சவூதி அரேபியா-ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 88-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை:-
முதலாவது அமர்வு:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 88-வது செயற்குழு கூட்டம் கடந்த 03.07.2015 ரமலான் பிறை 16 வெள்ளிக்கிழமை மாலை 06:00 மணியளவில் ஜித்தா – ஷரஃபிய்யாவில் அமைந்துள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடந்தேறியது.
இக்கூட்டதிற்கு மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்க, சகோ. அல்ஹாபிழ் பொறியாளர் எம்.ஐச்.முஹம்மது அலி இறைமறை ஓத, சகோ. பொறியாளர் எம்.எம். முஹம்மது முஹியத்தீன் அனைவரையும் அகமகிழ வரவேற்க கூட்டம் ஆரம்பமானது.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த மே மாதம் இறுதியில் நடைபெற்ற யான்பு செயற்குழு கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகள் மற்றும் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட யான்பு வாழ் உறுப்பினர்கள் , இதனை நல்லமுறையில் ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் ஜித்தாவில் இருந்து வந்து பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்தும், மன்ற செயல்பாடுகள், தீர்மானங்கள் அதன் நிமித்தம் நடேந்தேறிய பணிகள் மற்றும் இதர தகவல்களை விபரமாக தந்தார் மன்றச்செயலர் சகோ சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
தலைவர் உரை:
சமீபத்தில் விடுப்பில் தாயகத்திலிருந்த சமயம் உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பான “இக்ரஃ” வில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட செய்திகள், நம் மன்றத்தின் பல நல்ல நோக்கங்கள் இறையருளால் இனிதே நிறைவு பெற்று வருவதும், வழமையான உதவிகள் அல்லாது இன்னும் பல உதவிகளை நம் மன்றம் செய்து வருவதும், நம் மன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆடைகளை கார்கோ மூலம் நம் தாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதும், அது கிடைக்கப்பெற்றதும் நம் ஊரில் தேவையுடயவர்களுக்கு அவைகளை வழங்க முன்னேற்பாடு செய்துள்ளதும் மேலும் இந்த புனிதமிகு ரமலானில் நம் மன்ற உறுப்பினர்கள் சதக்கா, ஜகாத் தர்மங்களை வழங்கிடுமாறும் அல்லாஹ் நமக்கு வழங்கிய ஒரு நல்ல வாய்ப்பை நாம் பயன்படுத்திக்கொள்வோமாக என்றும் மன்றப்பணிகளின் செயல்பாடுகள் குறித்து விபரமாக எடுத்துச்சொன்னார் மன்றத்தலைவர் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன்.
இஃப்தார் நோன்பு துறப்பு:
காயலின் சுவைமிகு கறிகஞ்சி,கடலை,பழங்கள் மற்றும் பொரியல்களுடன் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் நோன்பு திறந்து வல்லோன் இறைவனை போற்றி புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தபட்டது. தொடர்ந்து மஃரிப் தொழுகையை கூட்டாக நிறைவேற்றியும் பின்னர் சுவைமிகு காயல் தேநீர் பரிமாறப்பட்டது.
இரண்டாவது அமர்வு:
மன்றச்செயலர் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் புனித ரமலான் நினைவுகளை பகிர்ந்ததோடு மேலும் நம் காயல் நகர் இறை இல்லங்களில் இறைப்பணியாற்றும் இமாம் முஅத்தீன்களின் இன்றைய நிலைமைகள் அவர்களது நல்ல தேவைகளுக்கும் நாம் முன் வந்து உதவ வேண்டிய அறப்பணிகள் குறித்தும் இதற்காக நாம் எவ்வளவு வழங்கினாலும் தகும் எனவும் மற்றும் இம்மன்றம் இதுவரை வழங்கிய உதவிகள், நிறைவேற்றிய பணிகள் குறித்த தெளிவான பார்வையை செய்தியாக தந்தார்.
நிதி நிலை:
மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கிடு , சந்தா மற்றும் நன்கொடைகளின் வரவு மற்றும் இருப்பு விபரங்களை பட்டியலிட்டார் பொருளாளர் சகோ. எம். எஸ். எல். முஹம்மது ஆதம்.
மருத்துவ நிதி உதவி:
“ஷிஃபா” மருத்துவ கூட்டமைப்பு மூலம் மருத்துவ உதவி வேண்டிவந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வாசிக்கப்பட்டு மன்றத்துணைத்தலைவர் சகோ.மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் புற்று நோய், இருதயம், கர்ப்பப்பையில் கட்டி, எலும்பு, மூட்டுவலி, கிட்னி, பிசியோதிரபி மற்றும் கண்புரை அறுவை என பலதரப்பட்ட பிணியால் பாதிக்கப்பட்டுள்ள பன்னிரண்டு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவு செய்து, அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறையிடம் பிரார்த்திக்கப்பட்டது.
பிரார்த்தனை:
புண்ணியமிகுந்த இந்த ரமலான் மாதத்தில் உயர்ந்த பணிகளுக்காக நாமெல்லாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். நம்மை இங்கு சந்திக்க வைத்த அல்லாஹ்வை போற்றி புகழும் இந்நேரத்தில் இச்சிறப்பான மாதத்தில் நம் மன்றத்தின் அனைத்து நற்பணிகளையும், நம்மின் நல்லமல்களையும் வல்லவன் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவும்; பிணியுற்றோர் சுகம் பெறவும், வறியோர் வளம் பெறவும், நோயற்ற ஊராக நம் நகரை தந்திடவும், மறுமையில் அவன் அருளை பெற்றிடவும் நாம் இறையிடம் இருகரமேந்துவோம் என்று கூட்டத்தில் கலந்துகொண்டோர் அனைவரின் பிரார்த்தனையாக இருந்தது.
யான்பு சகோதரர்கள்:
யான்பு நகரிலிருந்து துணை செயலாளர் சகோ.கலவா எம்.ஏ.செய்யது இப்ராஹீம் தலைமையில் நம் காயல் சொந்தங்கள் வருகை தந்து செயற்குழுவில் கலந்து சிறப்பித்தார்கள். பெறப்பட்ட மனுக்களின் பரிசீலனை, அதற்கு முறைப்படி வழங்கும் உதவிகள், கருத்துபரிமாற்றங்கள் இவைகளை நேரடியாக கண்டு தங்களது பங்களிப்பை தந்துதவினார்கள்.
நம் நகர் அனைத்து இறைஇல்லங்களில் பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு தாய்லாந்து காயல் நல மன்ற வழிகாட்டல்படி அளிக்கப்படும் இரு பெருநாள்கள் \சிறப்பு உதவியில் நம் மன்றத்தின் பங்களிப்பாக மன்ற உறுப்பினர்கள் மனமுவந்து தாராளமாக அளித்த நிதியில் இருந்து இவ்வாண்டு ரூபாய் ஒரு லட்சம் மன்றம் மூலம் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டும் உடனடியாக உள்ளூர் பிரதிநிதி மூலம் ஊரில் கையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நம் மன்றத்தின் 34-ஆவது பொதுக்குழு கூட்டம் ஈகைத்திருநாள் சந்திப்பாகவும் மற்றும் காயலர் சங்கம நிகழ்வாகவும் ' இஸ்திராஹா ' எனும் ஓய்வு இல்லத்தில் வைத்து வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் நடத்திட நாடியுள்ளதும் இதற்கான அனைத்து ஏற்பாடுகளை நல்ல முறையில் செய்தும் இதன் முழு விபரங்களை இன்ஷா அல்லாஹ் உறுப்பினர்கள் அனைவருக்கும் உடன் அறிய தருவதாயும் முடிவு செய்யப்பட்டது.
நன்றி உரை:
இச்செயற்குழுவில் கலந்து சிறப்பித்தவர்கள் மற்றும் யான்புவில் இருந்து வந்திருந்த உறுப்பினர்கள், மேலும் அனுசரணை வழங்கினோர்கள் யாவருக்கும் சகோ எம்.டபிள்யூ. ஹாமீத் ரிபாய் நன்றிகளை கூறினார். சகோ பிரபு,எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
இனிய இந்நிகழ்வின் இறுதியில் காயலின் மணம் மாறா நெய்ச்சோருடன் , களரிகறி மற்றும் தைக்கா சம்பலுடன் சகர் நேர உணவிற்காக பொதியாக அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் மற்றும் சகோ. வேனா எஸ்.எஸ்.அஹமது சித்தீக் ஆகியோரின் முழு அனுசரணையில் நடந்தேறியது.
தகவல்:
எஸ்.ஐச்.அப்துல் காதர் .
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
படங்கள்:
சட்னி , எஸ்.ஏ.கே.முஹம்மது உமர் ஒலி.
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
08.07.2015. |