காயல்பட்டினத்தின் கொச்சியார் தெரு முதல் பேருந்து நிலையம் வரையிலான தென்பகுதியிலும், வட பகுதியின் சில தெருக்களிலும் ஜூலை 07 செவ்வாய்க்கிழமையன்று 22.45 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, தாயிம்பள்ளி உள்ளிட்ட சில பகுதிகளில் மின் வினியோகக் கம்பி வடங்கள் ஒரே நேரத்தில் திடீரென அறுந்து விழுந்ததே இதற்குக் காரணம் என அறியப்பட்டது.
தகவலறிந்து, காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளர் உத்தரவின் பேரில், மின்வாரிய அலுவலகத்தில் பணியிலிருந்த ஊழியர்களுடன், நகரைச் சுற்றி பல்வேறு ஊர்களிலும் ஓய்விலிருந்த ஊழியர்களும் இணைந்து, போர்க்கால அடிப்படையில் பழுது நீக்கும் பணியைச் செய்தனர்.
பரிமார் தெரு ட்ரான்ஸ்ஃபார்மர், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரி அருகிலுள்ள மின் கம்பம், தாயிம்பள்ளியையொட்டி மூப்பனார் ஓடை சாலையில் அமைந்துள்ள மின்கம்பம் உள்ளிட்டவற்றில் பழுது நீக்கும் பணி மும்முரமாக நடைபெற்று முடிந்ததையடுத்து, ஜூலை 08 புதன்கிழமை 02.45 மணியளவில் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது.
போதிய வெளிச்சமில்லாதிருந்ததால், இரு சக்கர வாகனத்தைச் சரிந்த நிலையில் கிடத்தி, அதன் விளக்கொளி துணையுடன் பழுது நீக்கும் பணி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.கே.முஹம்மத் முகைதீன், எஸ்.எம்.பி.பத்ருல் ஹக், துணைத்தலைவர் எஸ்.எம்.முகைதீன், எஸ்.ஏ.சாமு ஷிஹாபுத்தீன் உள்ளிட்டோரும், சமூக ஆர்வலர்களும் பழுது நீக்கும் பணியில் துணை நின்றனர்.
பொதுமக்களின் அவதியைக் கருத்திற்கொண்டு, தமது ஓய்வைக் கூட பொருட்படுத்தாமல் நள்ளிரவிலும் உடனடியாக நிகழ்விடம் வந்து பழுது நீக்கும் பணியைச் செய்த மின்வாரிய ஊழியர்களுக்கு, மின்தடையால் பாதிக்கப்பட்டிருந்த பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சிப் பெருக்குடன் நன்றி கூறினர்.
மின் வாரியம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |