ஆட்டோஸ்)
தமுமுக தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |